இந்த மகத்தான எழுத்தாளரின் 107-வது பிறந்த தினத்தை கூகுள் டூடுல் நினைவு கூர்ந்து சிறப்பிக்கிறது!

உருது இலக்கிய ஆளுமை இஸ்லாம் பெண் எழுத்தாளரான இஸ்மத் சுக்தாய் இந்திய பாகிஸ்தான்
இந்த மகத்தான எழுத்தாளரின் 107-வது பிறந்த தினத்தை கூகுள் டூடுல் நினைவு கூர்ந்து சிறப்பிக்கிறது!

உருது இலக்கிய ஆளுமை இஸ்லாம் பெண் எழுத்தாளரான இஸ்மத் சுக்தாய் இந்திய பாகிஸ்தான் பிரிவினை காலகட்டத்தில் தீவிரமாக இயங்கி வந்தவர். உத்திரப்பிரதேசத்தில் உள்ள பதாயுன் எனும் ஊரில் 1915-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பிறந்த இஸ்மத் சுக்தாயின் 107-வது பிறந்த நாளை சிறப்பிக்கிறது கூகுள் டூடுல். அவரது காலகட்டத்தில் இயங்கிய எழுத்த்தாளரான சதத் ஹஸன் மண்டோவிற்கு சற்றும் குறைந்தவரல்ல சுக்தாய். அக்காலகட்டத்தில் நிலவி வந்த சமூக கலாச்சார மாற்றங்களையும் தமது எழுத்தின் மூலம் பதிவு செய்தவர்.

சிறந்த இலக்கியப் பணிக்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் (1976), தன்ஹாய் கா ஜஹர் என்ற நாடகத்திற்கு காலிஃப் விருதும் (1977), ஆந்திரப் பிரதேச உருது அகாதமியின் மக்தூம் இலக்கிய விருதும் (1979) இஸ்மத் சுக்தாய் பெற்றுள்ளார். 

1942-ல் வெளிவந்த ‘லீஹாப்” என்ற சிறுகதை இஸ்மத் சுகாயை கடும் விமரிசனத்துக்குள்ளாகியது. காரணம் அந்தக் கதை தான் முதன்முதலில் தன் பாலின விருப்பம் கொண்ட பெண்களைப் பற்றி துணிவாகப் பேசியது. இந்தக் கதையை மையமாக வைத்தே 1996-ம் ஆண்டு தீபா மேதா ஃபயர் என்ற திரைப்படத்தை இயக்கினார். அத்திரைப்படத்தில் ஷபானா ஆஸ்மி, நந்திதா தாஸ் நடித்துள்ளனர். அந்தக் காலகட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் மையக் கதைகளை தீவிரத்தன்மையுடன் படைத்தவர் இஸ்மத் சுக்தாய்.   அவரது புகழ்ப்பெற்ற சிறுகதை  தொகுப்புகள் ஏக்பாத் மற்றும் தோ ஹாத் ஆகியவை.

13 வயதில் நடக்க இருந்த திருமணத்தை மறுத்து கல்வியின் கரத்தை இறுகப் பிடித்த இஸ்மத் பின்னர் ஹாகித் லத்தீப் எனும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரை காதலித்து மணந்து கொண்டார். தொடக்கத்தில் ஆசிரியையாக பணிபுரிந்த இஸ்மத் சுக்தாய், எழுத்தின் நிமித்தம் வேலையை விடுத்து முழு நேர எழுத்தாளராக மாறினார். எண்ணற்ற கதைகளையும், நாடகங்களையும் எழுதி உருது இலக்கிய உலகில் மிகச் சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தார்.

அக்டோபர் 24, 1991-ம் ஆண்டு, தமது 76-வது வயதில் இஸ்மத் சுக்தாய் மும்பையில் காலமானார்.  

இஸ்மத் சுக்தாயின் சிறந்த ஆக்கங்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் எழுத்தாளர் ஜி.விஜயபத்மா. 'இஸ்மத் சுக்தாய் கதைகள்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அப்புத்தகத்தைப் பற்றிய சிறு அறிமுகம் இது.

உருது இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை விதைத்த பெண் எழுத்தாளர் இஸ்மத் சுக்தாயின் படைப்பில் வெளியான 24 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். வறுமையை மட்டுமே வாழ்க்கையில் சொத்தாகக் கிடைக்கப் பெற்ற இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சில பெண்களின் வலிகளும், வேதனைகளும்தான் பெரும்பாலான கதைகளின் கருப்பொருள்.

முகத்தை திரையிட்டு மறைத்து வாழும் எத்தனையோ பெண்களின் அகத்துக்குள் நடக்கும் அக்னி பிரவேசங்களை எழுத்தினூடே அழுத்தமாகக் கூறியிருக்கிறார் சுக்தாய். போர்வை என்றொரு கதையில், கணவரின் அன்பும், தாம்பத்யமும் கிடைக்காத ஒரு பெண், உளவியல்ரீதியாகவும், வாழ்வியல்ரீதியாகவும் அடையும் விசித்திரமான மாற்றங்கள் விரசமின்றி விவரிக்கப்பட்டுள்ளன. அதை ஒரு சிறுமியின் பார்வையில் பதிவு செய்திருப்பது வித்தியாசமான கோணம்.

திருமண உடை என்ற கதையில் தனது மகளின் கல்யாணத்துக்காக அழகான ஆடை ஒன்றைத் தைத்து வைக்கிறார் அவரது தாய். இறுதிவரை அப்பெண்ணுக்கு திருமணமும் ஆகவில்லை. அந்த உடையும் உபயோகப்படுத்தப்படவில்லை. அந்த ரணங்கள் அனைத்தையும் எழுத்தின் வாயிலாக கடத்துகிறார் நூலாசிரியர்.

இஸ்மத் சுக்தாய் கதைகள்- தமிழில்: ஜி.விஜயபத்மா; பக்.496; ரூ.500; எதிர் வெளியீடு, பொள்ளாச்சி ) 04259 - 226012.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com