தீபாவளி! மகிழ்ச்சி நன்றியுள்ளம் நிறைந்ததே தீப ஒலி ஒளி!

எங்கும் பொலிவூட்டும் பிரகாசமாக வண்ணங்களும், புத்தம் புதிய ஆடைகளும், பூத்துக் குலுங்கும் மலர்களும், கனிகளும் வீட்டு வாசலிலும்
தீபாவளி! மகிழ்ச்சி நன்றியுள்ளம் நிறைந்ததே தீப ஒலி ஒளி!

எங்கும் பொலிவூட்டும் பிரகாசமாக வண்ணங்களும், புத்தம் புதிய ஆடைகளும், பூத்துக் குலுங்கும் மலர்களும், கனிகளும் வீட்டு வாசலிலும், உள்ளேயும் வண்ண நிறக் கோலங்கள் அலங்கரிக்க, ஒலி மயமான பட்டாசுகளுடன் நெஞ்சார்ந்த சிரிப்பு, ஆர்வம், ஒளிவூட்டும் மகிழ்ச்சி நிரம்பியதே தீபாவளி!

பண்டிகைகள் பல இருந்தாலும் தீபாவளியின் தனித்தன்மையே எல்லா வயதினரும் இதன் வருகைக்காக ஆர்வத்துடன் காத்திருந்து, மிகுந்த ஈடுபாட்டுடன் ஏற்பாடுகள் செய்து கொண்டாடுவதுதான். இதுவா இல்லை அதுவா; இப்படியா, ஊம் அப்படியா என்று எல்லாருடன் ஆலோசனை பல வாரங்கள் நடந்து கொண்டிருக்கும், கொஞ்சமும் சலிப்பே தட்டாமல்!

இந்த ஒன்று கூடிச் செய்வது தீபாவளிக்கு மட்டுமே உரியது! வரும் நாட்களில், இந்த உணர்ச்சியை தக்க வைப்பது நம் கையில்!

தீபாவளியின் அழகு: ‘எனது’ என்பது அல்ல ‘நமது’ என்பதில் அடங்கும்!

தீபாவளி கொடுக்கும் சந்தர்ப்பங்கள், வாய்ப்புகள்

தீபாவளி பண்டிகை என்றாலே பகிர்ந்து கொள்வது. பெற்றுக் கொள்வதற்கு மேல் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் ஆனந்தம் இனிதே! நம் உறவினர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், நம் உதவியாளர்கள், நமக்கு என்று பணிபுரியும் அரசாங்க ஊழியர்கள் (போஸ்ட், சுற்றுச்சூழல் காப்போர்) என்ற பலருக்கும் நாம் தயாரித்த இனிப்பு - காரம் - தீபாவளி மருந்து, தாராளமாகப் பகிர்ந்து கொள்வோம். இந்த ஒரு நாள், நாம் அணியும் உடை போல், உண்ணும் உணவும் போல் மற்றவர்களுக்கும் இருந்தால் நல்லது என்று எண்ணி, தருவதும் வழக்கமான பழக்கமாகியது.

இப்படிப் பகிர்ந்து கொள்ள நாம் உறவினருடன் பல்வேறு இனிப்பு - காரமும், தீபாவளி மருந்தும் / லேகியம் செய்ய பல கைகள் சேருகையில், வகைகள் கூடுகின்றன. நேரம் போவது தெரியாமல் இப்படி ஒரு உல்லாசமான சந்தர்ப்பம் தீபாவளியின் தயாரிப்பினால் அமைகிறது. இப்படி, சேர்ந்து தயார் செய்வதில் பல நாட்கள் ஒன்று கூடும் தருணங்கள் நம்மை மேலும் ஒன்றிணைக்கும். ஒவ்வொரு தீபாவளிக்கும் இப்படி எல்லோரும் கூடி பல வகை பலகாரம் செய்து, பகிர்ந்து, ஒவ்வொருவரின் திறனை பார்த்து, கற்றுக் கொள்வதும், சரி செய்வதும், இதில் அடங்கும். இந்த ஒன்றுகூடுதல் தன் பங்குக்குச் சுவையை கூட்டி விடும்!

புதிய ஆடைகள் வாங்கித் தருவது இன்னும் ஒரு மன நிறைவு அளிக்கும். தீபாவளிக்காக நாம் நமக்கு வாங்கும் பொழுது இதில் தன்னலம் சேராது. மற்றவர்களுக்காக அவர்களுடன் சென்று ஆடைகள் எடுப்பதும் ஒரு சுகம். அதே போல், நம் வீட்டின் பெரியோர், சிறியோர்க்கு ஆடைகள் தேடி, பொருத்தமாக எடுத்து, அதைப் பார்த்து அவர்களின் புன்முறுவலில் நமக்குக் கிடைக்கும் மிகப் பெரிய சந்தோஷமே.

பட்டாசு வெடிக்கும் பொழுது, நம் சுற்றுச்சூழலை கருதிச் செய்தால், நம்முடன் வளரும் செடி, கொடி, மரம், விலங்குகளுக்குத் தெரிவிக்கும் மரியாதையும், அன்புமாகும். பட்டாசு சத்தம் சொல்லும், நம் இன்ப நிலையை. பட்டாசின் ஒலி போல் விளங்கும் அன்று முழுவதும் நம்முடைய உற்சாகமும், சிரிப்பும், பண்பும், அன்பும்.

கொடுக்க சந்தர்ப்பம்!

தீபாவளி வரும் பொழுது எல்லோருடனும் பகிர்ந்து கொள்வதால், சமநிலை மேலோங்கி இருக்கும். இதனால் தான், நாம் மனப்பூர்வமான சந்தோஷத்துடன் நம் வீட்டில் வேலை செய்வோருக்கும், நம் தொழிற்சாலையிலும், வேலை செய்யும் இடங்களில் எங்கும் உதவும் ஒவ்வொரு உதவியாளர்க்கும், வேறுபாடின்றி, புத்தாடைகள், இனிப்பு - காரம் இல்லா விட்டால் சில சமயங்களில் ஒரு மாத சம்பளம் அதாவது போனஸ், பட்டாசுடன் கொடுப்பதுண்டு. கொடுப்பவர்க்கும், வாங்குபவரின் உறவு இன்னும் கூடுகிறது. இந்த ஈர்ப்பு, நம்மை மற்றவர்கள் பற்றி சிந்தித்து செயல் செய்ய வைப்பது, தீபாவளியின் யுக்தியாகும்.

தீபாவளி என்றால் குடும்பத்தில் எல்லோரும் பங்கேற்று, ஏதேனும் ஒரு விஷயத்திருக்கு தாராளமாக நேரம் ஒதுக்குவார்கள் - மற்றவருடன் இணைந்து செயல்படவே! கொஞ்சமும் சலிக்காமல் நேரத்தை அள்ளிக் கொடுப்போம். அதே போல், தீபாவளிக்கு முன்னேற்பாடுகள் செய்யும் பொழுது பல வேலைகள் சேர்ந்தாலும், இந்தத் தீபாவளி வேலைக்கே முக்கியத்துவம் கூடும்.

தீபாவளி தினத்தன்று நம் கொண்டாட்டம் ஒரு பக்கம் இருந்து கொண்டே இருக்கும். அதே சமயத்தில், நாம் நம் குடும்பத்தினரை, உறவினரை, நண்பர்களை, கை நிறைய இனிப்புகளுடன் போய் வாழ்த்தி வருவோம். இத்துடன், குறுஞ்செய்தி, மற்றும் பல சமூக இணையத்தளத்திலும் பகிர்ந்து கொள்வோம்.

தீபாவளி: நன்றியுணர்வும் ஆசியும்

நாம் எல்லோருடன் கூடி, தயாரிப்பதும், பல பொருட்கள் வாங்குவதும், தீபாவளி வருவதற்கு பல வாரங்கள் முன்பே ஆரம்பமாகும். இதில் பளிச் என்று தெரிவது என்னவென்றால், இந்தப் பண்டிகையை நம்மையும் அறியாமலேயே ஒரு நன்றியுடைய பாவத்தில் நாம் அணிகிறோம் என்று. உதாரணத்திற்கு, நாம் உடை வாங்கும் பொழுது, நம் முதல் கவனம் ‘போன தடவை என்ன வாங்கினோம்? ஓகோ அது. சரி, அப்போது, இந்தத் தடவை இதை வங்கலாமே' என்று! ஏன் இப்படி அணுகுகிறோம்? சலிப்போ, மனவெறுப்போ இல்லாமல், பழகிப் போன வேலையாகக் கருதாமல், உற்சாகத்துடன் அணுகுகிறோம்.

மேலும், வருடம் பூராகவும் பலமுறை பலர் நமக்குத் தோள் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு இப்பொழுது நாம் திரும்பி “நன்றி” செலுத்தும் தருணம் இதுவே! இந்த உதவிகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இவர்கள் செய்திருப்பார்கள். நாம், நம் பங்குக்கு அந்த நல்ல எண்ணத்தைக் கொண்டாடவே நன்றி செலுத்துகிறோம்.

தீபாவளி கொண்டாட்டம், நாம் சேமித்தது என்னவென்று கணக்கெடுக்கும் நாளாகும். பொருட்கள் வாங்க, வழங்க பணம் ஒரு சேமிப்பு. வழங்குவதற்கு நாம் சேமித்த உறவுகள் முக்கியமாகும். நன்மை செய்ய துண்டுதலும் மனதின் சேமிப்பே. இந்த சேமிப்பின் சந்தோஷத்தை நாம் பகிர்ந்து கொள்வதிலும், சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும். அதே போல், நம்மைத் தேடி வரும் வாழ்த்துக்கள், நமக்கு இன்பத்தை உண்டாக்கும்.

நாம் எத்தனைப் பேரின்பத்தை பகிர்ந்து கொள்கிறோம் என்று விரல் விட்டு எண்ண எண்ண, இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போவதும் அழகே! இதில், நமக்குத் தெரிந்தவருக்கும் சரி, எங்கோ விடுதியில் தங்கும் நபர்களுக்கும் கூட நம் பொருட்களை பகிர்ந்து கொள்வது மன நிறைவு தரும். நாம் பகிர்ந்த பொருட்களால் அவர்களின் சந்தோஷம் நம் தீபாவளியின் ஒலி ஒளியைக் கூட்டி விடும் (இதுதான் நாம் வெகு துரத்தில் வானத்தில் பார்க்கும் பட்டாசுகளோ?). தீபாவளியன்று இந்தப் பண்டிகைக்கு ஏற்றாற் போல் பலரின் மன-விளக்கை ஏற்றி ப்ரகாசிப்போம்!

தீபாவளி அன்று செய்நன்றி (ஆங்கிலத்தில் gratitude) தெரிவிக்க நல்ல வாய்ப்பாகும். சந்தோஷம், சிறியதோ, பெரியதோ, அதை ஞாபகத்தில் வைத்து வாழ்த்துவது தீபாவளியின் இன்னும் ஒரு ஒலி ஒளியாகும்.

நாம் இப்படி மன நிறைவுடன் சந்தோஷமாக கூடி இருந்தால், நம் மூளை பல நிற பூங்கொத்து போல் பூத்துக் குலுங்கும் என்றும், நம் உடல்-மன நலம் கூடும் என்றும் விஞ்ஞானம் கூறுகிறது. நமக்கு, நம் கலாச்சார செய்முறையில் ஒரு அனுபவமாகக் கொடுத்திருப்பதே நமது இந்தத் தீபாவளி!

தீபாவளி, மகிழ்ச்சி் நன்றியுள்ளம் நிறைந்ததே தீப ஒலி ஒளி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com