அரசியல் நாகரிகம்... அது அந்தக் காலம்...: பண்ருட்டி ராமசந்திரன்

அரசியல் களத்தில் நீண்ட நெடிய  அனுபவம் கொண்டவர் பண்ருட்டி ராமசந்திரன். சூறாவளிப் பேச்சுகள் மூலம் மக்களை வசப்படுத்தும் தலைவர்களுக்கு நடுவே தென்றலைப் போல சாந்தமாகப் பேசி தனது
அரசியல் நாகரிகம்... அது அந்தக் காலம்...: பண்ருட்டி ராமசந்திரன்

அரசியல் களத்தில் நீண்ட நெடிய  அனுபவம் கொண்டவர் பண்ருட்டி ராமசந்திரன். சூறாவளிப் பேச்சுகள் மூலம் மக்களை வசப்படுத்தும் தலைவர்களுக்கு நடுவே தென்றலைப் போல சாந்தமாகப் பேசி தனது கருத்துகளை முன்வைப்பவர் இவர்.

முதல் தேர்தல் அனுபவம் பற்றி  கூறுங்கள் எனக் கேட்டபோது உற்சாகத்துடன்  தனது நினைவோடைக்குள் நம்மையும் அழைத்துச் சென்றார்...

1956-ஆம் ஆண்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பு பயின்று கொண்டிருந்தேன். அப்போதுதான் அண்ணாவை முதன் முதலில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அவரது தன்னிகரற்ற தமிழ் வளமும், தன்னலம் கருதாத பொது வாழ்க்கையும் என்னை வெகுவாக கவர்ந்தது. படிப்பு முடிந்த பிறகு அண்ணாவைச் சந்தித்து, நான் அரசியலுக்கு வரட்டுமா என்று அனுமதி கேட்டேன்.

தேவைப்படும்போது அரசியலுக்கு அழைத்துக் கொள்வதாகக் கூறிய அவர், என்னை வேலையில் சேருமாறு அன்புக் கட்டளையிட்டார். அதன் பிறகு  மின்வாரியத்தில் பொறியாளராகச் சேர்ந்து 7 ஆண்டுகள் பணியாற்றினேன்.

அப்போது மீண்டும் அண்ணாவிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். எனது அரசியல் ஆர்வத்தை அறிந்து கொண்ட  அவர், பொது வாழ்க்கைக்கு வர என்னை அனுமதித்தார்.

அண்ணாவின் அரசியல் கதவு திறந்ததால்,  அரசு வேலையை அகமகிழ்ச்சியுடன் துறந்தேன். 1967-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இப்போது இருப்பதைப் போல வேட்பாளர்களை கட்சித் தலைமை தன்னிச்சையாக முடிவு செய்யும் வழக்கம் அன்று இல்லை.

வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கென திமுக தலைமைக் கழகத்தால் தனிக் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. நெடுஞ்செழியன், சத்தியவாணி முத்து, கோவிந்தசாமி ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் தொகுதி வாரியாகச் சென்று மக்களிடத்திலே யாருக்கு செல்வாக்கு உள்ளது என்பதை அறிந்து அண்ணாவிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். பண்ருட்டி தொகுதியில் எனக்கு ஆதரவு அதிகமாக இருந்தது.

அந்தச் சமயத்தில்,  நீதிமன்ற குமாஸ்தாவாக இருந்து அந்தப் பதவியை ராஜிநாமா செய்த ஆறுமுகம் என்பவருக்கு வாய்ப்பளிக்குமாறு அண்ணாவிடம், க.அன்பழகன் பரிந்துரைத்தார். ஆனால், அந்தப் பரிந்துரை ஏற்கப்படவில்லை.

"வேலையை ராஜிநாமா செய்துவிட்டு அரசியலுக்கு வருமாறு பண்ருட்டி ராமசந்திரனை அறிவுறுத்தியதே நான்தான்; அது உனக்குத் தெரியாது' என்று அன்பழகனிடம் கூறிய அண்ணா, பண்ருட்டி தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்தார்.

கட்சி சார்பில் தேர்தல் நிதியாக ரூ.2,500 எனக்கு வழங்கினார்கள். சுவரொட்டிகள், நோட்டீஸ்கள் அடிப்பதற்கு மட்டுமே அப்போது செலவு இருந்தது. பண்ருட்டி தொகுதியில் எனக்காக அண்ணா நேரில் வந்து வாக்கு சேகரித்தார்.

அரிசி தட்டுப்பாடு தமிழகத்தில் பெரும் பிரச்னையாக இருந்த காலம் அது.

அதை முன்னிறுத்திப் பிரசாரம் மேற்கொண்ட அண்ணா, "தற்போது அரசியலை விட அரிசி இயலே மிகவும் முக்கியம்; திமுக ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு மூன்று படி அரிசி வழங்கப்படும்' என்றார்.

"என்னுடைய சரக்கு (பண்ருட்டி ராமசந்திரன்) நல்ல சரக்கு. எனவே மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தினார். அண்ணாவின் இத்தகைய நயமிக்க பேச்சு மக்களுக்கு என் மேல் நம்பிக்கையை விதைத்தது.

அந்த சமயத்தில்தான் எம்.ஆர்.ராதாவால் எம்ஜிஆர் சுடப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. இது காட்டுத் தீ போல பட்டி தொட்டியெங்கும் பரவி பதற்றத்தை உண்டாக்கியது.

சாலைகளில் இறங்கிய மக்கள் சென்னையிலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, எம்ஜிஆரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர். அவர் நலமாக உள்ளார் என்றச் செய்தியைச் சொன்ன பிறகே மக்களிடத்தில் பிரசாரம் மேற்கொள்ள முடிந்தது.

இப்படியாக பல போராட்டங்களைக் கடந்து ஒற்றை வாகனத்தில் பிரசாரம் செய்தேன். அண்ணாவின் மீதும், எம்ஜிஆர் மீதும் மக்கள் கொண்டுள்ள மாசற்ற அன்பு காரணமாக பண்ருட்டி தொகுதியில் நான் வெற்றி பெற்றேன்.

காங்கிரஸ் கட்சி சார்பில் என்னை எதிர்த்து நின்ற வடிவேல் படையாச்சி சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அந்தத் தேர்தலுக்காக நான் செலவிட்ட தொகை வெறும் ரூ.20,000 மட்டுமே.

தனிநபர் விமர்சனங்களுக்கும், தரம் தாழ்ந்த பேச்சுகளுக்கும் அப்போது இடமில்லை. நாகரிகமான வார்த்தைகளில் மட்டுமே ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வழக்கம் இருந்தது என்று கடந்த கால அரசியலை கண் முன்னே நிறுத்தினார் பண்ருட்டி ராமசந்திரன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com