தமிழகத்தில் மட்டும்தான் இந்த அளவு நெருக்கடி!: முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா

தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களின் ஏச்சுகள், பேச்சுகளுக்கு ஆளானவர். பணிக்காலத்தில் தனது அறையின் சுவரில் மட்டுமல்லாது, மனதிலும் மகாத்மா காந்தியடிகளையும், அவரது
தமிழகத்தில் மட்டும்தான் இந்த அளவு நெருக்கடி!: முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா

தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களின் ஏச்சுகள், பேச்சுகளுக்கு ஆளானவர். பணிக்காலத்தில் தனது அறையின் சுவரில் மட்டுமல்லாது, மனதிலும் மகாத்மா காந்தியடிகளையும், அவரது சிந்தனைகளையும் தாங்கி பணியாற்றியவர். பணிக்காலம் முடிந்து ஓய்வுக் காலத்திலும் காந்தியடிகளின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மத்தியில் தொடர்ந்து விதைத்து வருகிறார். நேர்மை, எளிமைக்கு இன்றும் உதாரணமாக வாழ்ந்து வருபவர். அவர்தான் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா. தேர்தல் தொடர்பாகவும், தலைமைத் தேர்தல் அதிகாரிகள் குறித்தும் அவர் அளித்த பதில்கள்:-
தேர்தல் நவீனமயமாக்கப்பட்டாலும், அரசியல்வாதிகளுக்கு கடிவாளம் போடும் வகையில் தேர்தல் விதிகளில் பெரிய அளவுக்கு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படவில்லையே ஏன்?
தேர்தல் நடைமுறைகள் தொடர்பான மாற்றங்கள் அவ்வப்போது கொண்டு வரப்
படுகின்றன. அதேசமயம், தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளின் பண பலத்தைத்தான் இன்னமும் தடுக்க முடியவில்லை. வேட்பாளர்களின் செலவினங்களைக் கண்காணிக்க அதிகளவு பார்வையாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். பறக்கும் படைகள் சோதனை செய்கின்றன. வருமான வரித் துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளைத் தேர்தல் துறை மேற்கொள்கிறது. உரிய ஆவணங்கள் இல்லாத பணத்தை பறிமுதல் செய்கிறார்கள். இந்த 
வழிமுறைகளைத் தாண்டி அரசியல்வாதிகள் பல புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். வாக்காளர்களுக்கு மொத்தமாக பணமாகக் கொடுக்கமால், சிறிய அளவிலான பணத்தை அவ்வப்போது கொடுக்கிறார்கள். இதனைக் கட்டுப்படுத்தத் தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. வேட்பாளர்கள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தாண்டி, இப்போது வாக்காளர்களும் தாங்கள் வாக்களிக்கப் பணம் வேண்டும் என்கிறார்கள். பணம் அல்லது பரிசுப் பொருள்களை வேட்பாளர்களிடம் இருந்து கேட்டுப் பெறுகிறார்கள். அப்படிக் கொடுக்காவிட்டால் கோபம் அடைகிறார்கள். அந்தக் காலத்தில் வாக்களிக்கப் பணத்தைக் கொடுத்தால் வாக்காளர்கள் வாங்கிக் கொள்வார்கள். பணம் வேண்டுமென வலியுறுத்த மாட்டார்கள். இப்போது பணம், பரிசுப் பொருள்களை வாக்காளர்களே விரும்புவதால், அவற்றை அளிப்பதில் அரசியல் கட்சிகளிடையே  போட்டி நிலவுகிறது.
தேர்தல் நடத்தும் பணிகளில் தமிழக அரசுப் பணியாளர்களை மட்டுமே தேர்தல் ஆணையம் நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. இது பாரபட்சமான தேர்தலுக்கு வழிவகுக்காதா?
தேர்தல் நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் தவறிழைத்தால் அவர்களை மாற்றி விடலாம். 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் நபர்களையும் மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. புகார்கள் வந்தால் அதிகாரிகள், ஊழியர்களைப் பணியிடை நீக்கம் செய்யலாம். ஆனால், இடைத்தேர்தல் என்று வரும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது. இடைத்தேர்தல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நடக்கிறது. இதனால் பல கட்சிகளைச் சேர்ந்த பலம் பொருந்திய தலைவர்கள் அங்கு சென்று தேர்தல் பணியாற்றுகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்துவது தேர்தல் ஆணையத்துக்கு சவாலானது. ஒட்டுமொத்தமாக மக்களவைக்கோ அல்லது சட்டப் பேரவைக்கோ தேர்தல் நடத்தும்போது அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிலேயே நடக்கிறது. இதனால், அரசுப் பணியாளர்கள் பாரபட்சத்துடன் பணியாற்ற வாய்ப்பில்லை.
தமிழகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கிறார்கள். அது ஏன்?
தொடர்ச்சியாக மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் வரை இருப்பார்கள். அதன்பிறகு மத்திய அரசுப் பணிக்குச் செல்வார்கள். தேர்தலின்போது தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு மிகப்பெரிய அழுத்தம் இருக்கிறது. கடின உழைப்பைச் செலுத்த வேண்டியிருக்கிறது. மேலும், தேர்தல் அதிகாரி மீது சரமாரியாக புகார்களைக் கூறுகிறார்கள். எனவே, எந்தத் தலைமை தேர்தல் அதிகாரியும் நீண்ட காலம் அந்தப் பணியில் இருக்க விரும்புவதில்லை. ஒரு அதிகாரி மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகும் பணி அது. அவர் சிறப்பாகப் பணியாற்றினாலும் அவரது பணிக்கு யாரும் அங்கீகாரமும் வழங்குவதில்லை. தலைமைத் தேர்தல் அதிகாரி மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் அதிகளவு புகார்களைக் கூறுவது தமிழகத்தில் மட்டுமே நிகழ்கிறது. பிற மாநிலங்களில் அப்படி இல்லை. அங்கெல்லாம் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு மதிப்பு, மரியாதை இருக்கும். ஆனால், தமிழகத்தில் மட்டுமே நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இவ்வாறு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு நெருக்கடி கொடுத்தால் பயந்து கொண்டு அவர் தனது பணியைச் செய்ய மாட்டார் என்ற எண்ணமும் கூட அரசியல் கட்சியினருக்கு இருக்கலாம்.
தேர்தல்களை அடிக்கடி நடத்த வேண்டிய நிலை உள்ளதே!  
ஐந்து ஆண்டுகளில் அடுத்தடுத்து மூன்று தேர்தல்கள் வருகின்றன. மக்களவை, சட்டப் பேரவை, உள்ளாட்சி என மூன்று முக்கியத் தேர்தல்களை நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கிடையே ஏதாவது தொகுதி காலியானால் அங்கு இடைத்தேர்தல்களையும் நடத்த வேண்டியச் சூழ்நிலை ஏற்படுகிறது. இப்படி அடிக்கடி தேர்தல்களை எதிர்கொள்வதால் அரசியல் கட்சிகளும், அரசாங்கமும் அந்தத் தேர்தல்களை மனதில் வைத்தே செயல்படுகின்றன. அரசியல் கட்சிகளும், அரசும் நீண்ட கால வளர்ச்சிக்காக செயல்படாமல், குறுகிய நோக்கங்களைக் கொண்டு செயல்படுகின்றன. இதனாலேயே இலவசத் திட்டங்களை அறிவிக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் 
என்றார் நரேஷ் குப்தா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com