திருத்தணி, வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் தைப்பூச விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தைப்பூச விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட
திருத்தணி, வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் தைப்பூச விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்


திருத்தணி முருகன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தைப்பூச விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனர்.
அறுபடை வீடுகளில் 5 ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயில் ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு பால், பன்னீர், விபூதி, தேன் மற்றும் அபிஷேகப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு தங்கவேல், தங்கக் கிரீடம், மாணிக்கக் கல் மற்றும் வைர ஆபரணங்களை அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு உற்சவர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை நடந்தது.
சிலர் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற மயில் காவடி, மலர்க் காவடிகளுடன் பக்திப் பாடல்களைப் பாடியவண்ணம் மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி வழிபட்டனர். தைப்பூச விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை காலையில் சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி வந்த மின்சார ரயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காஞ்சிபுரம், வேலூர் திருவண்ணாமலை, ஆந்திர மாநிலம் திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணி வந்து, தைப்பூச விழாவில் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர். 
விழாவை முன்னிட்டு வெளியூர்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் மலைக்கோயிலில் வந்து குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தைப்பூச விழாவையொட்டி ரூ.100, ரூ.150 டிக்கெட்டுகளுக்கான சிறப்பு கவுன்ட்டர்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அதேபோல் பொதுவழியிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி, தக்கார் வே.ஜெயசங்கர் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
வல்லக்கோட்டை முருகன் கோயிலில்...
தைப்பூச விழாவை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அறுமுடி கட்டி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 
காஞ்சிபுரம் மாவட்டம், வல்லக்கோட்டை பகுதியில் பழைமையான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா திங்கள்கிழமை மாலை தொடங்கியது. மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர். தைப்பூச விழாவை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகனுக்கு விரதம் இருந்த காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அறுமுடி கட்டி, பாதயாத்திரையாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வாக உற்சவர் சுப்பிரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்ட வெள்ளி மயில் வாகனத்தில் அருகில் உள்ள குன்றுமேடு பகுதிக்குச் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். இதையடுத்து திங்கள்கிழமை நள்ளிரவில் தைப்பூச ஜோதி ஏற்றப்பட்டது. 
மதுராந்தகத்தில்....
மதுராந்தகத்தை அடுத்த பெருங்கரணை, நடுபழனி மரகத தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திங்கள்கிழமை தைப்பூசப் பெருவிழா நடைபெற்றது. 
விழாவை முன்னிட்டு, கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. விழாவையொட்டி, திங்கள்கிழமை காலை 6 மணிக்கு மங்கல இசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பின்னர், கருவறை மரகத தண்டாயுதபாணி சுவாமி உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளில் உள்ள சுவாமி சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு பெண்கள் பால்குடம் ஏந்தி வருதல், புஷ்பக் காவடிகளை ஏந்தி வருதல், கிரிவலம் வந்து படி விழா செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
பொன்னேரியில்....
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள ஆண்டார்குப்பம் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலசுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. தைப்பூச விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம், அர்ச்சனை ஆகியவை நடைபெற்றன. அதே போன்று வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்த உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் தீபாரதனைகள் நடைபெற்றன.
காஞ்சிபுரத்தில்...
காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள முருகன், சிவன், அம்மன் கோயில்களில் தைப்பூச விழா திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது. 
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற குமரகோட்டம் முருகன் கோயிலில் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து, இரவில் நான்கு ராஜவீதிகளிலும் உற்சவர் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதேபோல், காஞ்சிபுரத்தை அடுத்த கருக்குப்பேட்டை காசி விஸ்வநாதர் கோயில், திருப்புலிவனம் திரிசூலக்காளியம்மன் கோயில் ஆகியவற்றிலும் தைப்பூச விழா நடைபெற்றது. இதையொட்டி, திங்கள்கிழமை காலை அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 
காஞ்சிபுரத்தை அடுத்த தொள்ளாழி கிராமத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமண்ய சுவாமி கோயிலிலும் தைப்பூச விழா நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்காவடி எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து, சுவாமியை வழிபட்டனர். மாலை வேளையில், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது. இரவு வேளையில் உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com