பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்.
அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்.


பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் திருக்கோயில் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் மார்ச் 4-ஆம் தேதி துவங்கியது. விழாவையொட்டி பல்வேறு கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது. 
இதைத் தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்குவதற்காக 4 இடங்களில் பிளாஸ்டிக் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. குண்டம் வளாகத்தில் சவுக்குத் தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் வரிசைப்படுத்தப்பட்டனர்.  விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவியத் தொடங்கினர். 
வேம்பு, ஊஞ்சல் மரத் துண்டுகளை குண்டத்தில் அடுக்கி வைத்து தீக்குண்டம் வார்க்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பண்ணாரி வழியாக கனரக வாகனங்கள் செல்ல செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிவரை தடை விதிக்கப்பட்டுள்ளதால் சத்தியமங்கலம், ராஜன் நகர், ஆசனூர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. மேலும் பாதுகாப்புப் பணிக்காக 8 மாவட்டங்களில் இருந்து 1,500 போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஒரே நேரத்தில் ஆண், பெண் பக்தர்கள் குண்டம் இறங்குவதற்கான வசதிகளும், கோயிலுக்குச் சென்று அம்மனை தரிசித்து விட்டு செல்லும் வகையில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நீண்ட நேரம் பந்தலில் காத்திருக்கும் பக்தர்களுக்காக மொபைல் கழிப்பறை மற்றும் அனைத்து பக்தர்களும் குளித்துவிட்டு செல்லும் வகையில் தானியங்கி தண்ணீர் குழாய் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
விழாவையொட்டி, கர்நாடக மாநிலம் மைசூரு, சாம்ராஜ் நகர், தமிழகத்தில் மதுரை, கோவை, சேலம், தருமபுரி ஆகிய ஊர்களில் இருந்து வேன், லாரி, கார், பேருந்து மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com