கடந்த வாரத் தலைப்பு ‘மன்னிப்பாயா’வாசகர்களின் கவிதைகள் பகுதி 1!

பிரசவ  வலி  அனுபவித்து  குழந்தையை  பெற்ற  தன்  மனைவியின்  நெற்றி முகர்ந்து,
கடந்த வாரத் தலைப்பு ‘மன்னிப்பாயா’வாசகர்களின் கவிதைகள் பகுதி 1!

மன்னிப்பாயா

நேசப் பூக்களை நெஞ்சில் விதைத்து 
வாசம் பரப்பிடும் வாழ்வின் வரமே 
அற்றைத் திங்கள் அற்றம் காத்துக்  
குற்றம் களைந்தாய்க் குன்றா விளக்காய்!

முகவரி என்னுள் முழுதாய் மாற்றி 
அகவெளி அதனுள் அமுதம் ஊற்றி 
ஆசுகள் எல்லாம் அளியால் வீழ்த்தி 
ஆய்தல் கொண்டே ஆள்வினை செய்தாய்!

இழிதகவு வருங்கால் இடித்தே உரைத்து 
இன்முகம் அதனால் இதயம் கவர்ந்து 
பன்முகம் காட்டிடும் பகலவத் துளியைப்   
பழியினில் இழந்த பாவமும் புரிந்தேன்!

மானிடப் பிழைகள் மனதினில் எழுந்து
ஊனுடல் அதுவும் உணர்வினில் எரிந்து
தேனெனும் உறவில் தீயினை ஊற்றிட 
தெய்வீக நட்பே மடமையை மன்னிப்பாயா! 
      
- கவிஞர். மு. திருமாவளவன் 
 

**

நாம்  நேசிப்பவரிடம்  மட்டுமே  சொல்லுவது,
அவர்கள்  மனம்  புண்படக்கூடாது என்று! 

மணல்  வீட்டை  கலைத்த  கடல்  அலை,  
குழந்தையின்  கால்  தொட்டு  சில்லென கேட்டது ,
என்னை  மன்னிப்பாயா  என்று!

பொன்வண்டு  மலரில்  அமர்ந்து,  
தேன்  குடித்தபோது  தித்திப்பாய் கேட்டது ,
என்னை  மன்னிப்பாயா  என்று!

முதிர்ந்த    தேங்காய்  மரத்திலிருந்து  விழுந்து, 
பூமி  தொட்ட  போது  முத்தமிட்டு கேட்டது,   
என்னை  மன்னிப்பாயா  என்று!

தன்  வரவுக்கு  காத்திருந்து  கோவம்  கொண்ட  காதலியிடம்  
மண்டி  இட்டு  காதலன்  காதலோடு கேட்டான் 
என்னை  மன்னிப்பாயா  என்று !

பிரசவ  வலி  அனுபவித்து  குழந்தையை  

பெற்ற  தன்  மனைவியின்  நெற்றி முகர்ந்து,
மானசீகமாக  கணவன்  பாசத்தோடு கேட்டான்,
என்னை  மன்னிப்பாயா  என்று!

பசியால்  அழுத  குழந்தையை  கட்டி  

அணைத்து  பாலூட்டும்  போது  
கை  பற்றி  முத்தமிட்டு  அன்னை  அன்போடு கேட்டாள்,  
என்னை  மன்னிப்பாயா  என்று !

கிருஷ்ணனை  பார்த்து  அர்ஜுனன்  மரியாதையோடு
போர்  எதற்கு , 
என்னை  மன்னிப்பாயா  என்றபோது 
கீதை பிறந்தது!!

மன்னிப்பாயா,
நாம்  நேசிப்பவரிடம்  மட்டுமே  சொல்லுவது,
அவர்கள்  மனம்  புண்படக்கூடாது என்று,
அங்கு  மனித  நேயம்  வளர்ந்து,
புதிய  மனிதன்  பிறக்கின்றான் !!

- பிரியா ஸ்ரீதர்  

**

நான் ஆட்சிக்கு வந்தால் ஒழிப்பேன் வறுமையை 
என்று சொன்னார் ஒருவர்!  நான் ஆட்சிக்கு 
வந்தால் நதி நீரை இணைப்பேன் என்றார் 
இன்னொருவர் ! 

நீதியும் தர்மமும் நிலை நாட்டுவேன் நான் 
என்றார் மற்றொருவர் !
பாரினிலே நல்ல நாடாக மாறும் நம் பாரத 
நாடு என்று சபதம் செய்தார் வேறு ஒருவர் !

சொன்னதை செய்வேன் ..செய்வதை சொல்வேன் 
என்னும் ஒரே ஒரு   வாக்குறுதி  நம்பி என் வாக்கு 
யாருக்கு என்று எடுத்தேன் முடிவு அன்று !
ஏமாந்து நிற்கிறேன் இன்று நான் ! மாத சீட்டு 

கட்டி, கையில் இருந்த பணத்தையும் முழுதாக 
தொலைத்து விட்ட ஒரு சராசரி மனிதனாக !
நண்பா ! நீ அன்றே சொன்னாய் ...இலவசத்தில் 
மயங்கி உன் வசம் இருப்பதையும் இழந்து 
விடாதே நீ என்று !

கேட்டேனா நான் ? இல்லையே ! நான் 
கேட்காமலே பல வித அட்டைகள் என் 
கையில் இன்று ! கடன்  அட்டைகளும் 
என் சட்டைப் பையில் காசுக்கு பதிலாக !

உன் சொல் அன்று கேட்காதது  என்  
தப்புதான் ...நண்பா !
மன்னிப்பாயா நண்பா  என்னை இன்று ?

- K. நடராஜன் 

**

தவறு   செய்வது  அது 
மனிதனின்  இயல்பு..
உறவுகள் தவறினை மறந்து 
மன்னிக்கும்  குணமுடையவன்
இல்லத்தில் கட்டப்படும் 
உறவுப் பாலம் பல 
சந்ததியினர் நடக்க  உதவும்
உறுதியான  பாலம்!
மன்னிப்பாயா  என்ற
ஒற்றை வார்த்தை
கற்றை பொருள்கள் நிறைந்த 
அற்புத  வார்த்தை!
கணவன்-மனைவியிடம் 
மன உளைச்சளை  போக்கும் 
கனமான  வார்த்தை "மன்னிப்பாயா?"
மன்னிப்பு கேட்பதாலேயோ 
மன்னிக்கப்  படுவதாலேயோ 
யாரும்  தாழ்வதில்லை!
மன்னிக்க தெரிந்த  மனிதன் 
சன்னிதானத்தில்  இருக்கும் 
இறைவனுக்கு  சமமானவன்!
எதையும்  மன்னிப்போம் 
சதை பற்றுள்ள  வாழ்க்கையினை 
வாழ்வோம்!!!!!!! 

- உஷாமுத்துராமன், மதுரை

**
கருவறை உருவாய்
திருமேனி கொண்டவனின்
திருமுகம் நோக்க
கருவறை கொண்டவளுக்கோ
உரிமை இல்லை!
கருவறையின் 3 நாள்
நாற்றப் பொய்க் கூடை 
காரணங்களினால்  300 நாள் தாய்மை
அவமானத்தால் தலை குனிய
மன்னிப்பாயா சொல் கேட்க
சகோதரிகளின் கூட்டமும்
மகள்களின் கூட்டமும் 
பேத்திகளின் கூட்டமும் காத்திருக்கிறது!
எல்லா இனங்களில் ஆணை
அழகாய்ப் படைத்த
இறைவன்  ஆறறிவுள்ள
பெண்ணை மட்டும் ஏன்
பாலியல் பிண்டமாக்கி
போதை,புகை,மது மானிடர்
சகதியில் உலாவிடச் செய்தான்!
புரிந்து கொண்ட
பெண்ணினமோ மௌனமாக
ஆணின் பிரம்மச்சர்ய
விரதத்தை வரவேற்க
புரியாத பிறவிகளோ
பொய் புகழுக்காக
ஏங்குகிறது!
புரியாத பிறவிகளை
மன்னிப்பாயா இறைவா!-
மது  மாது போதை 
பாலியல் சீண்டல் இல்லா
இந்தியச் சட்ட பண்பாட்டில் இனி
சம உரிமை என்றே
ஆண் சகோதரத்துவம்
இதயத்தில் குத்திய 
நாற்ற முள் இரணத்தை
ஆற்ற மன்னிப்பாயா  
களிம்பு வாசகத்துடன்
கை தூக்க வருகின்ற
திருநாளே பெண்ணிற்கு
பொன் நாளே!- 

- டாக்டர் பி.ஆர்.லட்சுமி

**

காதல் கடலை
ஒத்தது தான் !
அன்பெனும் அலையின் கரம்
பற்றி
ஆனந்தமெனும் கரையைத்
தொடுவதால் !

காதல் காற்றை
ஒத்தது  தான் !
காற்றைப்போல காதலும்
காணும் இடமல்லாது
கண்காணாத தொலைவிலும்
நிறைந்திருப்பதால் !

காதல் மழையை
ஒத்தது  தான் !
மழையைப் போன்றே காதலும்
மனம் கொள்ளா மகிழ்ச்சிதந்து
மண்ணில் உயிர்களை 
வாழ வைப்பதால் !

கடலின் சீற்றமோ
காற்றின் அழுத்தமோ
கனமழை பொழிதலோ
கால மாற்றமோ
காதலின் வானிலையை
பாதிப்பதில்லை
காதல் என்றும் அன்பின்
வழியதில்  மட்டுமே
பயணிப்பதால் !

- ஜெயா வெங்கட்

**

அறிவின் மிகுதி என்று
அதிகம் பேசிய சொற்கள்

நட்பின் மிகுதி என்று
கடந்து சென்ற எல்லைகள்

வலிகளின் மிகுதி என்று
கடத்திக் கொண்ட‌ மெளனங்கள்

அன்பின் மிகுதி என்று
வலிந்து கலைத்த தனிமைகள்

வெறுமையின் மிகுதி என்று
தள்ளி நடந்த பொழுதுகள்

மகிழ்ச்சியின் மிகுதி என்று
தளும்பிக் கொட்டிய சலனங்கள்

உன்னில் மிகுதி என்று
உன்னைக் கடந்த நிகழ்வுகள்

என்னில் மிகுதி என்று
என்னை நிறுவிய கணங்கள்

என்
இருளைச் சுமந்த சுடராய்ச்
சுடர்ந்த உன்னை உணர்கிறேன்.
மன்னிப்பாயா ? 

உணர்வுகளே வண்ணங்கள்
உயிர்கள் தழுவச் சொல்கிறான்
அள்ளி எழுதும் ஓவியன்.
வண்ணத்தில் குழையும் பிழைகளால்
உயிர்கள் தழுவ மறுக்கலாம்
உணர்வுகள் இழைந்த ஓவியம்
ஓவியன் செய்த பிழையல்ல.
எனில்
வண்ணங்களே சொற்கள்
நீயும் நானும் வெறும் தூரிகைகள்
உணர்வுகள் செய்யும் ஓவியத்தில்..
கடற்கரையில் கால்கள் நனைய‌
என் குருவாய்
உன்னைத் தோளில் சுமந்த நினைவுகளுடன்..

- ரமேஷ் கோபாலகிருஷ்ணன், அமெரிக்கா

**

என்னவளே ஏனிந்த வருத்தம் இன்னும்

……….என்னபிழை செய்துவிட்டேன் அறியேன் நான்.!

என்றைக்கும் இதுபோல்நீ இருந்த தில்லை

……….எதற்காக இவ்வளவு கோபம் என்மேல்..!

அன்பைவெளிப் படுத்தப்பல் வழிகள் உண்டு

……….ஆருயிரே நீயறிவாய் அதையெல் லாமே..!

மன்னிக்கும் மனப்போக்கு இருத்தல் வேண்டும்

……….மனிதருக்கு இதுசகஜம் மன்னிப் பாயா..!

 
உண்ணவுமே உறங்கவுமே முடிய வில்லை

……….உன்மத்தம் பிடித்ததுபோல் இங்கு மங்கும்..!

எண்ணமுமே மேலெழுந்து வருந்தும் வண்ணம்

……….என்னுள்ளே புகுந்துதினம் வதைத்துச் செல்லும்.!

கண்டபடி வசவுகளை வீசி னாலும்

……….காதிலேநான் வாங்கவில்லை! கருணை காட்டு.!

தண்டிப்பதை விட்டுவிட்டு தயைகொள் தாயே

……….தயங்காது இப்போதே மன்னிப் பாயா..!


கண்ணோடு கண்பேசும் மொழியி லோர்

……….கருணையுமே கலந்திருக்கக் கண்ட துண்டு..!

கண்ணியமொடு சேர்ந்தவொரு உணர்வே காதல்

……….கருத்துக்கள் இணையாது போனால் மோதல்..!

எண்ணங்கள் ஒன்றாக இணைந்து விட்டால்

……….எல்லாமே வரவேற்கும் இணைந்து நம்மை..!

பெண்களுக்கே உரித்தான சுபாவம் கோபம்

………. பெரிதாகக் குறையதிலே இருப்ப தில்லை..!

- பெருவை பார்த்தசாரதி

**

மனதில் உனை நினைக்காமல் 
குணத்தில் உனை தேடாமல் 
பணத்தால் எதுவும் முடியுமென்று 
கற்சிலையில் மட்டும் உனை கண்டு 
மாலை சூடி 
அபிஷேகம் 
ஆராதனை செய்து 
உன் அருளை பெற்றிட நினைக்கும் 
போலிப் பக்தர்களை 
நீ மன்னிப்பாயா கடவுளே?? 

கொள்கை 
கருத்துக்களை 
எளிமையை 
நேர்மையை 
இதில் உனை பின்பற்றாமல் 
உன் பெயரை 
உன் புகைப்படத்தை 
உன் புகழை மட்டும் 
பேசிக்கொண்டு 
உனை மறந்து 
உனை தொடரும் தொண்டர்களை 
மன்னிப்பாயா தலைவனே ?? 

கோடான கோடி 
உயிர் வாழ இடம் தந்து 
எல்லா ஜீவ ராசிகளும் 
நலமுடன் வளம் பெற 
நீ அள்ளித்தந்த உன்னை 
கூறு போட்டு 
கூவி கூவி 
ஏலம் விடும் 
இம்முட்டால் மானிடரை 
மன்னிப்பாயா பூமித்தாயே?? 

நிழல் மட்டும் தராமல் 
தூய காற்று தந்து 
மண் வளம் தந்து 
மழை தந்து 
சின்னஞ்சிறு கூடு கட்டி 
சிற்றுயிர்கள் வாழ இடம் தந்த உன்னை 
வெட்டியெறியும் கைகளை 
மன்னிப்பாயா மரமே ?? 

சமத்துவம் பேசும் சமுத்திரமே 
எல்லா உயிர்களுக்கும் நீராதாரமே 
உன்னையும் 
உன்னுடன் உடன்பட்டு பிரிந்த 
உன் பிள்ளைகளாகிய 
ஆறு குளம் ஏரியையும் 
காழ்ப்புணர்ச்சி காரணமாய் 
எல்லை பிரித்து சண்டையிடும் 
இம்மடையர்களை 
மன்னிப்பாயா கடலே ?? 

இயற்கை எய்தும் வரை 
இயற்கையை உணரா 
இம்மனிதப் பிண்டங்களை 
மன்னித்தருள்வாயா இயற்கையே ??

- குணா

**

பெற்றெடுத்து வளர்த்தென்னை 
பள்ளி,கல்லூரி படிக்கவைத்தாய்! 
பாசம்காட்டி அறத்தை சொல்லி பக்குவமாய், 
ஆசைப்பட்டாய் வளர்ந்திடவே! 
கேட்டதெல்லாம் வாங்கித்தந்தாய், 
விரும்பியதையெல்லாம் சமைத்துத் தந்தாய்! 
நீ கஷ்டப்பட்டு நான் வாழனுமுன்னு பொன் 
பொருளையெல்லாம் சேர்த்து எனக்கே 
கொடுத்தாயம்மா! உன் அன்பில் வளர்ந்த 
என்னில் நம்பிக்கைகள் வளர்த்தேனம்மா! 
வேலைக்குச் சென்று கை நிறைய சம்பாதிச்சி 
உன் கையில் கொடுத்தேனம்மா! 
அன்பும் அழகுமுள்ள அறிவும் நிறைந்தவளை 
உனைக் கேட்காமலே விரும்பி 
காதல் சொல்லி மகிழ்ந்தே காதல் 
செய்தேன்! நம் வீட்டில் விளக்கேற்றும் 
மருமகளாயவளை ஏற்பாயா? 
என்னை மன்னிப்பாயா? 
ஏமாந்திருமாந்திடவில்லை! 
மன்னிப்பாயா? 

- A.k.சேகர்.ஆகாசம்பட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com