113. வானமர் திங்களும் நீரும் - பாடல் 1

பெருமானின் பெருமை
113. வானமர் திங்களும் நீரும் - பாடல் 1


பின்னணி:

வாழ்கொளிபுத்தூர் சென்று பொடியுடை மார்பினர் என்று தொடங்கும் பதிகம் (1.40) பாடி பெருமானின் பெருமையை உணர்த்தி அவனது திருவடிகளின் மீது மலர்கள் தூவி பணிந்து மகிழ்வோம் என்று பாடிய பின்னர், திருஞானசம்பந்தர் திருக்கடம்பூர் வந்து சேர்கின்றார். இந்த தலம் வந்தடைந்த பின்னரும் அவரது மனம் எவ்வாறு எல்லாம் பெருமானின் திருவடிகளைத் தொழுது உய்யலாம் என்பதை அடியார்களுக்கு உணர்த்தவேண்டும் என்ற எண்ணத்துடனே இருந்தது போலும். இந்த தலத்து பதிகத்தின் முதல் பாடலில், அவனது திருப்பாதங்களைத் தொழுதால் வீடுபேறு அடைவது எளிதாகும் என்றும் இரண்டாவது பாடலில் அவனது திருவடிகளை இரவும் பகலும் தொழுதால் நமக்கு இன்பம் கிடைக்கும் என்றும், மூன்றாவது பாடலில் அவனைத் தொழுது அவனது பொற்கழல்களை நாம் போற்றுவோம் என்றும், ஏழாவது பாடலில் அவனது திருவடிகளை போற்றுதலே வாழ்க்கையின் பொருள் என்றும், கூறுகின்றார்.

இந்த தலம் காட்டுமன்னார்கோயிலுக்கு ஐந்து கி.மீ. மேற்கே உள்ளது. தற்போது மேலக்கடம்பூர் என்று அழைக்கப் படுகின்றது. கருவறையின் அடிபாகம் தேர் வடிவத்தில் குதிரைகள் பூட்டிய நிலையில் உள்ளது. இறைவன் பெயர் அமிர்தகடேசர்; இறைவியின் திருநாமம் சோதி மின்னமை. இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய இரண்டு குறுந்தொகைப் பதிகங்களும் கிடைத்துள்ளன. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று அப்பர் பிரான் பாடிய பாடல் இந்த தலத்திற்கு உரியதாகும். கடம்ப மரம் இந்த தலத்தின் மரம் கடம்பூர் என்ற பெயர் வந்தது.       

பாடல் 1:

    வானமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானைத்
    தேனமர் கொன்றையினானைத் தேவர் தொழப் படுவானைக்
    கானமரும் பிணை புல்கிக் கலை பயிலும் கடம்பூரில்
    தானமர் கொள்கையினானைத் தாள் தொழ வீடு எளிதாமே
  

விளக்கம்:

வானில் இருந்து கீழே இறங்கிவந்த போது தானே, கங்கை நதி பெருமானின் சடையில் தாங்கப்பட்டு மறைந்தது. அதனை குறிப்பிடும் வண்ணம் வானமர் என்ற சொல்லினை திங்கள் மற்றும் கங்கை நதி இரண்டுக்கு பொதுவாக வைத்துள்ள நயம் ரசிக்கத் தக்கது. கலை=ஆண்மான்; பிணை=பெண்மான்; பயிலுதல்=தொடர்ந்து பழகுதல்; வார்சடை=நீண்ட சடை; அமர்=பொருந்திய; மருவிய=கலந்த; கான்=காடு; தேவர்கள் தொழப்படும் இறைவன் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். முருகப் பெருமான், இந்திரன், செவ்வாய் ஆகியோர் இறைவனைத் தொழுது பயன் அடைந்ததாக தலபுராணம் கூறுகின்றது. முருகப் பெருமானுக்கு இறைவன் வேல் கொடுத்ததாக கூறுவார்கள். இந்திரன் இந்த தலத்து இறைவனை, தேவலோகம் கொண்டு செல்ல நினைத்து பூமியை மிகவும் ஆழமாக  தோண்டியதாகவும், இலிங்கத்தின் அடிப்பகுதி அவனுக்கு எட்டாத வண்ணம் கீழே இருந்ததால் அச்சம் கொண்டு தனது முயற்சியை கைவிட்டுத் தேவலோகம் திரும்பியதாக கூறுவார்கள். இந்த செய்தியை தேவர் தொழப் படுவான் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார் போலும்.  
  
பொழிப்புரை:

வானில் பொருந்திய பிறைச் சந்திரனும் கங்கை நதியும் கலந்து பொருந்திய நீண்ட சடையினை உடையவனும், தேன் பொருந்திய கொன்றை மலர்களை விருப்பத்துடன் சூடிக் கொள்பவனும், தேவர்களால் தொழப்படும் இறைவனும், காடுகளில் பொருந்தியுள்ள ஆண்மானும் பெண்மானும் கலந்து மகிழும் கடம்பூர் தலத்தில் தானே விரும்பி அமர்ந்து  உறைபவனும் ஆகிய இறைவனின் திருப்பாதங்களைத் தொழ, வீடுபேறு அடைவது மிகவும் எளிதான செயலாக மாறிவிடும்.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com