113. வானமர் திங்களும் நீரும் - பாடல் 8

வெற்றி கொள்ளல் என்ற பொருளில்..
113. வானமர் திங்களும் நீரும் - பாடல் 8

பாடல் 8:

    பூம்படுகில் கயல் பாயப் புள் இரியப் புறங்காட்டில்
    காம்படு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில்
    மேம்படு தேவியொர் பாகம் மேவி எம்மான் என வாழ்த்தித்
    தேம்படு மாமலர் தூவித் திசை தொழத் தீய கெடுமே
   

விளக்கம்:

படுகில்=நீர் நிலைகளில்; பூம்படுகு=அழகிய நீர்நிலை; புள்=பறவை; இரிய=பறந்தோட; காம்பு= மூங்கில்; அடுதல்=கொல்லுதல், இங்கே வெற்றி கொள்ளல் என்ற பொருளில் வருகின்றது. காம்படு தோளியர்=அழகினில் மூங்கிலை வென்ற தோள்கள் உடைய பெண்கள்; மூங்கில் மகளிரின் தோள்களின் வனப்பிற்கு முன்னே தோல்வி அடைந்ததை குறிப்பிடும் சம்பந்தர், கடம்பூர் மகளிரின் கண்கள் மீன்களை விடவும் அழகாக இருந்ததை உணர்ந்தார் போலும். அவர்களின் கண்களின் முன்னே போட்டியிட முடியாமல், மீன்கள் நீர்நிலைகளில் பாய்ந்து மறைந்தது என்று கூறுகின்றார். தேம்படு=தேன் சொரிகின்ற; 
  
பொழிப்புரை:

அழகிய நீர்நிலைகளில் மீன்கள் துள்ளி குதித்து பாய்வதால் ஏற்படும் இரைச்சலால் பயந்த பறவைகள் அங்கும் இங்கும் பறந்தோடும் காட்சி, மூங்கில்களின் வனப்பினை விஞ்சும் வண்ணம் தோள்கள் அமையப்பெற்ற தலத்து மகளிர்களின் கண்களைக் கவரும் வண்ணம் உள்ள கடம்பூர் நகரத்தில் உறையும் இறைவனை, அனைத்துப் பெண்களினும் மேம்பட்ட அழகினையும் குணத்தினையும் உடைய பார்வதி தேவியினைத் தனது உடலின் ஒரு பாகத்தில் பொருந்தியுள்ள இறைவனே என்று வாழ்த்தி, தேன் சொரிகின்ற சிறந்த மலர்களை தூவி அடியார்கள் வழிபடும் இறைவன் இருக்கும் திசையினைத் நோக்கித் தொழும் அடியார்களின் தீவினைகள் கெட்டுபோகும்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com