109. நூலடைந்த கொள்கையாலே - பாடல் 1

பெருமானின் திருவடிகளை
109. நூலடைந்த கொள்கையாலே - பாடல் 1


பின்னணி:

புறம்பயம் சென்று பொருளாழம் மிகுந்த பதிகம், மறம்பய மலைந்தவர் என்று தொடங்கும் பதிகம் -- 2.30) பாடி இறைவனைத் தொழுத திருஞானசம்பந்தர், அங்கிருந்து புறப்பட்டு சேய்ஞலூர் தலம் செல்கின்றார். அவ்வாறு செல்லும் வழியில் திருவியலூர் மற்றும் திருந்துதேவன்குடி ஆகிய தலங்கள் சென்றதாகவும் கூறுவார்கள். சேய்ஞலூர் தலத்து அந்தணர்கள் ஞானசம்பந்தர் வருவதை முன்னமே அறிந்தவர்களாய், மறையொலி முழங்க மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, அவரை ஊரெல்லையில் எதிர்கொண்டு வரவேற்றனர். திருஞானசம்பந்தரும், பெருமானின் தலை சிறந்த தொண்டர்களின் தலைவராக விளங்கி அவரால் கொன்றை மாலை சூட்டப் பெற்ற சண்டீசர் வாழ்ந்த பதி என்ற சிறப்பினை கருதி, சிவிகையிலிருந்து கீழே இறங்கி தலத்தை வணங்கினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். தொடையல்=மாலை; நாயனார் என்ற சொல் சண்டீசரை குறிப்பிடுகின்றது. யானம்=சிவிகை; நித்திலம்=முத்து; பிள்ளையார்=இறைவன் சண்டீசரை தனது மகனாக ஏற்றுக் கொண்டமை குறிப்பிடும் வகையில் சேக்கிழார் பிள்ளையார் என்று கூறுகின்றார். பான்மை=நியதி; 

    ஞானசம்பந்தரும் நாயனார் சடைத்
    தூ நறும் தொடையல் முன் சூட்டும் பிள்ளையார்
    பான்மையில் வரும் பதி என்று நித்தில
    யானம் முன் இழிந்து எதிர் இறைஞ்சி எய்தினர்  

திருஞான சம்பந்தர் வருகையை, சண்டீசர் மீண்டும் தங்களது ஊருக்கு வந்ததாக கருதிய மக்கள், மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆடியும் பாடியும் வரவேற்ற மக்கள், புனித நீரினை தெளித்தும் பொரிகளையும் மலர்களையும் தூவியும், கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக அவரை வரவேற்றனர். மிகுந்த அன்புடன் திருக்கோயிலை அடைந்த சம்பந்தர், பெருமானின் திருவடிகளை வணங்கிய பின்னர் பதிகம் பாடிய போது சண்டீசரின் செய்கைக்கு இறைவன் பரிசு அளித்ததை குறிப்பிட்டார் என்று சேக்கிழார் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களிலும் பெருமான் புரிந்த வியத்தகு கருணைச் செயல்களை குறிப்பிட்டு பெருமானை சம்பந்தர் பணிகின்றார். இந்த தன்மையை கருணை போற்றுவார் என்று சேக்கிழார் குறிப்பிடும் பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. 

    வேதியர் சேய்ஞலூர் விமலர் தம் கழல்
    காதலில் பணிந்து அவர் கருணை போற்றுவார்
    தாதை தாள் தடிந்த சண்டீசப் பிள்ளையார்
    பாதகப் பயன் பரிசு பாடினார் 

சண்டீசரின் தந்தை பிறப்பாலும் ஒழுக்கத்தாலும் வேதியராகத் திகழ்ந்தவர். எனவே ஒரு அந்தணருக்கு, காலை வெட்டி தீங்கு செய்தமையால் பிரம்மஹத்தி தோஷமும் தந்தை என்பதால் பித்ருஹத்தி தோஷமும் சண்டீசரை பற்றியிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்ததது சிவபூஜைக்கு நேரவிருந்த இடையூறை தடுக்கும் நோக்கத்துடன் என்பதால் பாதகச் செயலாக கருதப் படவில்லை. தந்தையின் காலை வெட்டியிருந்தாலும் எந்த நோக்கத்திற்காக வெட்டினார் என்பதைக் சிந்திக்கும்போது தான் நாம் சண்டீசரின் பெருமையை உணர முடியம். சிவபூஜைக்கு இடைஞ்சல் செய்ததைக் கண்டு பொறாத அரும் குணம் என்பதால் இவரது செய்கை போற்றப் பட்டது. இதனை நேர்த்தியாக அப்பர் பிரான் ஆரூர் பதிகத்தில் கூறுகிறார். சிவனின் தியானத்தைக் கலைக்க முயற்சி செய்தவன் மன்மதன், அவன் பயன்படுத்தியது மென்பொருள் ஆகிய கரும்பு வில் தான். இருந்தாலும் அவனது நோக்கம் கருதி அவனுக்கு தண்டனையும் சண்டீசரின் நோக்கம் கருதி அவருக்கு புகழும் பதவியும் அளித்தமை குறிக்கும் பாடல் இது தான்.

    கரும்பு பிடித்தவர் காயப்பட்டார் அங்கு ஓர் கோடலியால்
    இரும்பு பிடித்தவர் இன்புறப்பட்டார் இவர்கள் நிற்க
    அரும்பு அவிழ் தண் பொழில் சூழ் அணி ஆரூர் அமர்ந்த பெம்மான்
    விரும்பு மனத்தினை யாது ஒன்று நான் உன்னை வேண்டுவனே 

மாணிக்க வாசகரும் தனது தோணோக்கம் பதிகத்தில் சிவபூசனைக்கு இடையூறு செய்த தந்தையின் கால்களை வெட்டியது தவறான செய்கை அல்ல என்று கூறுவது இங்கு நினைவுறத் தக்கது. திருமூலரும், தனது திருமந்திரப் பாடலில் சண்டீசர் குறித்து பாடல் இயற்றி இருக்கின்றார். கண்ணப்பர், சண்டீசர் இருவருமே, திருமூலராலும், மணிவாசகப் பெருமானாலும் குறிப்பிடப்படும் பேறு பெற்ற அடியவர்களாக திகழ்கின்றனர். சோறு=முக்தி உலகம்;

    தீதில்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்
    சாதியும் வேதியன் தாதை தனைத் தாள் இரண்டும்
    சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப்
    பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்

பாதகத்திற்கு பரிசு என்று சேக்கிழார் குறிப்பிடுவது நமக்கு திருப்பல்லாண்டு பதிகத்தின் பத்தாவது பாடலை நினைவூட்டுகின்றது. அண்டம்=வானுலகம்; போனகம்=தான் உண்டு எஞ்சிய உணவு; பொன்=அழகு; தாமம்=கொன்றை மாலை;

    தாதையைத் தாள் அற வீசிய சண்டிக்கு அண்டத்தொடும் உடனே
    பூதலத்தோரும் வணங்கப் பொற்கோயிலும் போனகமும் அருளிச்
    சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
    பாதகத்துக்கே பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே  

தந்தையின் கால்களை வெட்டிய சண்டீசர் என்று மேற்குறித்த பாடல்கள் குறிப்பிட்டுள்ளன. எனினும் பெரிய புராணத்தில் சண்டீசர் வரலாறு ஒரு சிறிய மாறுதலுடன் கொடுக்கப் பட்டுள்ளது. தான் மணலில் பிடித்து வழிபட்டு வந்த இலிங்கத்திற்கு நீராட்டும் பொருட்டு பால் வைத்திருந்த பாற்குடங்களை காலால் இடறிய எச்சத்தத்தன் செய்கையால் பால் கீழே சிந்தியது என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். பால் சிந்தியதைக் கண்ட விசாரசருமன் (சண்டீசரின் இயற்பெயர்) மேலும் அத்தகைய இழிசெயல்கள் நடப்பதை தடுக்கும் நோக்கத்துடன், தனது தந்தை என்று அறிந்த பின்னரும், அருகில் இருந்த கொம்பு ஒன்றினை எடுத்து தந்தையின் கால்கள் மீது வீசினார். ஆனால் அந்த கொம்பு மழு ஆயுதமாக மாறி அவரது தந்தையின் கால்களை வெட்டியது. எனவே கொம்பு மழு ஆயுதமாக மாறியது இறைவன் திருவுள்ளம் பற்றியதால் என்பதையும் தனது தந்தையின் கால்களை வெட்டுவது சண்டீசரின் நோக்கம் அல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சி சிவபூஜைக்கு இடையூறு செய்பவர்களுக்கு இறைவன் உடனே தண்டனை அளிப்பார் என்பதையும் உணர்த்துகின்றது. தான் செய்து வந்த பூஜைக்கு ஏற்பட்ட இடையூறு நீங்கிய பின்னர், தனது வழிபாட்டினைத் தொடர்ந்து செய்வதற்கு விசாரசருமன் முனையும் போது இறைவன், விடை மேல் அமர்ந்தவராய் தேவியோடும் காட்சி கொடுத்தார். பெருமானைக் கண்ட விசாரசருமர் அவரது திருப்பாதங்களில் விழுந்து வணங்க, பெருமான் அவரை எடுத்து நோக்கி என் பொருட்டு உனது தந்தை விழுமாறு கொம்பு எறிந்த உமக்கு அடுத்த தாதை இனியுனக்கு நாம் என்று சொல்லியவாறு, சிறுவனை எடுத்து உச்சி மோந்து மகிழ்ந்தார். இவ்வாறு பெருமானே நீ எனது மகன் என்று சண்டீசரை அழைத்தமை உணர்த்தும் பொருட்டு பெரிய புராணப் பாடலில் பிள்ளையார் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். 

    தொடுத்த இதழி சூழ் சடையார் துணைத் தாள் நிழல் கீழ் விழுந்தவரை
    எடுத்து நோக்கி நம் பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய்
    அடுத்த தாதை இனியுனக்கு நாம் என்று அருள் செய்து அணைத்து அருளி.   
    மடுத்த கருணையால் தடவி உச்சி மோந்து மகிழ்ந்து அருள

வாழ்க அந்தணர் வானவர் எனத் தொடங்கும் பதிகத்தில் ஒரு பாடலில் (3.54.7) சண்டீசரைப் பற்றி குறிப்பிடும் போது, சிவனின் பூஜைக்கு இடையூறு செய்த கால் வெட்டப்பட்டது என சம்பந்தர் கூறுகிறார். சண்டீசர் நறுமணமுடைய மலர்களைத் தூவிப் போற்றி, நல்ல பசுவின் பால் கொண்டு மணல் இலிங்கத்திற்கு திருமுழுக்காட்ட, அதனைக் கண்ட அவரது தந்தை பால் வீணாக்கப்படுவதை கண்டு பொறுக்காமல் கோபம் கொண்டு பாற்குடங்களை இடற, சிவபூஜைக்கு இடையூறு செய்த கால் மீது அருகிலுள்ள கோல் கொண்டு சண்டீசர் வீசியெறிய, அந்த கோல் மழு ஆயுதமாக மாறி அவரது தந்தையின் காலை வெட்ட, நடந்ததைக் கண்டு மகிழ்ந்த முக்கண் பெருமான் சண்டீசருக்கு தனது திருவடிபேற்றினை அருளியதை அனைவரும் அறிவோம் அல்லவா என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார்   

    கடி சேர்ந்த போது மலர் ஆன கை கொண்டு நல்ல
    படி சேர்ந்த பால் கொண்டு அங்கு ஆட்டிடத் தாதை பண்டு
    முடி சேர்ந்த காலை அற வெட்டிட முக்கண் மூர்த்தி
    அடி சேர்ந்த வண்ணம் அறிவார் சொலக் கேட்டும் அன்றே

 
மகனாக வரித்துக் கொண்ட பின்னர் அந்த மகன் உண்பதற்கும் உடுப்பதற்கும் வேண்டிய தேவைகளை நிறைவேற்றுவது தந்தையின் கடமை அல்லவா. எனவே தான் அடுத்து, நாம் உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காக என்று பெருமான் கூறியதையும் நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். இன்றும் நாம் சிவாலயங்களில் பெருமானின் சன்னதிக்கு இடது புறத்தில் சண்டீசர் சன்னதி இருப்பதை காணலாம். தனக்கு வரும் பொருட்களை பெருமான், தனது வலது கையால் சண்டீசர் இருக்கும் பக்கம் தள்ளி, தந்தையாகிய தனது கடமையை செய்வதாக ஐதீகம். இதனை உணர்த்தும் பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

    அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்து நாம்
    உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச்
    சண்டீசனுமாம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொற்றடமுடிக்குத்  
    துண்ட மதி சேர் சடைக் கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார் 

இந்த தலம் கும்பகோணம் திருப்பனந்தாள் சாலையில் ஆடுதுறைக்கு அருகே அமைந்துள்ள தலம். சேங்கனூர் என்று இந்நாளில் அழைக்கப்படுகின்றது. கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தலம். இறைவன் பெயர் சத்யகிரீசுவரர்; இறைவியின் பெயர் சகிதேவி; இந்த தலத்து இறைவன் குறித்து திருஞானசம்பந்தர் பாடிய இந்த ஒரு பதிகமே இதுவரை கிடைத்துள்ளது. சிவபிரானின் குழந்தை (சேய்) ஆகிய முருகப்பெருமான் வழிபட்ட தலம் என்பதால் சேய்நல்லூர் (சேய் + நல்லூர்) என்ற பெயர் பெற்றது. இந்த பெயர் நாளடைவில் சேய்ஞலூர் என்று மருவி விட்டது. முருகப்பெருமான் கயிலை மலையிலிருந்து வீரமகேந்திரபுரம் செல்லும் வழியில் மண்ணியாறு தாண்டிச் செல்லும் போது மாலை நேரம் ஆகியதால், இங்கே படைவீடு அமைத்து தங்கியதாக கந்த புராணம் குறிப்பிடுகின்றது. சேக்கிழாரும் இந்த தகவலை பெரிய புராணத்தில் தருகின்றார்.

    பூந்தண் பொன்னி எந்நாளும் பொய்யாது அளிக்கும் புனல் நாட்டு
    வாய்ந்த மண்ணித் தென் கரையில் மன்ன முன்னாள் வரை கிழிய
    ஏந்தும் அயில் வேல் நிலை காட்டி இமையோர் இகல் வெம் பகை கடக்கும்
    சேந்தன் அளித்த திருமறையோர் மூதூர் செல்வச் சேய்ஞலூர்

 
பாடல் 1:

    நூல் அடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
    மால் அடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை
    ஆல் அடைந்த நீழல் மேவி அருமறை சொன்னது என்னே
    சேல் அடைந்த தண்கழனி சேய்ஞலூர் மேயவனே

விளக்கம்:

நூல்=வேதம் மற்றும் சிவ ஆகமங்கள்; மால்=ஐயப்பாடு; மால் என்ற சொல்லுக்கு காதல் மயக்கம் என்று ஒரு பொருளும் உள்ளது. என்னே, வியப்புக் குறிச்சொல். பெருமானின் கருணைத் திறத்தினை வியந்து சொல்லியது. நல்லறம்=சிவதன்மம்; நால்வர்=சனந்தனர், சனத்குமாரர், சனாதனர், சனகர் ஆகியோர்; பிரமனின் மனதிலிருந்து தோன்றியவர்கள் என்பதால் மானச புத்திரர்கள் என்று கூறுவார்கள்.   

பொழிப்புரை:

வேதங்கள் ஆகமங்கள் ஆகிய பல நூல்களைக் கற்ற பின்னரும், பெருமானின் திருவடியை கூறும் மார்க்கம் தெளிவாக புரியாமல், தங்களது அஞ்ஞானம் நீங்காததால், உண்மை யாது என்று புரிந்து கொள்ள முடியாமல் மயக்க நிலையில் இருந்த சனகர் சனாதனர் சனந்தனர் மற்றும் சனத்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களும் தங்களது ஐயப்பட்டினை விளக்க வேண்டும் என்று பெருமானிடம் வேண்ட, அதற்கு இசைந்த பெருமானும் ஆலமரத்தின் நிழலில் பொருந்தி அமர்ந்தவாறு அரிய மறைகளின் பொருளை விளக்கிய அவரது கருணைத் திறம் மிகவும் வியக்கத்தக்கது. அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான் சேல் மீன்கள் நிறைந்த குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட சேய்ஞலூர் தலத்தில் பொருந்தி உறைகின்றான்.        

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com