126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 11

பிறவிகளில் நல்வினைகள் புரிந்தவர்கள்
126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 11


பாடல் 11

    புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர்
    விண்ணவர் அடி தொழ விளங்கினானை
    நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை
    பண்ணிய அருந்தமிழ் பத்தும் வல்லார்
    நடலை அவை இன்றிப் போய் நண்ணுவர் சிவனுலகம்
    இடராயின இன்றித் தாம் எய்துவர் தவநெறியே

விளக்கம்:

நடலை=துன்பம்; பிறவி எடுத்தால் உயிர்கள் அனுபவிக்கும் துன்பங்கள்; புண்ணியர்=சென்ற பிறவிகளில் நல்வினைகள் புரிந்தவர்கள்; சென்ற பிறவிகளில் நல்வினைகள் செய்தவர்களே இந்த பிறவியில் பெருமானை தொழுதெழும் சிந்தை உடையவர்களாக இருப்பார்கள் என்பதை சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். இந்த கருத்து நமக்கு அப்பர் பிரான் திருவாரூர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடல் (5.07.2) ஒன்றினை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. தனது நெஞ்சத்தினை நோக்கி அப்பர் பிரான், நெஞ்சமே ஆரூர் அரநெறி அப்பன், உனது சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்க நீ என்ன தவம் செய்தாய், என்று வினவுகின்றார். 

    என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே
    பந்தம் வீடு அவை ஆய பராபரன்    
    அந்தமில் புகழ் ஆரூர் அரநெறி
    சிந்தையுள்ளும் சிரத்துளும் தங்கவே

முன்னைப் பிறவியின் நல்வினையால், வலஞ்சுழிப் பெருமானை வழிபடும் வாய்ப்பு இந்த பிறவியில் கிடைத்தது என்று இந்த பாடலில் (2.106.1) ஞானசம்பந்தர் சொல்லி மகிழ்கின்றார்.

    என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து
    முன்ன நீ புரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
    மன்னு காவரிசூழ் திருவலஞ்சுழி வாணனை வாயாரப்
    பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே

அப்பர் பெருமான் முந்தைய பிறவியில் செய்த தவத்தின் பயனாகத் தான், இந்த பிறவியில் சிவபெருமானால் ஆட்கொள்ளப் பட்டார் என்ற செய்தி சிவபெருமானின் வாய்மொழியாக வருவதை பெரிய புராணத்தில் சேக்கிழார் சுட்டிக் காட்டுகின்றார். அவரது தமக்கை திலகவதியார், சிவபெருமானிடம் மாற்று சமயத்தில் இருக்கும் தனது தம்பி மீண்டும் சைவ சமயத்திற்கு வரவேண்டும் என்று வேண்டியபோது, சிவபெருமான் அவரது கனவில் தோன்றி, அஞ்சற்க, சூலை நோய் கொடுத்து அவனை நாம் ஆட்கொள்வோம்; அவன் முன்னமே முனியாகி என்னை அடையத் தவம் செய்தவன் என்று கூறுவதை இந்த பாடலில் நாம் உணரலாம்.

    மன்னு தபோதனியார்க்குக் கனவின் கண் மழவிடையார்
    உன்னுடைய மனக்கவலை ஒழி நீ உடன்பிறந்தான்
    முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான்
    அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வோம் என அருளி

சென்ற பிறவியில் நாம் செய்த நல்வினைகள் தாம், இந்த பிறவியில் நாம் சிவபெருமானை வழிபடத் தூண்டும், இது சிவபெருமானின் அருளால் நிகழ்வது. இதனையே மணிவாசகர் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். இதே கருத்தினை மயிலாடுதுறை மீது அருளிய குறுந்தொகைப் பதிகம் (5.39) ஒன்றினில் அப்பர் பிரான் குறிப்பிடுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். சிவபெருமான் மீது கொண்ட காதலால். அவனது பெருமைகளை அறிந்த தலைவி சிவபெருமானின் நினைவுகளை தனது நெஞ்சினுள்ளே வைத்தும், தலையில் தாங்கியும் பெருமை கொள்கின்றாள். அதற்கு தான் செய்த தவம் என்ன என்று தனது நெஞ்சினை நோக்கி வினவும் பாடல்.

    நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய்
    கலைகள் ஆய வல்லான் கயிலாய நன்
    மலையன் மா மயிலாடுதுறையான் நம்
    தலையின் மேலும் மனத்துளும் நிற்கவே

திருச்சேறை தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடல் ஒன்றிலும் (5.77.2) அப்பர் பிரான் நெஞ்சமே செந்நெறி மன்னு சோதி இறைவனார் உன்னுள் வந்து தங்குவதற்கு நீ என்ன தவம் செய்தாய், என்று வினவுகின்றார். விழுப்பொருள்=கருப்பொருள்; மன்னு சோதி=நிலை பெற்ற சோதி; வைகுதல்=வெளிப் படுதல்:

    என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே
    மின்னு வார் சடை வேத விழுப் பொருள்
    செந்நெலார் வயல் சேறையுள் செந்நெறி
    மன்னு சோதி நம்பால் வந்து வைகவே 

துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.98) ஒரு பாடலில் சம்பந்தர், தான் சென்ற பிறவியில் இறைவனை ஒரு பொழுதும் மறக்காமல் இருந்ததாகவும், அவ்வாறு இருந்த தனக்கு முக்தி அளிக்காமல் மறுபடியும் மண்ணுலகில் பிறக்கச் செய்தது ஏன் என்றும் வினவுவதை நாம் இந்த பாடலில் உணரலாம். பிறப்பிறப்பினைத் தவிர்க்கும் வழியை நீ எனக்கு உணர்த்தாமல், பிறவிப் பிணியினை எனக்குத் தந்து சென்ற பிறவியில் இறக்குமாறும் இந்த பிறவியில் மறுபடியும் இந்த மண்ணுலகில் பிறக்குமாறும் செய்தது நியாயமா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. துறத்தல் என்பதை ஒரு துறவி தான் அடுத்தவருக்கு கற்றுத் தரமுடியும் என்பதால், பகலில் துறவிக் கோலம் பூண்டு வேதங்களை உபதேசம் செய்தவனாகிய துருத்திப் பெருமானை நோக்கி இந்த கேள்வி கேட்கப்படுகின்றது. இவ்வாறு மறுபடியும் நான் பிறப்பு எடுப்பதற்கு நான் செய்த தவறு தான் என்னே என்றும் கேட்கின்றார்.  

    துறக்குமாறு சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி
    மறக்குமாறு இலாத என்னை மையல் செய்து இம்மண்ணின் மேல்
    பிறக்குமாறு காட்டினாய் பிணிப் படும் உடம்பு விட்டு
    இறக்குமாறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே   

கயிலாயத்தில் இறைவனுக்கு அணுக்கத் தொண்டராய் சுந்தரர் வாழ்ந்து வந்ததையும், நம்பி ஆரூரராக தமிழகத்தில் வாழ்ந்த வாழ்க்கை முடிந்தபின்னர் அவர் மீண்டும் கயிலாயம் சென்று இறைவனுடன் இணைந்ததையும் நாம் அறிவோம். திருஞானசம்பந்தர், அப்பர் பிரான், ஆகிய இருவரும் இறைவனுடன் கலந்ததை பெரியபுராணம் எடுத்துச் சொல்கின்றது. தில்லைச் சிற்றம்பலத்தில், திருவாசகத்தின் பொருள் யாது என்று கேட்ட அன்பர்களுக்கு பெருமானை சுட்டிக் காட்டி பெருமானுடன் மணிவாசகர் கலந்தார்; இவ்வாறு நால்வரும் தவநெறியையும் அதன் பயனாக முக்தி நிலையயும் அடைந்தனர்.

வழிவழியாக, பாண்டிய மன்னனுக்கு அமைச்சர் தொழில் செய்து வந்த, ஆமாத்தியர்  குடியில் பிறந்தவர் மணிவாசகர். எனவே சிறு வயதில் அவர் தன்னை, அமைச்சுத் தொழிலுக்கு தகுந்தவனாக உருவாக்கிக் கொள்வதிலும், அமைச்சரான பின்னர், அரசுப் பணிகளில் முழு கவனம் செலுத்துவதிலும் அவர் காலத்தை கழித்திருக்க வேண்டும். அதுவும் முதல் அமைச்சராக பதவி வகுத்த, மணிவாசகருக்கு அரசுப் பணிகள் செய்வதைத் தவிர வேறு எதிலும் நாட்டம் இருந்திருக்காது, அதற்கும் மேலாக நேரமும் இருந்திருக்காது. அதனால் தான், திருஏசறவு பதிகத்தில் நானேயோ தவம் செய்தேன், சிவபெருமானின் திருநாமத்தைச் சொல்வதற்கு என்று மிகவும் வியந்து பாடுகின்றார். சிவபெருமான் இவரைத் தடுத்து ஆட்கொண்ட சமயத்திலும், அரசுப் பணியினை மேற்கொண்டு குதிரைகள் வாங்குவதற்காக தொண்டித் துறைமுகம் நோக்கி மணிவாசகர் சென்று கொண்டிருந்தார். எனவே சிவபெருமான் அவரை ஆட்கொண்டதற்கு காரணம், அவர் சென்ற பிறப்பில் செய்த தவமாகத் தான் இருக்க வேண்டும். இவ்வாறு நால்வருமே, சென்ற பிறப்பில் செய்த தவப் பயனால் எத்தைகைய பேற்றினைப் பெற்றார்கள் என்பதை நாம் உணரலாம். நால்வர் பெருமானார்கள், தாங்கள் பெற்ற பேற்றினை, தங்களது அனுபவத்தினை பாடல்களாக வடித்து, அந்த பாடல்களை பாடுவதன் மூலம் நாமும் இறைவனைப் புகழ்ந்து பாடி மகிழுமாறு செய்துள்ளார்கள்.

    நானேயோ தவம் செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன்
    தேனாய் இன்னமுதமுமாய் தித்திக்கும் சிவபெருமான்
    தானே வந்தெனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள் செய்தான்
    ஊனாரும் உயிர் வாழ்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே   .     
 

பொழிப்புரை:

சென்ற பிறவிகளில் புண்ணியங்கள் செய்தமையால் இந்த பிறவியில் பெருமானைத் தொழும் வாய்ப்பினைப் பெற்ற அடியார்கள் உறையும் புகலி நகரினில், தேவர்கள் தனது திருவடியினைத் தொழும் வண்ணம் வீற்றிருக்கும் பெருமானை, சரண் அடைந்த ஞானசம்பந்தன் இயற்றிய அரிய தமிழ் பாடல்களை பாடும் வல்லமை பெற்ற அடியார்கள், பிறவி எடுப்பதால் வரும் துன்பங்கள் நீங்கும் வண்ணம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று, சிவலோகத்தினை சென்றடைந்து, தடைகள் ஏதும் இன்றி தவ வாழ்க்கையினை மேற்கொள்வார்கள். 

முடிவுரை:

இந்த பதிகத்தின் பாடல்களில் இறைவனது பெருமைகள் குறிப்பிடப்பட்டு, பலதரப்பட்ட அடியார்கள் அவனது அருள் பெரும் தன்மையும் உணர்த்தப் படுகின்றது. தவநெறி தர வேண்டும் என்று பெருமானை நோக்கி பதிகத்தின் மூன்றாவது பாடலில் விண்ணப்பம் வைக்கும் சம்பந்தர், பதிகத்தின் கடைப் பாடலில், இந்த பதிகத்தினை ஓதும் அடியார்கள் தவநெறி எய்துவார்கள் என்று கூறுகின்றார். தனது விருப்பங்களைத் தீர்த்துக் கொண்டு, தங்களின் வழியே உயிரினை நடத்திச் செல்லும் புலன்களின் பிடியிலிருந்து விடுபட்டு செயல்படுவது எளிய காரியம் அல்ல. இறைவனது துணை கொண்டே நாம் இதனைச் செய்ய முடியும். அந்த நிலையே தவநெறிக்கு வழிவகுக்கும். அந்த தவநெறியை எளிதில் அடையும் முறையினை சம்பந்தர் நமக்கு இங்கே கற்றுக் கொடுக்கின்றார். இந்த வழியினை பின்பற்றி, மனம் ஒன்றி பதிகத்தினை ஓதி தவநெறியில் சென்று இறுதியில் இறைவனின் திருவடிகளில் சேர்ந்து என்றும் அழியாத இன்பத்துடன் இருப்போமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com