118. யாமாமாநீ யாமாமா - பாடல் 4

கங்காள வேடம் தாங்கி
118. யாமாமாநீ யாமாமா - பாடல் 4

பாடல் 4:  

    நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
    மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ   
     

விளக்கம்:

    நீவா வாயா கா யாழீ காவோ வான் நோ வாராமே
    மேரா வான் நோ வாவா காழீயா காயா வாவாநீ

நீவா=என்றும் மாறாத; வாயா=உண்மைப் பொருளாக இருப்பவன்; கா=தாங்கிய; காழீ=வீணை; காவோ=காப்பாற்றுவாய்; வான்=உயர்ந்த, இங்கே இகழ்ச்சிக் குறிப்பு தோன்ற கொடுமை செய்வதில் உயர்ந்த நிலையினை உடைய பிறவிப்பிணி என்ற பொருளில் கையாளப் பட்டுள்ளது. கொடுமையில் உயர்ந்த; நோ=பிறவிப்பிணி; வாராமே=எம்மை அடையாமல்; மேரா=மேரு மலையை ஏந்தியவன்; வான்=வானவர்கள்; நோ=திருபுரத்து அரக்கர்கள் செயலினால் தேவர்கள் அடைந்த துன்பம்; வாவா=வந்து அடையாத வண்ணம்; காழீயா=சீர்காழி தலத்தின் தலைவன்; காயா=ஆகாயா என்ற சொல் குறைந்து காயா என்று வந்துள்ளது. இதனை இலக்கணத்தில் முதற்குறை என்று கூறுவார்கள். மூன்றாவது பாடலில் காற்றினை குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில் ஆகாயத்தை குறிப்பிடுகின்றார். வாவா=அடுக்குத் தொடர், விரைவினில் வரவேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம். கையாளப்பட்டுள்ளது. 

வீணை தாங்கிய வண்ணம் பெருமான் இருப்பான் என்று சம்பந்தர் கூறுவது, அப்பர் பிரான் இறைவனை வீணை வாசிக்குமே (4.112.7) என்று குறிப்பிடுவதை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. ஊழிக் காலத்தையும் தாண்டி சிவபெருமான் இருக்கும் நிலையும், உலகினை மறுபடியும் தோற்றுவிக்கும் எண்ணம் கொண்டு, விளையாட்டாக உலகினைத் தோற்றுவித்து, உயிர்கள் தங்களது வினைகளைக் கழித்துக் கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கும் இறைவனின் கருணையும் இந்த பாடலில் அப்பர் பிரானால் உணர்த்தப் படுகின்றது. களேபரம்=உயிரற்ற உடல்: பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் தெய்வங்களாக கொண்டாடப்படினும், அவர்களுக்கும் முடிவு என்பது உண்டு என்பதும், சிவபெருமான் ஒருவன் தான் முடிவில்லாதவன் என்பதையும் உணர்த்தும் பொருட்டு, பிரமன் மற்றும் திருமால் ஆகியோரின் உடல்களை தோள் மேல் போட்டுக் கொண்டு சிவபெருமான் கங்காள வேடம் தாங்கி இருப்பதாக இங்கே கூறப்படுகின்றது. பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் காத்தல் தொழிலையும் அழித்தல் தொழிலையும் செய்யும் பெருமான் என்று குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில் பெருமான் உலகின் தோற்றத்திற்கு ஆதாரமாக பெருமான் இருக்கும் நிலையினை குறிப்பிடுகின்றாரர். 

    பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் போய்
    இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
    கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய்
    வரும் கடன் மீள நின்று எம்மிறை நல்வீணை வாசிக்குமே 
 

பொழிப்புரை:

என்றும் மாறாத உண்மைப் பொருளாக இருப்பவனும், பிரளயம் முடிந்த பின்னர் தனது கைகளில் வீணை தாங்கிய வண்ணம் மீண்டும் உலகத்தினை தோற்றுவிக்கும் எண்ணத்துடன் இருப்பவனும் ஆகிய பெருமானே, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து எங்களை விடுவித்து கொடிய பிறவித்துயர் வாராமல் எங்களைக் காப்பாற்றுவாயாக. பண்டைய  நாளில் திரிபுரத்து அரக்கர்களால் தேவர்களுக்கு துன்பம் வந்து அடையாத வண்ணம் மேரு மலையினை வில்லாக வளைத்து திரிபுரங்களை அழித்து அருள் புரிந்தவனே, சீர்காழி நகரத்து தலைவனே, ஆகாயம் முதலாக ஐந்து பூதங்களாக இருப்பவனே, நீ விரைந்து வந்து எங்களுக்கு அருள் புரிவாயாக.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com