ஐபிஎல் 2018: தமிழக வீரர்கள் சாதித்தது என்ன?

ஐபிஎல் போட்டியில் விளையாடிய ஆறு தமிழக வீரர்களும் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்...
ஐபிஎல் 2018: தமிழக வீரர்கள் சாதித்தது என்ன?

இந்த வருட ஐபிஎல் போட்டியில் 8 தமிழ்நாட்டு வீரர்கள் இடம்பிடித்தார்கள்.

ஐபிஎல் 2018: தமிழ்நாட்டு வீரர்கள் - சம்பளம்

1. ஆர். அஸ்வின் (பஞ்சாப்) - ரூ. 7.60 கோடி
2. தினேஷ் கார்த்திக் (கொல்கத்தா) - ரூ. 7.40 கோடி  
3. விஜய் சங்கர் (தில்லி) ரூ. 3.20 கோடி 
4. வாஷிங்டன் சுந்தர் (பெங்களூர்) - ரூ. 3.20 கோடி 
5. எம். அஸ்வின் (பெங்களூர்) - ரூ. 2.20 கோடி
6. முரளி விஜய் (சென்னை) - ரூ. 2 கோடி 
7. நடராஜன் (ஹைதராபாத்) - ரூ. 40 லட்சம் 
8. ஜெகதீசன் (சென்னை) - ரூ. 20 லட்சம் 

இந்த வருட ஐபில் ஏலம் தமிழக வீரர்கள் சிலரை ஏமாற்றமடையவும் செய்தது. இளம் வீரர் பாபா அபரஜித்தும் அவரது சகோதரர் இந்திரஜித்தும் எந்த அணிக்கும் தேர்வாகவில்லை. அபினவ் முகுந்த், ரஹில் ஷா, அதிசயராஜ் டேவிட்சன், சாய் கிஷோர், சஞ்சய் யாதவ் போன்ற தமிழக வீரர்களையும் எந்த அணியும் சீந்தவில்லை.

8 தமிழக வீரர்களில் இருவருக்கு மட்டும் ஓர் ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. சென்னை அணிக்குத் தேர்வான ஜெகதீசன் மற்றும் ஹைதராபாத் அணிக்குத் தேர்வான டி. நடராஜன். 

ஐபிஎல் போட்டியில் விளையாடிய ஆறு தமிழக வீரர்களும் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்? பார்க்கலாம்.

தினேஷ் கார்த்திக்

கொல்கத்தாவின் கேப்டன். அந்த அணி பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றதால் அடுத்த வருடமும் தினேஷ் கார்த்திக்கே கேப்டனாக நீடிப்பார் என நிச்சயமாகச் சொல்லலாம். கொல்கத்தா அணியில் இந்த வருடம் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு.

16 ஆட்டங்களில் 498 ரன்கள். சராசரி - 49.80. ஸ்டிரைக் ரேட் - 147.77.

ஆர். அஸ்வின்

பஞ்சாப் அணியின் கேப்டன். பிளேஆஃப் வாய்ப்பைக் கடைசி சமயத்தில் தவறவிட்டார். இதனால் அடுத்த வருடமும் கேப்டனாக நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் இந்திய அணிக்கு அஸ்வினால் தேர்வாக முடியவில்லை. 

பேட்டிங்: 14 ஆட்டங்களில் 102 ரன்கள். சராசரி - 12.75, ஸ்டிரைக் ரேட் - 143.66.

பந்துவீச்சு: 14 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகள். எகானமி - 8.09.

விஜய் சங்கர்

13 ஆட்டங்களில் 212 ரன்கள். ஸ்டிரைக் ரேட் - 143.24.

சென்னையைச் சேர்ந்த விஜய் சங்கர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இரு ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடி 28 பந்துகளில் 36*, 31 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். 

பின்வரிசையில் களமிறங்கி, 7 இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார் விஜய் சங்கர். 

பந்துவீச்சில்தான் ஏமாற்றிவிட்டார். 13 ஆட்டங்களில் நான்கில் மட்டுமே பந்துவீச வாய்ப்பு கிடைத்தது. 1 விக்கெட் மட்டுமே எடுத்தார். எகானமி - 11.60. பாண்டியாவுக்கு மாற்றாக எதிர்பார்க்கப்படும் விஜய் சங்கர், பந்துவீச்சில் முன்னேற்றம் காண்பித்திருக்கலாம். 

வாஷிங்டன் சுந்தர்

கடந்த ஐபிஎல்-லில் அசத்தியதால் இந்திய அணியிலும் இடம்பிடித்த வாஷிங்டன் சுந்தர், இந்த வருட ஐபிஎல்-லில் எதிர்பாராதவிதமாகச் சொதப்பினார். இப்படியொன்று நடக்குமென்று யாருமே நினைக்கவில்லை. 7 ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய வாஷிங்டன், 20 ஓவர்களில் வீசி 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். எகானமி - 9.60. 

பேட்டிங்கில், 6 இன்னிங்ஸில் 65 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 171.05. ஒரே ஒரு ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 35 ரன்கள் எடுத்தார். 

2018 ஐபிஎல், வாஷிங்டன் சுந்தர் மறக்க நினைக்கும் ஒன்றாக அமைந்துவிட்டது. 

எம். அஸ்வின்

இவரும் பெங்களூர் அணியில் இடம்பெற்று 2 ஆட்டங்களில் மூன்று விக்கெட்டுகள் எடுத்தார். எகானமி - 7.57. ஐபிஎல்-லின் கடைசிக்கட்டத்தில் மொயீன் அலி, சாஹலுக்குத் துணையாக அமைந்ததால், எம். அஸ்வினுக்கு வாய்ப்புகள் மேலும் கிடைக்கவில்லை. 

முரளி விஜய்

ஷேன் வாட்சன், ராயுடு, டு பிளெஸ்ஸிஸ் என தொடக்க வீரர்களாக விளையாட மூன்று வீரர்கள் தயாராக இருந்ததால் சென்னை அணியில் விஜய்க்கு ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆட்டத்திலும் 12 ரன்கள் மட்டுமே எடுத்ததால் கடைசிவரை அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com