அப்புறப்படுத்த முடியாத சீமைக் கருவேல மரங்கள்!

சுற்றுச்சூழலுக்குப் பெருங்கேட்டை விளைவிக்கும் சீமைக் கருவேல மரங்களை நீர்நிலைகளில் இருந்தும், பொது இடங்களில் இருந்தும் அப்புறப்படுத்த வேண்டும் என கடந்த 2013-இல் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை
அப்புறப்படுத்த முடியாத சீமைக் கருவேல மரங்கள்!

சுற்றுச்சூழலுக்குப் பெருங்கேட்டை விளைவிக்கும் சீமைக் கருவேல மரங்களை நீர்நிலைகளில் இருந்தும், பொது இடங்களில் இருந்தும் அப்புறப்படுத்த வேண்டும் என கடந்த 2013-இல் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்தது.

தமிழ்நாடு அரசும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற கொள்கை முடிவையும் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, வழக்கம்போல தலைமையிடத்திலிருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தொடர்புடைய உயர் அலுவலர்களுக்கு நீதிமன்றத்தின் உத்தரவின் நகல் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான குறிப்புகள் அனுப்பிவைக்கப்பட்டன.

மாநிலத்தின் மிகச் சில இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கின்றன. சில இடங்களில் தன்னார்வ அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று நீர்நிலைகளில் இருந்த சீமைக் கருவேல மரங்களை அகற்றியிருக்கின்றனர்.

ஓரிரு இடங்களில் நீர்நிலைகளில் இறங்கி, இவற்றை அகற்றிய நபர்கள் மீது வனத் துறை வழக்குப் பதிவும் செய்திருக்கிறது. ஆனால், பெரும்பாலான நீர்நிலைகளில் சீமைக் கருவேல மரங்கள் இன்னமும் அகற்றப்படாமல், அப்படியே அடர்ந்து கிடக்கின்றன.

சீமைக் கருவேல மரம் குறித்து ஏராளமான பாதிப்புகள் வரிசைப்படுத்தப்பட்டாலும், அதன் முக்கியமானவற்றில் முதல் இடத்தைப் பிடிப்பது, அந்த மரம்- தன்னருகே வேறெந்த மரத்தையோ, செடியையோகூட வளர விடாது என்பதுதான். கூடுதலாக, தண்ணீரை அளவுக்கதிகமாக உறிஞ்சும் என்பதும், வேரோடு பிடுங்காவிட்டால் அவ்வளவு சுலபமாக அவற்றை அழிக்க முடியாது என்பதும் சீமைக் கருவேல மரத்தில் உள்ள பிரச்னைகள்.

அகற்றுவதில் என்ன சிக்கல்? நீதிமன்றம் அறிவுறுத்தியும், அரசு கொள்கை முடிவாக ஏற்றுக் கொண்டும் சீமைக் கருவேல மரத்தை அகற்றுவதில் என்ன பிரச்னை? என பொதுப் பணித் துறை அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டுமானால் வனத் துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஏனென்றால், ஒரு காலத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பைத் தடுக்கவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருமானத்தை உருவாக்கவும், சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டத்தில் வனத் துறையே பல இடங்களில் கருவேல மரங்களை நட்டன.

அவற்றை அகற்ற வேண்டுமானால், மரங்களுக்குரிய மதிப்பீட்டை வனத் துறை அதிகாரிகள் தர வேண்டும். பெரும்பாலான இடங்களில் இந்த மதிப்பீட்டை வனத் துறையினர் தருவதில்லை. அதனால் எல்லாப் பணிகளும் அப்படியே தேங்கிக் கிடக்கின்றன. இந்தப் பிரச்னையை மாநிலத் தலைமையிடத்திலுள்ள உயர் அலுவலர்களிடமும் தெரிவித்திருக்கிறோம் என்றனர்.

இதுகுறித்து சூழலியல் ஆர்வலர் ரமேஷ் கருப்பையா கூறியதாவது:
நீர்நிலைகளான குளம், ஏரி, கண்மாய்களில் வனத் துறை நட்டு வளர்த்தது நாட்டுக் கருவை மரங்களை. கூடவே, சீமைக்கருவை மரங்களும் அடர்ந்து வளர்ந்துவிட்டன. நாட்டுக் கருவைக்குத்தான் வனத் துறையிடம் மதிப்பு இருக்கிறது. சீமைக்கருவைக்கு வனத் துறையிடம் மதிப்பு ஏதும் இல்லை.
நேரில் பார்வையிட்டு மதிப்பிட்டுத் தர அதிகாரிகளுக்கு போதிய அறிவுறுத்தல்கள் இல்லை; ஆர்வமும் இல்லை. அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் வனத் துறையினரையும் அழைத்துப் பேசி படிப்படியாகப் பணிகளை முடிக்கலாம். ஆனால், அதற்கு யாரும் அக்கறை காட்டுவதில்லை. தன்னார்வலர்களாக முன்வருவோரிடம் கருவேல மரத்துக்குரிய பணத்தைக் கட்டச் சொல்லி வற்புறுத்துவதும் தொடர்கிறது.

இத்தோடு முடிந்தது பிரச்னை என்றுவிட முடியவில்லை. ஒரு குளம் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமானது என்றால், அதிலே கருவேல மரம் வளர்ந்திருந்தால், வனத் துறையையும் பார்க்க வேண்டும். மீன் வளர்க்கப்பட்டால் மீன் வளத் துறையைச் சந்திக்க வேண்டும். குடிநீருக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளையும் சந்திக்க வேண்டும். ஆபத்தான ஒன்றை அகற்ற இத்தனை நடைமுறைகள் எதற்கு எனத் தெரியவில்லை என்றார் அவர்.

தமிழக முதல்வர் இதில் சிறப்புக் கவனம் செலுத்தி, எளிய நடைமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் விரைவாக வெளியிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com