இலக்கிய ஆற்றலால் தேச ஒற்றுமைக்கு வித்திட்டவர் பாரதியார்: தினமணியின் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழாவில் தமிழக ஆளுநர் பேச்சு

விடுதலைப் போராட்ட காலத்தில் இலக்கிய ஆற்றலின் மூலம் தேச ஒற்றுமையை வளர்த்த பெருமை மகாகவி பாரதியாரைச் சாரும். தனது வாழ்நாளில் தொலைநோக்குப் பார்வை
பாரதி மணிமண்டபத்தில்  தினமணி சார்பில் நடைபெற்ற பாரதி தரிசனம் ஒரு பன்முகப் பார்வை என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் பேசுகிறார் பாரதி ஆய்வாளர் இளசை மணியன்.
பாரதி மணிமண்டபத்தில்  தினமணி சார்பில் நடைபெற்ற பாரதி தரிசனம் ஒரு பன்முகப் பார்வை என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் பேசுகிறார் பாரதி ஆய்வாளர் இளசை மணியன்.


விடுதலைப் போராட்ட காலத்தில் இலக்கிய ஆற்றலின் மூலம் தேச ஒற்றுமையை வளர்த்த பெருமை மகாகவி பாரதியாரைச் சாரும். தனது வாழ்நாளில் தொலைநோக்குப் பார்வை கொண்டவராக மட்டுமன்றி தீர்க்கதரிசியாகவும் பாரதி திகழ்ந்தார் என்று புகழாரம் சூட்டினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்த நாள் விழாவில், தினமணி நாளிதழ் சார்பில் மகாகவி பாரதியார் விருது, ரூ.1 லட்சத்துக்கான பொற்கிழி, தகுதிச் சான்றிதழ், பாரதியின் ஓவியம் ஆகியவற்றை மூத்த பாரதி அறிஞர் சீனி.விஸ்வநாதனுக்கு வழங்கி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியது:
பாரதியார் பிறந்த மண்ணான எட்டயபுரத்தில் உள்ள அவருடைய மணிமண்டபத்தில் தினமணியின் சார்பில் நடைபெறும் மகாகவி பாரதியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தேசப்பற்றுமிக்க கவிஞரான மகாகவி சுப்பிரமணிய பாரதியார், தனது சிந்தனைகளையும், தேசிய உணர்வையும் பரப்பி சுதந்திர உணர்வைத் தூண்டி முன்னணி போராட்டக்காரராகத் திகழ்ந்தார். அவருடைய எழுத்துகளும், கவிதைகளும் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களை தன்னெழுச்சியுடன் சுதந்திரப் போராட்டக் களத்தில் பங்கேற்கச் செய்தது.
பள்ளி மாணவராக இருந்தபோதே தன்னுடைய அசாத்திய கவிப் புலமையால், எட்டயபுரம் ஜமீன்தாரின் கவனத்தை ஈர்த்தார் சுப்பிரமணியம். அவருடைய கவித்திறமையைக் கண்டு வியந்த ஜமீன்தார் அவருக்கு 11 வயதில் பாரதி என்ற பட்டத்தை வழங்கினார். 1904-ஆம் ஆண்டு சிறிது காலம் மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய பாரதியார், பின்னர் அங்கிருந்து சென்னைக்கு சென்றார். சுதேசமித்ரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்த பாரதி, ஆங்கிலேய ஆட்சியாளர்களைக் கடுமையாக விமர்சித்து எழுதினார். அதன்மூலம், பத்திரிகை உலகிலும் பாரதியாருக்கு தனித்துவமான இடம் கிடைத்தது.
1907ஆம் ஆண்டு சூரத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க காங்கிரஸ் கூட்டத்தில் வ.உ.சிதம்பரனாருடன் பங்கேற்ற பாரதி, ஆங்கிலேயர் மீது கடுமையான தாக்குதலை நடத்தும் திலகரின் முடிவுக்கு ஆதரவு அளித்தார். இதன்மூலம் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் நேரடிக் கோபத்திற்கு ஆளானார்.
1908-ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் கைதாவதிலிருந்து தப்பிக்க, பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரிக்கு இடம்பெயர்ந்தார் பாரதியார். அங்கிருந்தபடியே இந்தியா, விஜயா போன்ற தமிழ் இதழ்களையும், பாலபாரதம், சூர்யோதயம் இதழ்களையும் நடத்தினார். புரட்சிக் கவிஞராக விளங்கிய பாரதியார், தன்னுடைய தமிழ் இலக்கிய ஆற்றல் மூலம் தேச ஒற்றுமையை வளர்த்தார். தொலைநோக்குப் பார்வை கொண்டவராக மட்டுமன்றி, தீர்க்கதரிசியாகவும் பாரதி விளங்கினார்.
அதனால்தான் நாடு சுதந்திரம் பெறுவதற்கு 39 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என பாடினார் பாரதி. அவருடைய தீர்க்கதரிசனம் உண்மையானது.
பாரதியின் எழுத்துகள் கருத்து வளமிக்கதாக மட்டுமன்றி, சமூக மேம்பாட்டுக்கானதாகவும் அமைந்தன. அனைத்து வயதினருக்கான பாடல்களையும் பாடியுள்ளார். எளிமையாக இருப்பதாலேயே, இன்றைய குழந்தைகளையும் பாரதியின் பாடல்கள் ஈர்க்கின்றன. உழைக்கும் மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பாடியதால், சாமானிய மக்களும் பாரதியை நேசிக்கும் நிலை ஏற்பட்டதோடு, 20-ஆம் நூற்றாண்டின் தலைமைப் புலவராகவும் பாரதி உயர்ந்து நிற்கிறார்.
பாரதி மறைந்தாலும், அவரது பெயர் நிலைத்து நிற்கிறது. அவரது சொற்களும் அதன் மந்திர சக்தியை இழக்கவில்லை. உத்வேகம், தைரியம், நம்பிக்கை, ஆறுதல் மற்றும் அமைதி ஏற்படுத்தும் சொற்கள் எப்போதுமே ஒருவருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அதுபோல, பாரதியாரின் கவிதைகளும் உலக மக்களுக்கானது மட்டுமன்றி எல்லா காலத்திற்கும் பொருத்தமானதகாவும் விளங்குகின்றன.
பாரதியின் படைப்புகளையும், நாட்டின் ஒற்றுமைக்கான அவரது பங்களிப்பையும் அனைத்து இடங்களிலும் பரப்புரை செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. நாட்டுக்காக எட்டயபுரம் வழங்கிய பாரதி, இன்றைக்கு உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே உயர்ந்து நிற்கிறார். 20-ஆம் நூற்றாண்டு தமிழ் கவிஞர்களில், தன் படைப்புகளின் மூலமாக முடிசூடா மன்னனாக பாரதி விளங்குகிறார். எதிர்கால சந்ததியினரும், பாரதியின் படைப்புகளின் மூலம் உத்வேகம் பெறுவதைத் தொடர வேண்டும். அந்த வகையில், பாரதியின் சிறப்புகள் பல நூற்றாண்டு காலம் வாழும் என்றார் அவர்.
சிலைக்கு மாலை: முன்னதாக பாரதி மணிமண்டபத்திற்கு வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தார். அங்கிருந்து மேடைக்குச் சென்றபோது பாரதி வேடமணிந்து நின்று கொண்டிருந்த குழந்தைகள் ரோஜாக்களை வழங்கி வரவேற்றனர். பின்னர் ஆளுநரை, தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் வரவேற்றார்.
விருது வழங்கும் விழாவில் ஆளுநர் அலுவலக கூடுதல் செயலர் ஆர்.ராஜகோபால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவர் கபில்குமார் சராட்கர், நல்லி குப்புசாமி செட்டியார், பத்திரிகையாளர் மாலன், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கி.பாஸ்கர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன், இளசை மணியன், கவிஞர் யுகபாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மூத்த துணைத் தலைவர் (வணிகம்) ஜெ.விக்னேஷ்குமார் நன்றி கூறினார். கிருங்கை சேதுபதி விழாவை தொகுத்து வழங்கினார்.

பாரதி ஆய்வாளர் சீனி.விஸ்வநாதன்
மகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்த நாளையொட்டி, அவர் பிறந்த எட்டயபுரத்தில் நிகழாண்டு முதல் தினமணி நாளிதழ் சார்பில் மூத்த பாரதி அறிஞர் ஒருவருக்கு மகாகவி பாரதியார் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், இந்த விருது மூத்த பாரதி அறிஞரான சீனி.விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
பாரதியாரின் படைப்புகளைப் பல ஆண்டுகள் ஆய்வு செய்து கால வரிசைப்படுத்தி 12 தொகுப்புகளாக வெளியிட்டிருக்கிறார் சீனி. விஸ்வநாதன். இதுதவிர பாரதியார் குறித்து ஆய்வு செய்து 45 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். பாரதியாரின் படைப்புகளில் ஆழங்காற்பட்ட புலமையுள்ள சீனி.விஸ்வநாதனின் முயற்சியால்தான் அதுவரை வெளியுலகுக்குத் தெரியாத பாரதியார் குறித்த பல்வேறு தகவல்களும் செய்திகளும் ஆவணங்களும் படைப்புகளும் வெளியுலகுக்குத் தெரியவந்திருக்கின்றன.
85 வயதான சீனி.விஸ்வநாதன் 1934-ஆம் ஆண்டு பரமத்திவேலூரில் பிறந்தார். மகாகவி பாரதியாரைப் பற்றிய ஆய்வையே தனது வாழ்நாள் பணியாகச் செய்து வருகிறார்.
1981-82-இல் எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு விழா நடைபெற்றபோது, அதற்காக அப்போதைய அரசு அமைத்திருந்த கமிட்டியில் சீனி.விஸ்வாதனும் இடம்பெற்றிருந்தார். சீனி.விஸ்வநாதன் தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

எட்டயபுரம் மக்களை நலம் விசாரித்த ஆளுநர்...
மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஆளுநர், அனைவருக்கும் வணக்கம். எப்படியிருக்கீங்க, செளக்கியமா? தமிழ் இனிய மொழி என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து பாரதிக்கு மரியாதை செலுத்துவதாகக் கூறிய ஆளுநர், விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பாரதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பாரதியின் சிந்தனைகளை மக்களிடம் சேர்ப்பது நமது கடமை: இளசை மணியன்
மகாகவி பாரதியாரின் சிந்தனைகளை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டுசேர்க்க வேண்டியது தமிழர்களின் கடமை என்றார் பாரதி ஆய்வாளர் இளசை மணியன்.
எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணிமண்டபத்தில் பாரதி தரிசனம் ஒரு பன்முகப் பார்வை என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது:
மகாகவி பாரதியார் சுதந்திரப் போராட்ட வீரர், தேசியக் கவிஞன். அவரது பன்முகத்தன்மை குறித்து நீண்ட நேரம் பேசினாலும் தீர்ந்து போகாது. தேசிய ஒற்றுமை, பெண்ணுரிமையைப் பற்றி அவர் பல இடங்களில் தனது கருத்துகளை ஆழமாக வலியுறுத்தியுள்ளார். பாரதியார் தீவிரவாத தேசிய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். அவர், அந்த இயக்கத்தில் இணைந்த காலத்தில் வடஇந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கோயில்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை சிலர் அரசியல் மேடைகளாக்கினர். இதுபோன்ற நிகழ்வுகள் சிலரது மனதை கஷ்டப்படுத்தும் என்று, தான் நடத்தி வந்த இந்தியா பத்திரிகையில் பாரதியார் சுட்டிக்காட்டினார். மதங்கள் இருக்கலாம், அதில் பிரிவினைகள்கூட இருக்கலாம்; ஆனால், சச்சரவுகள் இருக்கக் கூடாது என்றார்.
இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர் என யாராக இருந்தாலும் இந்நாட்டில் பிறந்தவர்கள் என்ற தேசிய உணர்வு தேவை என்றார். பிற மதங்களில் உள்ள நற்பண்புகளைக் கேட்டறிந்து செயல்படுவதில் எவ்வித தவறுமில்லை என்றார். சமய நல்லிணக்கம், சமயசார்பற்ற தன்மையை முன்னிறுத்தி பல கட்டுரைகளையும், கவிதைகளையும் படைத் துள்ளார் பாரதி. அதன்மூலம் தேசிய ஒற்றுமையை பெரிது என்பதை மக்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார். உன்னுள் நீ கடவுளைப் பார் என்று கூறியதோடு, எல்லா மதங்களும் சமமானவை, உண்மையானவை என்பதே எனது கண்ணோட்டம் என்பதை தமது படைப்புகளால் பாரதியார் வெளிப்படுத்தினார். பாரதியாரின் சிந்தனைகளை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டியது தமிழர்களின் தலையாய கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
இந்தியாவிலேயே கவிஞனுக்கு என முதல் மணிமண்டபம் பாரதியாருக்காகத்தான் கட்டப்பட்டுள்ளது. இங்கு 57 ஆண்டுகளாக கலை இலக்கிய பெருமன்றத்தின் கிளையான பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் சார்பில் விழா நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் கல்கி எடுத்த முயற்சியின் தொடர்ச்சியாக அதே மணிமண்டபத்தில் தினமணியின் சார்பில் மகாகவி பாரதியார் விழா மிகவும் சிறப்பாக நடத்தப்படுவது பாராட்டுக்குரியது என்றார் அவர்.

மகாகவி பாரதி விருது ராம்நாத் கோயங்காவுக்கு சமர்ப்பணம்: சீனி.விஸ்வநாதன் ஏற்புரை
தினமணி சார்பில் வழங்கப்பட்டுள்ள மகாகவி பாரதியார் விருதை, பாரதியாரின் பாடல்களுக்காக விடுதலை பெறுவதற்கு முன்பாகவே குரல் கொடுத்த தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும நிறுவனர் ராம்நாத் கோயங்காவுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார் பாரதி அறிஞர் சீனி.விஸ்வநாதன்.
தினமணி சார்பில் எட்டயபுரத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம், மகாகவி பாரதியார் விருதையும், ரூ.1 லட்சம் பொற்கிழியையும் பெற்றுக் கொண்டபின்பு ஏற்புரையாற்றிய அவர் மேலும் கூறியது: பாரதி பிறந்த இந்த மண்ணில் எனக்கு விருது கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். 1934ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி நான் பிறந்தேன். அதே ஆண்டில் செப்டம்பர் 11இல் தினமணி நாளிதழும் தொடங்கப்பட்டது. அதனால்தான் தினமணிக்கும் எனக்கும் நீண்ட நெடிய தொடர்பிருப்பதாகக் கருதுகிறேன்.
நான் எழுதிய எழுத்துகள், கட்டுரைகள் உள்ளிட்ட பெரும்பாலானவற்றை தினமணி பிரசுரித்துள்ளது. எனது எழுத்துகளுக்கு முழு உரிமை தினமணிக்குத்தான் உண்டு. எனக்கு இந்த விருது வழங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அறிமுகவுரையாற்றிய நல்லி குப்புசாமி செட்டியார், தினமணி குழுமம் ஆகியோருக்கு நன்றி கூறுகிறேன்.
பாரதிக்கும் பத்திரிகை உலக ஜாம்பவானாகத் திகழ்ந்த தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும நிறுவனர் ராம்நாத் கோயங்காவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது ஒரு சிலருக்குதான் தெரியும். 1928ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி பாரதியின் பாடல்களை அப்போதைய சென்னை மாகாண அரசு பறிமுதல் செய்தது. இதற்கு அப்போதைய காங்கிரஸ் நிர்வாகி சத்தியமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் கொண்டு வந்தார். 
அந்தக் காலகட்டத்தில் ராம்நாத் கோயங்கா ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில், தமிழில் எனக்குப் புலமை கிடையாது. தமிழின்அரிச்சுவடிகூட தெரியாது. ஆனால், பாரதியார் பாடல்களை அரசு தடைசெய்திருக்கும்போது நான் பேசாமல் இருக்க முடியாது. தமிழகத்தில் பாரதியார் பாடல்களைப் பாட மக்கள் அனைவருக்கும் உரிமை உண்டு என்பதை அரசு உணர வேண்டும். நான் தமிழகத்தின் பறவைகள் என்று ஆங்கிலத்தில் ஒரு நூல் வெளியிட்டுள்ளேன். அதற்கு ரூ.4 ஆயிரம் செலவானது. அதனை வங்கக்கடலில் தூக்கி எறிந்ததுபோல் நான் கருதுகிறேன் என அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். பாரதிக்கு ஆங்கிலேயர் காலத்தில் எப்படி நெருக்கடி இருந்ததோ, அதேபோல் ராம்நாத் கோயங்காவுக்கு சுதந்திர இந்தியாவில் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. எனக்குக் கிடைத்த இந்த பாரதி விருதை ராம்நாத் கோயங்காவுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார் அவர்.

தமிழ்க் கவிதைகளின் கவிநாயகன்: ம.ராசேந்திரன்
திருநெல்வேலி, டிச. 11: தமிழ்க் கவிதை என்னும் பெண்ணின் கவிநாயகனாகத் திகழ்ந்தவர் மகாகவி பாரதியார் என்று புகழாரம் சூட்டினார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மு.ராசேந்திரன்.
தினமணி சார்பில் எட்டயபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாரதி தரிசனம் ஒரு பன்முகப் பார்வை என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது: பாரதியார் பத்திரிகையாளர் என்பதால் பத்திரிகையாளர் மாலன் உள்ளிட்டோர் பெருமை கொள்வதைப் போல, பாரதியாரும் ஒரு தமிழாசிரியராக தனது பணியைத் தொடங்கியவர் என்பதால் நானும் அவர்களைப் போலவே பெருமையும், பெருமிதமும் அடைகிறேன். தினமணி பாரதிக்காக விழா எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்ற வரிகள் அனைவருக்கும் தெரியும். இதில் உயிர்நாடி எதில் உள்ளதென்றால் இனிதாவது என்பதில்தான்உள்ளது. ஏனெனில் பாரதியார் சம்ஸ்கிருதம், ஆங்கில மொழிகளையும் அறிந்தவர். அவர் இனிய மொழிகள் பல இருந்தாலும், தமிழ் மட்டுமே விநாடிதோறும் இனிதாக ஆகிக்கொண்டிருக்கிறது என்கிறார். ஆவது என்பது ஆனது, ஆகிக்கொண்டிருப்பது, ஆகப்போவது என்று மூன்று காலத்திற்கும் பொருந்தும். இதுவே இக் கவிதையின் உயிர்நாடியாகத் திகழ்கிறது. உயிர்நாடி இல்லாத கவிதைகள் நீண்ட நாள்கள் நிற்க முடியாது.
தமிழின் ஆயுள்காலத்தை மேலும் கூட்டும் பணியில் தினமணி ஈடுபட்டிருகிறது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது தமிழைக் கற்ற வினோபா, திருக்குறள் உள்ளிட்ட தமிழ் நூல்களைப் படித்தபோதும் பாரதியார் பாடல்கள் மீது தீராத காதல் கொண்டிருந்தார். ஏனெனில் பாரதியாரின் பாடல்கள் தங்களுக்கான வழக்கு மொழியில் இருப்பதோடு, இசையும் கொண்டிருப்பதாக கூறினார். பாரதியாரின் குயில் பாட்டு என்பது சரிதானா என்ற சந்தேகம் எழுந்தபோது இன்றையதினம் மகாகவி பாரதியார் விருது பெற்றுள்ள சீனி.விஸ்வநாதன்தான் அந்தக் கவிதைகள் பாரதியாரால் 1914-15ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டது என்பதை உறுதிப்படுத்தினார். பாரதி எப்போதும் ஓர் உள்பொருளை வைத்து பாடுவதில்லை. அவரது கவிதைகளில் பல்வேறு உயிரோட்டத் தகவல்கள் பொதிந்திருக்கும். தமிழ்க் கவிதை என்னும் பெண் பாரதி என்ற கவிநாயகனை சரணடைந்தாள் என்பதே மறுக்க முடியாத உண்மை என்றார்.

அறிஞர்களைக் கொண்டாடுவதே பாரதியின் விருப்பம்: மாலன்
அறிஞர்களைக் கொண்டாட வேண்டும் என்ற பாரதியின் ஒரு விருப்பம் எட்டயபுரம் பாரதி விழா மூலம் நிறைவேறியுள்ளது என்றார் எழுத்தாளர் மாலன்.
நிகழ்ச்சியில் எழுத்தாளர் மாலன் பேசியது:
நம் ஊரில் கவிஞர்களையும் வீரர்களையும் கொண்டாடுவது இல்லை. ஆனால், நாம் அதை செய்ய வேண்டும். அதைப்போல தமிழ்நாட்டில் கம்பனுக்கு தேரிழந்தூரிலும், வள்ளுவனுக்கு மயிலாப்பூரிலும், இளங்கோவுக்கு கரூரிலும் விழா எடுத்துச் சிறப்பிக்க வேண்டும் என்று எழுதிவிட்டு, அதற்கு கீழே அவர்களுக்கு சிலைகள் நிறுவ வேண்டும் என்று பாரதி எழுதுகிறார். வள்ளுவனுக்கும், கம்பனுக்கும், இளங்கோவனுக்கும் சிலை எழுப்ப வேண்டும் என்ற குரலை, போன நூற்றாண்டிலே எழுப்பியவர் பாரதி. அவர்களுடைய பிறந்த தினம் என்ன என்று கண்டறிய முடியாது என்பதால், நவராத்திரியை ஒட்டி வருகிற சரஸ்வதி பூஜையன்று இந்த மூவருக்கும் இந்த ஊர்களில் விழா எடுக்க வேண்டும் என்றும் பாரதி எழுதுகிறார்.
விழா ஏன் கொண்டாடுகிறோம்? நாம் எதை விரும்புகிறோமோ அது தோன்றுகிறது. எதை ஆதரிக்கிறோமோ அது வளர்ச்சி பெறுகிறது. 
பேணாத பண்டம் அழிந்துபோகும். பழக்கத்தில் இல்லாத திறமையும் அழிந்து போகும். அறிஞர்களைக் கொண்டாடாத தேசத்தில் அறவும் வீரமும் அழிந்து போகும்.... என்று பாரதி குறிப்பிட்டுள்ளார். எனவே, எட்டயபுரத்தில் பாரதிக்கு விழா எடுப்பது என்பது, தமிழுக்கு ஒரு கவியரசன் இல்லை என்ற வசை ஒழிந்த நாளைக் கொண்டாடுகிற விழாவாக இருக்கிறது. பாரதி மகாகவியானதற்கு மிக முக்கிய காரணம் அவர் ஒரு பத்திரிகையாளனாக இருத்ததே. இல்லாவிட்டால் அவர் காலத்தில் வாழ்ந்த முதிர்ந்த தமிழறிஞராக மட்டுமே இருந்திருப்பார். உலகம் முழுவதும் போற்றக்கூடியவராக இருந்திருக்க மாட்டார். இது ஒரு பத்திரிகையாளனுக்குரிய விழா என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்றார்.

இதயங்களை இணைத்தவர் பாரதி: ஹாஜா கனி
எல்லோருடைய இதயங்களையும் இணைத்தவர் மகாகவி பாரதி; அவர் இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால் பல சிகரங்களைத் தொட்டிருக்க முடியும் என்றார் பேராசிரியர் ஹாஜாகனி.
நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது: பஞ்சாலை நூல் மானம் காக்கும் வேட்டியானது; பாரதியின் நூல் மானம் மீட்கும் ஈட்டியானது. பாஞ்சாலையைக் கவனித்திருந்தால் பாரதி கந்தலாயிருக்கமாட்டான்; பாரதி கந்தலாகாமல் இருந்திருந்தால் தமிழ்க் கவிதை சலவையாகாமலேயே போயிருக்கும்.
எல்லாருடைய இதயத்தையும் இணைத்தவர் பாரதி. பூனைக்குட்டியை வைத்து இந்த தேசத்துக்கு போதனை செய்தவர். காலத்தை மீறி சிந்தித்தவர். இன்றைய நோய்க்கு அன்றே மருந்து எழுதி வைத்தான். மதங்களின் பெயரால் இதயங்களைப் பிளக்க வந்தால், ஜாதிகளின் பெயரால் மக்களைக் கூறுபோட வந்தால் அது தேசத்திற்கு நாச காலமாக முடியும் என்று பாரதி எச்சரிக்கை விடுத்த இடத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். எச்சரிக்கையை ஏற்று செயல்படவேண்டிய இடத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். தமிழகத்தில் இருந்து பலத்தை தொடங்குவோம். இந்தியாவை பலப்படுத்துவோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com