தேர்வு விடைத்தாள்கள் மாயமான விவகாரம்: காவலாளி உள்பட 13 பேருக்குத் தொடர்பு: நடவடிக்கைக்கு தயாராகிறது சென்னை பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 120 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த விடைத்தாள்கள் டிரக்குகள் மூலம் கடத்தப்பட்ட விவகாரத்தில் பல்கலைக்கழகக் காவலாளி


சென்னைப் பல்கலைக்கழகத்தில் 120 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த விடைத்தாள்கள் டிரக்குகள் மூலம் கடத்தப்பட்ட விவகாரத்தில் பல்கலைக்கழகக் காவலாளி உள்பட 13 ஊழியர்களுக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இதற்கான அறிக்கையை விசாரணைக் குழு பல்கலைக்கழகத்திடம் சமர்ப்பித்துள்ளது. இவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தொலைநிலைக் கல்வி தேர்வு முறைகேடு, கட்டணம் செலுத்துவதில் முறைகேடு என பல்வேறு சர்ச்சைகளில் சென்னைப் பல்கலைக்கழகம் சிக்கி வந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் பூட்டிய அறைக்குள் இரும்புப் பெட்டிகளில் பூட்டு போட்டு வைக்கப்பட்டிருந்த தொலைநிலைக் கல்வி நிறுவன எம்.பி.ஏ. மாணவர்களின் முந்தைய தேர்வு விடைத்தாள்கள் பெட்டியோடு மாயமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
அதாவது, தொலைநிலைக் கல்விநிறுவன வெளி மாநில மையங்களில் 2016ஆம் ஆண்டு தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்திவைத்த பல்கலைக் கழகம், அந்த மாணவர்களிடம் விசாரணையையும் மேற்கொண்டது. விசாரணையில் உரிய விளக்கம் அளித்த மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு முடிவுகளை பல்கலைக் கழகம் வெளியிட்டது. பிற மாணவர்களின் மீது நடவடிக்கை எடுத்தது. இந்த மாணவர்களின் விடைத் தாள்கள் அனைத்தும் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஓர் அறையில் பெட்டியில் வைத்து பூட்டி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்த விடைத்தாள்கள்தான் டிரக்குகள் மூலம் சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து கடத்தப்பட்டது.
இந்த விடைத்தாள்கள் கடத்தல் கடந்த மார்ச் 2ஆம் தேதி நடந்தது. இதுகுறித்து மார்ச் 3ஆம் தேதிதான் பல்கலைக்கழக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிந்தது. இந்தச் செய்தியை தினமணி மார்ச் 4 ஆம் தேதி வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற டிஜிபி ராமானுஜம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த 9 மாதங்களாக நடத்திய தீவிர விசாரணையில், விடைத்தாள்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் பல்கலைக்கழகக் காவலாளி உள்பட 13 ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதை ஆதாரங்களுடன் உறுதி செய்தது. இதை விசாரணைக் குழு அறிக்கையாக பல்கலைக்கழகத்திடம் அண்மையில் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்சிக் குழுவில் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. அப்போது, இதுகுறித்து ஆலோசனை நடத்தி, இவர்களுக்கான தண்டனை குறித்து இறுதி செய்ய பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி கூறியது:
விடைத்தாள்கள் கடத்தல் தொடர்பான விசாரணைக் குழு அறிக்கை பல்கலைக்கழக ஆட்சிக் குழுவில் வைக்கப்பட்டது. இதில் காவலாளி உள்பட 13 ஊழியர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்த பின்னர், ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு இவர்களுக்கான தண்டனைகள் இறுதி செய்யப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com