4 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது சிறுவாணி அணை 

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தொடரும் மழை காரணமாக 4 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவாணி அணை செவ்வாய்க்கிழமை முழுக் கொள்ளளவான 50 அடியை எட்டியுள்ளது.
சிறுவாணி அணை நிரம்பியதால் வெளியேறும் உபரி நீர்.
சிறுவாணி அணை நிரம்பியதால் வெளியேறும் உபரி நீர்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தொடரும் மழை காரணமாக 4 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவாணி அணை செவ்வாய்க்கிழமை முழுக் கொள்ளளவான 50 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து உபரி நீர் பவானி ஆற்றுக்குச் செல்கிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் அணையில் இருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இரண்டு அணைகளில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாகத் திகழும் சிறுவாணி அணையில் இருந்து மாநகராட்சியில் உள்ள 26 வார்டுகள் மற்றும் வழித்தடத்தில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறுவாணி அணை கடல் மட்டத்தில் இருந்து 863.4 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த அணையில் 863.4 மீட்டரில் இருந்து 878.5 மீட்டர் (50 அடி) அளவுக்குத் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும்.

சிறுவாணி அணையில் இருந்து தினமும் குடிநீர் விநியோகத்திற்கு சராசரியாக 10 கோடி லிட்டர் அளவுக்குத் தண்ணீர் எடுக்கப்படும். தண்ணீரின் இருப்பைப் பொருத்து அதிகமாகவும், குறைவாகவும் வால்வுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்படும்.

அணை வறண்டு போகும்பட்சத்தில் மேடான பகுதியில் இருந்து மின் மோட்டார் மூலம் குடிநீர் பம்ப் செய்து எடுக்கப்படும்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்தது. இதனால் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த ஜூன் மாதத்தில் தொடர் கனமழை பெய்ததால் சில நாள்களிலேயே சிறுவாணி அணை நீர்மட்டம் 38 அடிக்கு மேல் உயர்ந்தது. 

தற்போது, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கடந்த இரண்டு நாள்களுக்கும் மேலாகத் தொடர் மழை பெய்து வருகிறது. சிறுவாணி அணை அருகே கேரள மாநிலம் முத்திகுளம் பகுதியில் கடந்த சில நாள்களாக நாள்தோறும் 100 மி.மீ. மேல் மழை பதிவாகி உள்ளது. இதனால் சிறுவாணி அணைக்கு நிமிடத்துக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக சிறுவாணி அணை அதன் முழுக் கொள்ளளவான 50 அடியை செவ்வாய்க்கிழமை பிற்பகலில் எட்டியது. இதையடுத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் கேரள மாநிலத்திற்குள் சென்று அட்டப்பாடி வழியாக பவானி ஆற்றில் கலக்கும்.

2014-இல் சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்டியது. தற்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அணை மீண்டும் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்பட்சத்தில் பாதுகாப்புக் கருதி அணையைத் திறப்பது குறித்து கேரள அணைப் பாதுகாப்பு அமைப்பினர் முடிவு செய்வார்கள் என்று தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி சிறுவாணி அணைப் பகுதியில் 55 மி.மீ., அடிவாரத்தில் 18 மி.மீ. மழை பதிவாகியது. மாநகராட்சி குடிநீர் விநியோகத்திற்காக அணையில் இருந்து சராசரியாக 11 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மாவட்டம் குந்தா, கேரள, தமிழக வனப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையில் ஏற்கெனவே 97 அடி வரை தண்ணீர் உள்ளது. இந்நிலையில், குந்தா அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படக் கூடும் என்பதாலும், சிறுவாணி அணையில் இருந்து உபரி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுவதாலும் பில்லூர் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பில்லூர் அணையின் 2 மதகுகள் வழியாக விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து மேலும் நீர் திறக்கப்படலாம் என்பதால் பவானி ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com