மக்களவைத் தேர்தல் பிரசார தொடக்கமே மதுரை பேரணி: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

மதுரையில் தொடங்கப்பட்டுள்ள அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி, அதிமுகவின் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தின் தொடக்கம் என்று கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி
அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்க மதுரையில் ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைக்கிறார்  முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. 
அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்க மதுரையில் ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைக்கிறார்  முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. 

மதுரையில் தொடங்கப்பட்டுள்ள அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி, அதிமுகவின் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தின் தொடக்கம் என்று கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சார்பில், அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி அனைத்து மாவட்டங்களிலும் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக நடைபெற உள்ளது. இப்பேரணியின் தொடக்க விழா மதுரையில் சிவகங்கை சாலை - சுற்றுச்சாலை சந்திப்பு அருகே அம்மா திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழக முதல்வர் பேசியது: மதுரையில் எந்த நிகழ்ச்சி தொடங்கினாலும் அது வெற்றியைத் தரும். இதற்கு முன்பு நடந்த பல நிகழ்வுகளை உதாரணமாகக் கூறலாம். விரைவில் மக்களவைத் தேர்தல் வரவுள்ளது. இச்சூழலில் ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரை மாவட்டத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள சாதனை விளக்கப் பேரணி, மக்களவைத் தேர்தலுக்கான அச்சாரமாகவும், அதிமுக பிரசாரத்தின் தொடக்கமாகவும் இருக்கும்.
நான் முதல்வராகப் பொறுப்பேற்று ஓராண்டு, 5 மாதங்கள் நிறைவடைந்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் தொய்வின்றி செயல்படுத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தை, நாடே திரும்பி பார்த்தது. அதிமுக அழிந்துபோகும், ஆட்சி கவிழ்ந்துவிடும் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற ஆட்சிக்கும், கட்சிக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் நாம் அனைவரும் ஒற்றுமையுடன், ஒருமித்த கருத்துடனும் செயலாற்றி வருகிறோம்.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் வழியில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வழிவகுத்துக் கொடுத்த அதிமுக ஆட்சியை கலைக்கத் துடிக்கிறார்கள். திமுகவுடன் இணைந்து, டி.டி.வி.தினகரன் ஆட்சியைக் கலைக்க திட்டமிட்டு வருகிறார். தமிழகத்துக்காக தன்னையே அர்ப்பணித்த ஜெயலலிதாவின் அரசுக்கு துரோகம் இழைக்கிறார். அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் அவரை மன்னிக்கமாட்டார்கள் என்றார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது: கடந்த 2011 தேர்தலுக்கு முன்பு திமுக ஆட்சியை எதிர்த்து கோவையில் தொடங்கி திருச்சி, மதுரை என பல இடங்களிலும் ஜெயலலிதா நடத்திய பொதுக் கூட்டங்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன. அதிலும் மதுரையில் நடந்த பொதுக் கூட்டம் வரலாற்றில் இடம் பெறக் கூடியது. இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் என அறிவித்தார். அது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 
இதுவரை எந்த முதல்வரும் செய்யாத சாதனைகளை ஜெயலலிதா செய்து காட்டியது தான் இந்த வெற்றிக்கு காரணம். அவரது வழியில் செயல்படும் இந்த அரசுக்கும் வெற்றி தொடரும். எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த பாதையை அடிபிறழாமல் தொடர்ந்தால் அதிமுகவுக்கு தோல்வி என்பதே கிடையாது என்றார்.
கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் மாவட்டச் செயலர் வி.வி.ராஜன்செல்லப்பா உள்ளிட்டோர் பேசினர். தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com