அயோடின் பயன்பாடு தேவை, விழிப்புணர்வு

மிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அளவில் மாணவ, மாணவிகள் மத்தியில் அயோடின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை. எனவே இதுகுறித்த விழிப்புணர்வை அவசியம் ஏற்படுத்திட வேண்டும்
அயோடின் பயன்பாடு தேவை, விழிப்புணர்வு

திருச்சி: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அளவில் மாணவ, மாணவிகள் மத்தியில் அயோடின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை. எனவே இதுகுறித்த விழிப்புணர்வை அவசியம் ஏற்படுத்திட வேண்டும் என்று ஊட்டச்சத்து துறை வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
 நமது உடலில் தைராய்டு சுரப்பிகள் சரியாக தொடர்ந்து சுரப்பதற்கு அயோடின் பயன்பாடு மிக முக்கியமானதாகும். பெண் ஒருவர் கர்ப்பம் அடைந்தால், முதலில் 2-ஆவது மாதத்தில் கருவில் முக்கிய உறுப்புகள் உருவாகும். இருதயம், பின்னர் உருவாகும் முக்கிய உறுப்பு மூளைத் தண்டுவடம்தான். இந்த உறுப்பு சரியாக வளர்ந்தால்தான் உடலில் மற்ற உறுப்புகளின் வளர்ச்சியும் சரியாக இருக்கும். மூளைத் தண்டுவடம் சரியாக உடலில் உருவாக வேண்டும் எனில் அந்த கர்ப்பிணிக்கு கட்டாயம் அயோடின் சத்து கிடைத்தாக வேண்டும்.
 பொதுவாக கடலோர மாவட்டங்களில் வாழும் மக்கள் கடல் சார்ந்த உணவுகளைப் பயன்படுத்துவதாலும், அப்பகுதியில் இருக்கும் கடல் நீரிலும் உப்புக் காற்று கலந்துவிடும் என்பதால் இங்குள்ள மக்களுக்கு அயோடின் பயன்பாடு குறித்த கவலை தேவையில்லை. ஆனால், மாநிலத்தின் பிறபகுதிகள், மலைப்பாங்கு வசிப்பிடங்களில் உள்ளவர்கள் கட்டாயம் அயோடின் பயன்பாட்டில் அக்கறை செலுத்த வேண்டும்.
 மேலைநாடுகளில் மைதா மாவு போன்றவை மூலம் அயோடின் பயன்பாடுள்ளது. ஆனால், நம் நாட்டில் இன்னும் அதுகுறித்த விழிப்புணர்வை அனைத்துத் தரப்பினரிடமும் கொண்டு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.
 இன்றைய நிலையில் அயோடின் உப்பைத்தான் தாங்கள் விற்பனை செய்வதாக நிறுவனங்கள் கூறி வந்தாலும், அதிலும் பல்வேறு பிரச்னைகள் நிலவுவதாக பொதுவாக குற்றச்சாட்டு எழுப்பப்படுகின்றன. வழங்க வேண்டிய அளவைக் காட்டிலும் குறைத்து வழங்குவது போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை சார்ந்த அலுவலர்கள் அதற்கான கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
 விழிப்புணர்வு தேவை:
 பொதுவாக பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ 50 மாணவர்கள் இருந்தால் அதில் குறைந்தது 10 பேர் மெல்லக் கற்பவர்களாக இருப்பார்கள். அவர்களின் இந்த நிலைக்கான காரணம் குறித்த நிலையை ஆசிரியர்கள் அறிந்து கொள்வதில்லை. அதற்கான ஆர்வத்தையும் காட்டுவதில்லை. தேர்வில் வெற்றி பெற வைத்தால்போதும் என்ற எண்ணத்தோடு இருந்துவிடுகிறார்கள்.
 கல்வியை அவர்கள் மெல்ல கற்பதற்கு அவர்களது உடலில் நிலவும் 2 விதமான குறைபாடுகள் இதற்கு முக்கிய காரணமாக இருக்கும். இரும்புச்சத்து குறைபாடு மற்றும் அயோடின் சத்து குறைபாடு ஆகிய இரண்டும்தான் அவர்களை மெல்லக் கற்கும் நிலைக்குத் தள்ளியிருக்கும். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் இந்த நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.
 எல்லா நிலைகளிலும் நாம் வளர்ச்சியைப் பெற்றுவிட்டதாகக் கருதினாலும், இதுபோன்ற முக்கியத் தேவையின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை இன்னும் நாம் பள்ளி கல்லூரிகளில் போதிய அளவில் ஏற்படுத்தவில்லை என்பது வேதனை கலந்த உண்மை.
 பொதுவாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் கொண்டு செல்லப்படும் எந்தக் கருத்துகளும் விரைவாக அனைத்துத் தரப்புக்கும் சென்றுவிடும். மாணவர்கள் மூலமாக எடுத்துரைக்கப்படும் கருத்துகள் பெற்றோர்கள் வாயிலாக மற்ற பகுதிக்கும் செல்லும். எனவே இன்றைய நிலையில் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு உடலில் அயோடின் தேவை, அதன் பயன்பாடு, அந்த சத்து இல்லாமல் இருந்தால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது கட்டாயம் தேவை. இவ்வாறு செய்யும்போது மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுவதுடன் அவர்களும் ஏனைய மாணவர்களைப் போல திகழ்வார்கள்.
 இதை பள்ளிக் கல்வி அளவில் செய்தால் மட்டும் போதாது, கல்லூரி அளவிலும் செய்திட வேண்டும் என்கிறார் திருச்சி சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி ஊட்டச்சத்து உணவியல் துறை இணைப் பேராசிரியை என்.செல்லம்.
 கடல்வாழ் உயிரினங்களில் அயோடின் சத்து அதிகமாக இருக்கும் என்பதால் அசைவ உணவு சாப்பிடுவர்களுக்குப் பிரச்னை இல்லை. அசைவ உணவு சாப்பிடாதவர்கள் கொட்டை வகைகள், பால் போன்றவற்றைச் சாப்பிடலாம். இவற்றில் அயோடின் சத்து அதிக அளவில் இருக்கிறது. எனவே இவற்றை உட்கொள்ளும்போது அயோடின் அளவும் உடலில் சீராக இருக்கும் என்கிறார் அவர்.
 உடலில் சில சுரப்பிகள் சுரப்பதற்கு அவசியத் தேவையாக இருக்கும் அயோடின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை இனிமேலாவது காலம் தாழ்த்தாமல் செய்திட வேண்டும். வருங்கால சமுதாயத்தை ஊட்டம் நிறைந்த சமுதாயமாக உருவாக்க இணைந்து செயலாற்றுவது அவசியமானது மட்டுமல்ல, நம் கடமையும் கூட.
 - கு. வைத்திலிங்கம்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com