உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பட்டாசு ஆலைகளை இயக்க முடியாத நிலை: உற்பத்தியாளர்கள் வேதனை

உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பட்டாசு ஆலைகளை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பட்டாசு ஆலைகளை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
 தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
 பின்னர் சங்கத் தலைவர்ஏ. ஆசைத்தம்பி , பொதுச் செயலாளர் கே.மாரியப்பன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:
 நாடு முழுவதும் பட்டாசு விற்பனை, வெடிக்கத் தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள் நடைமுறைக்குச் சாத்தியமில்லாதவை. பட்டாசுகளை 2 மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொன்று தொட்டு வரும் வழக்கங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு விரோதமாக உள்ளது.
 ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளை மட்டும் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை வெடிக்கக் கூடாது என விதிமுறை உள்ளது. இந்த சட்ட விதியை மாற்ற அரசியல் சாசனம் நீதிமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கவில்லை.
 பசுமை பட்டாசுகள் மட்டுமே இனி உற்பத்தி செய்ய வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. அனைத்து வகை பட்டாசுகளும் ,அனுமதிக்கப்பட்டுள்ள மூலப்பொருள்களை கொண்டு, வெடிபொருள்கள் கட்டுப்பாட்டு விதியின் படி, அரசிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே தயாரிக்கப்படுகின்றன.
 ஆனால் உலகில் எங்குமே இல்லாத "பசுமை பட்டாசு' தயாரிக்கவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,070 பட்டாசு ஆலைகளும், பிற மாநிலங்களில் உள்ள சுமார் 500 பட்டாசு ஆலைகளும் செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. வழக்கமாக தீபாவளி முடிந்ததும் 7 அல்லது 10 நாள்களுக்கு பின்னர் பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டு, அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தேவையான பட்டாசு தயாரிக்கும் பணி தொடங்கப்படும்.
 ஆனால் பட்டாசு ஆலைகளை இந்த ஆண்டு திறந்து, தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள இயலாததால், இத் தொழிலில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிஉள்ளது.
 சர வெடி பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. தேசியமாசுக் கட்டுப்பாட்டு ஆணையம், சுற்றுச்சுழல் அமைச்சகம் ஆகியவை பல அறிவியல், ஒலியியல் விஞ்ஞானிகளைக் கொண்டு ஆய்வு செய்து, பத்து வெடிஇணைத்தால், நூறுவெடி இணைத்தால், என பத்தாயிரம் வெடிவரை இணைத்தால் ஏற்படும் ஒலி அளவினை நிர்ணயம் செய்துள்ளது.
 இது மக்களவையில் 1999 ஆம் ஆண்டு சட்டத் திருத்தமாக இயற்றப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவில் பேரியம் நைட்ரேட் என்ற வேதிப் பொருளைப் பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கக் கூடாது என கூறியுள்ளது. இந்த வேதிப் பொருள் இல்லாமல் 60 சதம் பட்டாசுகளைத் தயாரிக்க இயலாது என வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை கூறியுள்ளது. இதனால் பட்டாசு தயாரிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறையும் உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளது.
 எங்களது நிலை குறித்து விளக்கி மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம். மேலும் தமிழக முதல்வர், பிரதமரை சந்திக்க உள்ளோம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com