குரூப் 2 தேர்வில் பெரியாரின் ஜாதிப் பெயர்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

குரூப் 2 தேர்வு வினாத்தாளில் பெரியாரின் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குரூப் 2 தேர்வு வினாத்தாளில் பெரியாரின் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்(டிஎன்பிஎஸ்சி) மூலம் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வு வினாத்தாளைத் தயாரித்தவர்கள் எத்தகைய ஜாதி வன்மம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
 திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு "இ.வெ. ராமசாமி நாயக்கர்', காந்திஜி, இராஜாஜி, சி.என். அண்ணாதுரை என்பதில் எது சரியான பதில் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
 "ஈரோடு வெங்கடப்ப ராமசாமி' என்பதுதான் சுருக்கமாக ஈ.வெ.ரா. இதுகூடத் தெரியாமல், "இ' என்று பிழையாகப் போட்டுள்ளார்கள். கேள்வியைத் தயாரித்தவருக்கு ஈரோடு கூட தெரிந்திருக்கவில்லை. இப்படிப்பட்ட நபர்களிடம் கேள்விகளை தயாரிக்கச் சொன்னால், பெரியாருக்கு ஜாதிப் பட்டம் போடத்தானே செய்வார்கள்!
 1928 -ஆம் ஆண்டிலேயே தனது பெயரில் ஜாதி ஒட்டியிருந்ததை நீக்கியவர் பெரியார். ஜாதிப் பெருமை பேசக் கூடாது என்று, ஜாதி மாநாடுகளிலேயே துணிச்சலாகப் பேசியவர்.
 எப்போதும் எல்லா நிலையிலும் ஒடுக்கப்பட்டோர் பக்கமே நின்றவர். அப்படிப்பட்ட பெரியாருக்கு ஜாதி அடையாளம் சூட்டுவதும், அதுவும் அரசுத் தேர்வில் அடையாளப்படுத்துவதும் தவறானது மட்டுமல்ல; தேர்வு எழுதுவோரின் மனதில் பிற்போக்குத்தனமான எண்ணத்தை விதைப்பதுமாகும். இதற்கு, காரணமானவர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டும். இந்தச் செயலுக்கு தமிழக அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
 டிஎன்பிஎஸ்சி வருத்தம்
 தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு வினாத்தாள் தயாரிக்கும் பணியை அனுபவம் வாய்ந்த பல்வேறு பேராசிரியர்கள் மேற்கொள்கின்றனர்.
 மேலும், வினாக்கள் பல நிலைகளில் வேறு சில பேராசிரியர்களால் சரிபார்க்கப்பட்டு இறுதி செய்யப்படுகிறது. இதே நடைமுறை தான் 70 ஆண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
 அவ்வாறு மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டும், பெரியாரின் பெயரைத் தவறாக கேள்வித்தாளில் குறிப்பிடப்பட்டதற்கு தேர்வாணையம் தனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
 தவறுக்கு காரணமான நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதுடன், இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் கே. நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com