தருமபுரி: பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த மாணவியின் உடல் அடக்கம்

மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.


தருமபுரி: அரூர் அருகே பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த மாணவி உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சிட்லிங் மலைக் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பிளஸ் 2 மாணவி, கடந்த நவ. 5 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் ஆகியோரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி 10 ஆம் தேதி உயிரிழந்தார்.

மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் இளைஞர்கள் ரமேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்த நிலையில், சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் சதீஷ் (22) என்பவரைக் கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வந்த இளைஞர் ரமேஷ் திங்கள்கிழமை பிற்பகல் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதையடுத்து, ரமேஷை 15 நாள் சிறைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரமேஷ் அழைத்துச் செல்லப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த கோட்டப்பட்டி காவல் ஆய்வாளர் முத்து கிருஷ்ணன் மற்றும் கோட்டப்பட்டி போலீஸார் மீது சிட்லிங் கிராம மக்கள் பல்வேறு புகார்களைத் தெரிவித்தை அடுத்து, முத்து கிருஷ்ணன் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

முதலாவதாக, பள்ளி மாணவியை இளைஞர்கள் இருவரும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது, அந்த வழக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை அரசு பெற்றுத்தர வேண்டும். உரிய நடவடிக்கை மற்றும் சிகிச்சை அளிக்காத காவல்துறையினர், மருத்துவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி மாணவியின் உடலை வாங்க மறுத்தனர். பொறுப்பு கண்காணிப்பாளர் மகேஸ்குமார் போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை உடற்கூராய்வு நடத்தப்பட்டு உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து சிட்லிங் கிராமத்திற்கு கொண்டு வந்த மாணவியின் உடலுக்கு பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com