விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக உயர்த்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங்

விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது என மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் கூறினார்.
விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக உயர்த்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங்

விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது என மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் கூறினார்.
 இது குறித்து மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக அசோக் தல்வாய் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து வருகிறது.
 கடந்த 2009-14 கால கட்டத்தில் வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1.21 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில்தான் அதை இரட்டிப்பாக்கி ரூ.2.11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோன்று மண் வள மேம்பாடு, மண் பரிசோதனை ஆகியவற்றுக்காக கடந்த 2013-14இல் ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அதை 2018-19-ஆம் ஆண்டில் ரூ.400 கோடியாக பாஜக உயர்த்தியுள்ளது.
 தமிழகத்தில் வேளாண்மைக்காக 23 சந்தைகள் உள்ளன. அதில் "இ-மார்க்கெட்டிங்' வசதி திட்டத்துக்காக தலா ஒரு சந்தைக்கு ரூ.75 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்துக்காக மத்திய அரசின் பங்காக தமிழகத்துக்கு நிகழாண்டில் ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 எண்ணெய் வித்து, பயறு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. இதன் உற்பத்தி 2015-16இல் 1.60 கோடி மெட்ரிக் டன்னாகவும், 2017-18-இல் 2.20 கோடி மெட்ரிக் டன்னாகவும் உள்ளது. எனவே கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி உள்ளிட்ட சில பயறுகளுக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார். பேட்டியின்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உடனிருந்தார்.
 எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாராட்டு: உலகின் முதல் வேளாண் பரிசு இந்திய உணவு மற்றும் வேளாண் கூட்டமைப்பு சார்பில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு அண்மையில் வழங்கப்பட்டது. இதற்கான பாராட்டு விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் கலந்து கொண்டு எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
 விழாவில் ராதாமோகன் சிங் பேசுகையில், எம்.எஸ்.சுவாமிநாதன் முயற்சியால்தான் இந்தியா உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதோடு, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ச்சியடைந்தது. கடந்த 1960-ஆம் ஆண்டு முதல் 1980 -ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், எம்.எஸ். சுவாமிநாதன் ஏற்படுத்திய "பசுமைப் புரட்சி' காரணமாக அதிக விளைச்சலை தரக்கூடிய நெல் மற்றும் கோதுமை விதைகள் பயிரிடப்பட்டன. அவரது இந்த முயற்சியால் 25 ஆண்டுகளுக்குள் இந்தியா உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com