பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளுக்கு ரூ.4.86 கோடியில் நவீன இயந்திரங்கள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகள்
இயற்கை பேரிடர் காலங்களில் பயன்படுத்துவதற்காக ரூ.4.86 கோடி மதிப்பிலான பேரிடர் நிவாரண கருவிகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு வழங்கிய அமைச்சர் 
இயற்கை பேரிடர் காலங்களில் பயன்படுத்துவதற்காக ரூ.4.86 கோடி மதிப்பிலான பேரிடர் நிவாரண கருவிகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு வழங்கிய அமைச்சர் 


பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள ரூ.4.86 கோடி மதிப்பிலான 336 கூடுதல் நவீன இயந்திரங்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாநகராட்சி அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினார். 
பெருநகர சென்னை மாநகராட்சியில் இயற்கைப் பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ. 4.86 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ள அதிநவீன மரஅறுவை இயந்திரங்கள், ஹைட்ராலிக் மூலம் இயக்கப்படும் முறிந்த மரக்கிளைகளை அகற்றும் இயந்திரங்கள், நீர் உறிஞ்சும் பம்புகள், ஜெனரேட்டர்கள் என 336 நவீன இயந்திரங்களை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு வழங்கும் விழா ரிப்பன் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்குத் தலைமை வகித்து கூடுதல் நவீன இயந்திரங்களை வழங்கி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியது: 
சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மழை காலத்தில் சாலைகளில் விழும் மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த தற்போது 171 மரஅறுவை இயந்திரங்களும், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை உறிஞ்சி வெளியேற்றுவதற்கு அதிகத் திறன் கொண்ட நீர் இறைக்கும் 17 பம்ப்புகளும் உள்ளன. 
நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளும் வகையில் ரூ. 1.18 கோடி மதிப்பில் பெட்ரோல் மூலம் இயங்கும் 5 குதிரைத் திறன் கொண்ட 200 மரஅறுவை இயந்திரங்களும், ரூ. 1.48 கோடி மதிப்பில் 25 குதிரைத் திறன் கொண்ட 30 கூடுதல் நீர் உறிஞ்சும் இயந்திரங்களும், ரூ.1.20 கோடி மதிப்பில் 8 மீட்டர் உயரத்தில் உள்ள மரக் கிளைகளை அகற்றும் வகையில் ஹைட்ராலிக் மூலம் இயக்கப்படும் 6 இயந்திரங்களும், ரூ.1 கோடி மதிப்பில் மழைக்காலங்களில் தெருவிளக்குகளுக்கு மின்சாரம் அளிக்கும் வகையில் 2 கேவிஏ திறன் கொண்ட 100 எண்ணிக்கையிலான ஜெனரேட்டர்கள் என மொத்தம் ரூ. 4.86 கோடி மதிப்பில் 336 கூடுதல் நவீன இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. 
இதன் மூலம் மழைக் காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீர், மரக்கிளைகளை உடனுக்குடன் அகற்றமுடியும் என்றார்.
கையேடு வெளியீடு: தொடர்ந்து, இயற்கைப் பேரிடர் காலங்களில் பொதுமக்கள், உயர் அலுவலர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்களின் செல்லிடப்பேசி மற்றும் அலுவலக எண்கள், அவசரகால தொடர்பு எண்கள் ஆகியவை அடங்கிய மாநில பேரிடர் மேலாண்மைத் திட்டம்-2018 என்ற கையேட்டை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், வருவாய்த் துறை அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை நிர்வாக முதன்மைச் செயலர் கே.சத்யகோபால், வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அரசுச் செயலர் அதுல்ய மிஸ்ரா, பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் ராஜேந்திர ரத்னு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்தா.கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com