திருச்செந்தூர் கோயிலில் திருக்கல்யாணம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை நள்ளிரவு திருக்கல்யாணம் நடைபெற்றது.இக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 8ஆம் தேதி
திருச்செந்தூரில் திருக்கல்யாண வைபவத்தையொட்டி நடைபெற்ற சுவாமி - அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி.
திருச்செந்தூரில் திருக்கல்யாண வைபவத்தையொட்டி நடைபெற்ற சுவாமி - அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி.


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை நள்ளிரவு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 8ஆம் தேதி தொடங்கியது; செவ்வாய்க்கிழமை (நவ. 13) சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பின்னர், தெய்வானை அம்மன் தவசுக்கு புறப்பட்டு, தெற்கு ரத வீதி வழியாக தெப்பக்குளத் தெருவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்துக்கு வந்தார். அங்கு ஏராளமான பெண் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர்.
மாலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் தனிச் சப்பரத்தில் எழுந்தருளி, புளியடித் தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்கு ரத வீதி வழியாக, திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள தெய்வானை அம்பாளுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து, தெற்கு -மேல ரத வீதிகள் சந்திப்பில் சுவாமி - அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, சுவாமியும், அம்பாளும் கோயிலைச் சேர்ந்தனர். நள்ளிரவில் திருக்கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அவர்கள் திருக்கல்யாண வைபவத்துக்கு மொய் எழுதி, பிரசாதம் பெற்றுச் சென்றனர். 
பழனியில்...: பழனி மலைக்கோயிலில் கந்தசஷ்டி நிறைவு விழாவையொட்டி வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. 
இக்கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த வியாழக்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. ஒருவாரம் நடைபெற்ற விழாவில், மலைக்கோயிலில் தினமும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர், சின்னக்குமாரசாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றன. விழா நாள்களில் தங்கமயில், வெள்ளிக்காமதேனு, தங்கசப்பரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. 
கார்த்திகை மண்டபத்தில் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஆறாம்நாளான செவ்வாய்க்கிழமை அடிவாரம் கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக புதன்கிழமை வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் திருக்கல்யாணம் மலைக்கோயிலில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com