ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.10 கோடியில் சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையம்

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.10 கோடியில் செலவில் சர்க்கரை
நவீன பரிசோதனைக் கூடத்தை வியாழக்கிழமை திறந்து வைத்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார். 
நவீன பரிசோதனைக் கூடத்தை வியாழக்கிழமை திறந்து வைத்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார். 


சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.10 கோடியில் செலவில் சர்க்கரை நோய்க்கான சிறப்பு மருத்துவச் சிகிச்சை மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் வியாழக்கிழமை திறந்து வைத்தனர். 
அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சர்க்கரை நோய் சிகிச்சை துறையை தனி மையமாக அங்கீகரித்து தமிழக அரசு தரம் உயர்த்தியது. இதையடுத்து இதற்கான அனைத்து சிகிச்சை முறைகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ளும் வகையில் ரூ.10 கோடி செலவில் அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய மூன்று அடுக்குகள் கொண்ட கட்டடம் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் 10 சிறப்பு மருத்துவர்கள் உள்ளிட்ட சுமார் 64 பேர் இச்சிறப்பு மையத்திற்கென தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர். 
வியாழக்கிழமை நடைபெற்ற இந்த கட்டடத் திறப்பு விழாவில், சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்று புதிய கட்டடத்தை திறந்து வைத்தனர். சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி நடத்தப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கேற்ற உணவு வகைகள் குறித்த சமையல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர்கள் பரிசுகளை வழங்கினர். மேலும் நோயாளிகள் தங்களது சர்க்கரை அளவை அவர்களே தெரிந்து கொள்வதற்கு உதவியாக 50 பேருக்கு குளுக்கோ மீட்டர் இலவசமாக வழங்கப்பட்டது.
விழாவில் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பு கையேடு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது:
தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் மூலம் ஏழை மக்களுக்கு உயர்தர மருத்துவச் சிகிச்சை கிடைத்து வருகிறது. உலகளவில் சுமார் 41.50 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இவ்வகை நோயாளிகளின் எண்ணிக்கை 7.30 கோடியாக உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் கிராமப்புறங்களில் சுமார் 10 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் சுமார் 20 சதவீதம் பேரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற உணவுப் பழக்க வழக்கம், உடல் பயிற்சியின்மை, உடலுழைப்பு இல்லாமை, மரபு சார்ந்த காரணிகளால் சர்க்கரை நோய் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அதிகரித்து வரும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை எடுத்து வருகிறது.
உலக சர்க்கரை நோய் வார தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் தொற்றா நோய் பரிசோதனை திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று இந்நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு உடனடியாக குளுக்கோமீட்டர் மூலம் ரத்தப் பரிசோதனையும் மேற்கொண்டு எவரேனும் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களாக இருப்பின் அவர்களை தொடர் சிகிச்சை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கின்றனர்.
ரூ.10 கோடி செலவில் இங்கு அமைக்கப்பட்டுள்ள சர்க்கரை நோய் சிறப்பு மையத்தில் ரூ. 1.50 கோடியில் மருத்துவ உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆண், பெண் நோயாளிகளுக்கு தனித்தனியே தலா 10 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவும் இங்கு உள்ளது. இம்மையத்தில் சர்க்கரை நோய்க்கான முழு உடல் பரிசோதனை நிலையம், கால் பாதங்கள் பாதிப்பை தடுக்க சிறப்பு பிரிவு உள்ளிட்டவை விரைவில் அமைக்கப்படும். மேலும் முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சர்க்கரை நோயும் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவனையில் தற்போது சுமார் ரூ. 90 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களை செயல்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ரூ. 30 கோடி செலவிலான திட்டங்கள் அரசின் பரிசீலனையில் உள்ளன என்றார் விஜயபாஸ்கர்.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் பொன்னம்பல நமச்சிவாயம், சர்க்கரை சிகிச்சை சிறப்பு மைய இயக்குநர் டாக்டர் சண்முகம், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் நா.பாலகங்கா, உறைவிட மருத்துவ அதிகாரி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காலியிடங்கள் நிரப்பப்படும்
நிகழ்ச்சியை அடுத்து நிருபர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது:
அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ பணியாளர்களின் காலியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் 1540 மருந்தாளுனர்கள், ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வரும் டிசம்பரில் சுமார் 1,900 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் 30 முதல் 50 பணியாளர்களை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்களே நியமித்துக்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் காலியிடமே இல்லாத துறையாக மாறும் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com