தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிப்பு விவரங்களை கணக்கெடுக்கக் கிராம அளவில் குழுக்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவரங்களைக் கணக்கெடுக்கக் கிராம அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.
நிகழ்ச்சியில் பயனாளிக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் அமைச்சர்கள் செங்கோட்டையன், இரா. துரைக்கண்ணு, உடுமலை கே. ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம்.
நிகழ்ச்சியில் பயனாளிக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் அமைச்சர்கள் செங்கோட்டையன், இரா. துரைக்கண்ணு, உடுமலை கே. ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவரங்களைக் கணக்கெடுக்கக் கிராம அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் தெரிவித்தது: கஜா புயலால்  இறந்தவர்கள் குறித்து காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கஜா புயலால் 741 கால்நடைகள் இறந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 
கஜா புயலால் சேதமடைந்த விவசாயிகளின் தென்னை மரங்கள், இதர பயிர்களின் விவரங்களையும், மீனவர்களின் விசைப் படகு,  நாட்டுப் படகுகளின் விவரங்களையும் முழுமையாகக் கணக்கெடுக்கக் கிராம அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு,  பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைந்து பாதிப்பு விவரங்கள் முழுமையாகத் தெரிய வந்த பின்னர், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும்.
நெடுஞ்சாலைகளில் விழுந்த 68,882 மரங்கள் முழுவதுமாக வெட்டி அகற்றப்பட்டு, சாலை போக்குவரத்து முழுவதுமாகச் சீர் செய்யப்பட்டுள்ளது.
கஜா புயல் பாதிப்புகளைச் சீரமைக்க மின்சார வாரியத்தில் 1,180 பணியாளர்கள், நெடுஞ்சாலைத் துறையில் 490 பணியாளர்கள், பொதுப் பணித் துறையில் 50 பணியாளர்கள், ஊரக வளர்ச்சித் துறையில் 2,800 பணியாளர்கள், பேரூராட்சி துறையில் 863 பணியாளர்கள்,  மாநகராட்சி,  நகராட்சி துறையில் 1,112 பணியாளர்கள் என மொத்தம் 7,000-க்கும் அதிகமான பணியாளர்கள் நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு போர்க்கால அடிப்படையில் சீர் செய்யப்பட்டு வருகிறது.  
மேலும்,  பாதிக்கப்பட்டுள்ள மின் கம்பிகள்,  கம்பங்கள், கோபுரங்கள், துணை மின் நிலையங்கள் ஆகியவற்றைச் சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மின்சாரம் தடைப்பட்டுள்ள பகுதிகளில் ஜெனரேட்டர் மூலம் நீர்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் நிரப்பப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாகத் தண்ணீர் லாரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
கஜா புயலால் பாதிப்புக்குள்ளான மக்கள் விரைவில் இயல்பு வாழ்கைக்குத் திரும்பும் வகையில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேலும் விரைவாகச் செயல்படுத்த அமைச்சர்கள் குழு தஞ்சாவூர் மாவட்டத்தில் முகாமிட்டுள்ளோம் என்றார் செங்கோட்டையன்.
முன்னதாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், வேட்டி, சேலை ஆகிய நிவாரணப் பொருட்களையும், முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 5,000 வீதமும், பகுதி அளவு சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 4,100 வீதமும் என மொத்தம் 206 பேருக்கு ரூ. 9.19 லட்சம் மதிப்பிலான உதவிகளையும் அமைச்சர்கள் வழங்கினர்.
அமைச்சர்கள் இரா. துரைக்கண்ணு (வேளாண்மை), உடுமலை கே. ராதாகிருஷ்ணன் (கால்நடை பராமரிப்பு), கடம்பூர் ராஜூ (செய்தி, விளம்பரம்), மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com