பார் கவுன்சில் தேர்தல் விவகாரம்: அகில இந்திய பார் கவுன்சில் செயலர் பதிலளிக்க உத்தரவு

தமிழகம், புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் பிரச்னைகளுக்கு தீர்வு காண புதுதில்லியில் உள்ள அகில இந்திய பார் கவுன்சில் தீர்ப்பாயத்தை அணுக வேண்டும் என்ற சுற்றறிக்கையை செல்லாது என்று அறிவிக்க கோரிய

தமிழகம், புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் பிரச்னைகளுக்கு தீர்வு காண புதுதில்லியில் உள்ள அகில இந்திய பார் கவுன்சில் தீர்ப்பாயத்தை அணுக வேண்டும் என்ற சுற்றறிக்கையை செல்லாது என்று அறிவிக்க கோரிய மனுவுக்கு, இந்திய பார் கவுன்சில் செயலர் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆனந்த முருகன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் மார்ச் 28-ஆம் தேதி நடைபெற்றது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் அக்பர் அலி, மதிவாணன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்தனர். தேர்தலில் தமிழகம் முழுவதும் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. 

இந்தத் தேர்தலில் பல்வேறு குளறுபடிகள், பிரச்னைகள் ஏற்பட்டன. இதுதொடர்பாக பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், அகில இந்திய பார் கவுன்சில், பிப்ரவரி 6 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.  

 அதில் வழக்குரைஞர் சட்டம் 1961-இன் கீழ் அறிவிப்பு பிரிவு 15 ( 2 ) ஈ- படி தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு புதுதில்லியில் உள்ள அகில இந்திய பார் கவுன்சில் தீர்ப்பாயத்தை அணுகி தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  தமிழகம், புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்ட வழக்குரைஞர்கள் அந்தந்த பகுதியை சேர்ந்தவர்கள். எனவே, பார் கவுன்சில் தேர்தல் தொடர்பான வழக்குகளை அவர்கள் புதுதில்லி சென்று கையாளுவது சாத்தியமற்றது. 

 எனவே, தமிழகம், புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் பிரச்னைகளுக்கு தீர்வு காண புதுதில்லியில் உள்ள அகில இந்திய பார் கவுன்சில் தீர்ப்பாயத்தை அணுக வேண்டும் என்ற சுற்றறிக்கையை செல்லாது என்று அறிவித்து உத்தரவிடவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை  விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக அகில இந்திய பார் கவுன்சில் செயலர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com