திருவண்ணாமலையில் நாளை மகா தீபத் திருவிழா: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (நவம்பர் 23)
திருவண்ணாமலையில் நாளை மகா தீபத் திருவிழா: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (நவம்பர் 23) நடைபெறுகிறது.
இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம், காவல் துறை, கோயில் நிர்வாகம் ஆகியவை விரைவாக செய்து வருகின்றன.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பஞ்ச ரதங்களின் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
அன்று காலை 6.45 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 3 மணி வரை பஞ்ச ரதங்களில் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர் உள்பட உத்ஸவ மூர்த்திகள் மாட வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நாளை மகா தீபம்: விழாவின் முக்கிய நிகழ்வான தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
பின்னர், அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. 
மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதே நேரத்தில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை 3 நிமிடங்கள் காட்சி தரும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இரவு 10 மணிக்கு தங்க ரிஷப வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
8 ஆயிரம் போலீஸார்: தீபத் திருவிழாவுக்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட, கோயில் நிர்வாகங்களும், காவல் துறையும் செய்து வருகின்றன. பக்தர்களின் பாதுகாப்புப் பணியில் சுமார் 8 ஆயிரம் போலீஸார் ஈடுபடுகின்றனர்.
கொப்பரை, நெய், காடா துணி தயார்: தீபம் ஏற்றத் தேவையான மகா தீபக் கொப்பரையை தீப நாட்டார் சமூகத்தினர் புதுப்பித்துள்ளனர். இந்தக் கொப்பரை கோயிலில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆவின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 3 ஆயிரத்து 500 கிலோ முதல் தர நெய், தீபம் எரிய திரியாகப் பயன்படுத்தப்படும் 11 ஆயிரம் மீட்டர் காடா துணி ஆகியவை கோயிலில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வியாழக்கிழமை காலையில் மலை மீது எடுத்துச் செல்லப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com