கனமழைக்கு பீதியடையத் தேவையில்லை: வருவாய் நிர்வாக ஆணையாளர்

கனமழைக்கு பீதியடையத் தேவையில்லை: வருவாய் நிர்வாக ஆணையாளர்

தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக். 7) மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக். 7) மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான கொ.சத்யகோபால் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:
""மிக கனமழை பெய்யும்'' என்ற முன்னெச்சரிக்கை அறிவிப்பால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை.  வரும் 7-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதுபோன்ற நிலை எதுவும் இல்லை. அன்று தமிழகத்தில் சில பகுதிகளில் மட்டும் கன மழையும், மிக கன மழையும் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 
அதாவது, "ரெட் அலர்ட்' என்பது 24.5 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்பது அதன் அர்த்தமாகும். அது தமிழகம் முழுவதும் பெய்யும் எனக் கூறப்படவில்லை. சில பகுதிகளில் மட்டும் பெய்யும். ஆனாலும், தமிழகம் முழுவதும் கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளனர்.
ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்: தமிழக அரசின் உத்தரவுப்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையிலிருக்க  அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எந்தந்தப் பகுதியில் மழை பெய்யும்போது பாதிப்பு இருக்கும் என்பதை நாங்கள் ஏற்கெனவே கண்டுபிடித்து தெரிந்து வைத்துள்ளோம். 
வடகிழக்குப் பருவமழையின்போது மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விவரங்கள், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி பாதிக்கப்படக் கூடிய பகுதிகள் என 4,399 இடங்களை அறிந்துள்ளோம்.
அதில் மிக அதிகமாக பாதிக்கப்படக்கூடியவை 578 இடங்கள் என்றும், அதிகமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் 892 என்றும், மிதமாகப் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் 1206 என்றும், குறைவாகப் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் 1723  என்றும் கண்டறியப்பட்டுள்ளன. அதிகமாகப் பாதிக்கப்பட கூடிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் அதிகமாகக் கவனம் செலுத்துவர்.
பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு: இந்த மழைக் காலங்களில்  மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட தமிழக பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் 1,275 காவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வடகிழக்குப் பருவ மழைக்காக தயார் நிலையில் உள்ளனர். அது மட்டுமின்றி கடலோர மாவட்டங்களில் 80 பேருக்கும், பிற மாவட்டங்களில் 60 பேருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டத்திலேயே பணியில் இருக்கின்றனர். தேவைப்பட்டால் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவின் உதவியையும் நாங்கள் நாடுவதற்குத் தயாராக உள்ளோம்.
692 பல்துறை மண்டலக் குழுக்கள்: மேலும்,  692 பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை துணை ஆட்சியர் தலைமையில் இயங்கும். இந்தக் குழுக்கள் 6-ஆம் தேதியே பாதிக்கப்படக் கூடிய பகுதிகளுக்குச் சென்று பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும். 30 ஆயிரத்து 759 முதல் நிலை மீட்பாளர்கள் உள்ளனர். அவர்களில் 9 ஆயிரத்து 500 பெண்களும் அடக்கம். இந்த முதல் நிலை மீட்பாளர்கள் 7-ஆம் தேதியன்று எங்காவது பிரச்னை இருந்தால் அவர்கள் ஒருங்கிணைந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதற்கு உதவியாக இருப்பர்.
இதனால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தென்மேற்குப் பருவமழை அதிகளவில் பெய்த  நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் அளவினை பார்த்து நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நீர் நிலைகள் நிரம்பியவுடன் வேறு வழியில் திறந்து விடுவதற்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
 விடுமுறை அறிவிப்பு: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அங்குள்ள நிலவரத்தைப் பொருத்து முடிவு எடுத்து விடுமுறை அளிக்கலாம். கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீண்டும் கரைக்கு திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

மழை அளவை குறிக்கும் வண்ணங்கள்

மழை குறித்து முன்னெச்சரிக்கையை அளிக்கும்போது சில வண்ணங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிடும். அதன்படி பச்சை வண்ணத்தில் இருந்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை.
நீல நிறத்தில் இருந்தால் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவப்பு வண்ணத்தில் இருந்தால் அவர்கள் அளிக்கும் வரைபடத்தில் எந்தப் பகுதியில் சிவப்பு வண்ணம் ("ரெட் அலர்ட்') இடம் பெற்றுள்ளதோ, அந்தப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் அர்த்தம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com