புழல் சிறையில் இருந்து மேலும் 9 காவலர்கள் பணியிட மாற்றம்

சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகள் சொகுசாக வாழ்வதற்கு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஏற்பாடுகள் செய்து கொடுத்த விவகாரத்தில்,
புழல் சிறையில் இருந்து மேலும் 9 காவலர்கள் பணியிட மாற்றம்

சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகள் சொகுசாக வாழ்வதற்கு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஏற்பாடுகள் செய்து கொடுத்த விவகாரத்தில், மேலும் 9 காவலர்களைப் பணியிட மாற்றம் செய்து சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
புழல் மத்திய சிறையில் நடைபெறும் அத்துமீறல்கள் குறித்தும், சில அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட சில கைதிகளுக்கு சொகுசாக வாழ்வதற்கு வசதிகள் செய்து கொடுப்பது குறித்தும் புகைப்படங்களுடன் தினமணி நாளிதழில் கடந்த 10-ஆம் தேதி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சிறைத்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர்.
சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா, புழல் சிறையில் கடந்த 13-ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினார். இச்சோதனைக்கு பின்னர், கடந்த 14, 15 தேதிகளில் புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனை சிறைப் பகுதிக்குள் திடீர் சோதனை நடைபெற்றது.
இச்சோதனையில் அங்கிருந்து 20 டி.வி.கள், மிக்ஸிகள், பழச்சாறு பிழியும் கருவிகள், சமையல் பாத்திரங்கள், பீடி, வெளிநாட்டு சிகரெட், திரைச்சீலைகள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக தண்டனைச் சிறையில் ஏ பிரிவில் அடைக்கப்பட்டிருந்த முகம்மது ரிகாஸ், முகம்மது ரபீக், முகம்மது இப்ராஹிம், முகம்மது ஜாகீர், ரபீக் (எ) நூருதீன் ஆகிய 5 கைதிகள் வேறு மத்திய சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து கோயம்புத்தூர், சேலம், கடலூர், பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் காவல்துறையினரும், சிறைத் துறையினரும் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனை நடத்தி பீடி, சிகரெட் பாக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இருப்பினும் சோதனை குறித்த முன்னரே தகவல் கசிந்ததால், பெரியளவில் பொருள்கள் எதுவும் சிக்கவில்லை சிறைத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் 9 பேர் பணியிட மாற்றம்: இந்த விவகாரம் தொடர்பாக புழல் தண்டனைச் சிறையில் இருந்த இரு தலைமை வார்டர்கள், 6 முதல்நிலை வார்டர்கள் திங்கள்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் புழல் விசாரணைக் கைதிகள் சிறையில் பணிபுரிந்த 2 தலைமை வார்டர்கள், 7 முதல்நிலை வார்டர்கள் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
இதில் தலைமை வார்டர் கே.வெற்றிவேல் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கிளைச் சிறைக்கும், எம்.கண்ணதாசன் செஞ்சி சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல முதல்நிலைக் வார்டர்கள் ஏ.கிருபா ஜெயசிங் பொன்ராஜ், எல்.ராஜ்குமார், எம்.எஸ்.பிள்ளை ஆகியோர் வேலூர் மத்திய சிறைக்கும், எல்.சூர்யநாராயணன், எல்.ஸ்டார்லின் எடிசன் ஆகியோர் கோயம்புத்தூர் மத்திய சிறைக்கும், கே.செல்வன், ஏ.இம்மானுவேல் ஆகியோர் சேலம் மத்திய சிறைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com