ஈழத் தமிழர் படுகொலைக்கு காரணமானவர்களை போர்க் குற்றவாளியாக அறிவிக்கும் வரை போராடுவோம்: அமைச்சர் சி.வி.சண்முகம்

ஈழத் தமிழர் படுகொலைக்கு காரணமானவர்களை போர்க் குற்றவாளியாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் என்று சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
ஈழத் தமிழர் படுகொலைக்கு காரணமானவர்களை போர்க் குற்றவாளியாக அறிவிக்கும் வரை போராடுவோம்: அமைச்சர் சி.வி.சண்முகம்

ஈழத் தமிழர் படுகொலைக்கு காரணமானவர்களை போர்க் குற்றவாளியாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் என்று சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
இலங்கையில் ஈழத் தமிழர்கள் படுகொலைக்குக் காரணமான கட்சிகளைக் கண்டித்து, விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்,  மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த அப்போதைய இலங்கை அதிபர் ராஜபட்ச அண்மையில் புதுதில்லிக்கு வந்தபோது,  ஈழப் போர் வெற்றிக்கு அனைத்து வகையிலும் உதவிய  இந்திய அரசுதான் காரணம் என்று தெரிவித்தார். 
இதன்மூலம் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ்-திமுக கூட்டணியே இந்த துரோகத்தை இழைத்திருப்பது உறுதியாகியுள்ளது. இதனை ராஜபட்ச தெரிவித்து இரு வாரம் ஆன பிறகும் தமிழினத் தலைவர்களாகக் தங்களைக் காட்டிக்கொள்ளும் வைகோ, ராமதாஸ்,  திருமாவளவன் போன்றோர் திமுக, காங்கிரஸூக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?
தமிழர்களுக்காக என்றுமே குரல் கொடுப்பது அதிமுக மட்டுமே. ஈழப் படுகொலையின்போது, அதற்கு காரணமான ராஜபட்சவை சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கச் சொன்னார் ஜெயலலிதா. ஈழப் படுகொலைக்கு துணை போன கருணாநிதி மீதும் குற்றம் சுமத்தினார்.
இன்று அதனை உறுதிப்படுத்திய ராஜபட்சவை சர்வதேச போர்க் குற்றவாளியாக அறிவிப்பதுடன், அந்தப் பட்டியலில் ஈழப் போருக்கு உதவிய கருணாநிதியின் பெயரையும் சேர்த்தால்தான் படுகொலையான ஈழத் தமிழர்களின் ஆன்மா சாந்தியடையும்.  ஈழப் போருக்கு துணை போனவர்களை குற்றவாளியாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி,  முல்லைப்பெரியாறு பிரச்னை, கச்சத் தீவை தாரை வார்த்தது எனத் தமிழர்களுக்கு வாழ்நாள் துரோகத்தை செய்தது திமுக. அதனால் தான் தமிழினத் தலைவர் அண்ணாவின் நினைவிடம் அருகே கருணாநிதிக்கு அரசு இடம் வழங்கவில்லை. இனப் படுகொலை செய்தவர்களை சர்வதேசக் குற்றவாளியாக அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.   இதனைத் தொடர்ந்து, திமுக, காங்கிரஸ் துரோகச் செயலுக்கு எதிராக அதிமுகவினர் கண்டன முழக்கமிட்டனர். 
கூட்டத்தில், முன்னதாக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் இரா.விஸ்வநாதன், ப.மோகன்,  கவிஞர் முத்துலிங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  
பொதுக் கூட்டத்தை விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலர் இரா.லட்சுமணன் எம்பி தொடக்கி வைத்துப் பேசினார். எம்பிக்கள் ஏழுமலை,  காமராஜ்,  ராஜேந்திரன்,  தெற்கு மாவட்டச் செயலர் இரா.குமரகுரு எம்எல்ஏ, சக்கரபாணி எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் ஆனந்தன்,  மாவட்ட இளைஞரணிச் செயலர் ஆர்.பசுபதி,  தொழில் நுட்ப அணிச் செயலர் மணவாளன்,  இலக்கிய அணி பாலாஜி உள்ளிட்ட வடக்கு,  தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com