மக்களவைத் தேர்தல் எதிரொலி: 16 ஏ.டி.எஸ்.பி.க்கள்- 87 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்

மக்களவைத் தேர்தல் எதிரொலியாக, தமிழக காவல்துறையில் 16 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களையும் (ஏ.டி.எஸ்.பி.), 87 காவல் துணைக் கண்காணிப்பாளர்களையும் (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம்


மக்களவைத் தேர்தல் எதிரொலியாக, தமிழக காவல்துறையில் 16 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களையும் (ஏ.டி.எஸ்.பி.), 87 காவல் துணைக் கண்காணிப்பாளர்களையும் (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோன்று சென்னை பெருநகரக் காவல்துறையில் 35 உதவி ஆணையர்களும், 81 காவல் ஆய்வாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்த விவரம்:
தமிழக காவல் துறையில் நிர்வாக வசதிக்காகவும்,விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால், தமிழக காவல்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரிகளை 
பணியிட மாற்றம் செய்யும்படி தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவுறுத்தியது.
இதையடுத்து 3 ஆண்டுகளாக ஒரே பணியிடத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் பட்டியலை காவல்துறை உயர் அதிகாரிகள் தயார் செய்து வந்தனர். இதன் அடிப்படையில் முதல் கட்டமாக தமிழக காவல்துறையில் 61 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் கடந்த 13-ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் 16 ஏ.டி.எஸ்.பி.க்களையும், 87 டி.எஸ்.பி.க்களையும் பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன் திங்கள்கிழமை உத்தரவிட்டார். 
அதேபோல சென்னை பெருநகர காவல்துறையில் 35 உதவி ஆணையர்களையும், 81 காவல் ஆய்வாளர்களையும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் ஏ.டி.எஸ்.பி.க்களில் முக்கியமாக ராமநாதபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்.வெள்ளத்துரை, சென்னை பெருநகர காவல்துறையின் காவலர் நலப்பிரிவுக்கும், சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு என்.குமார், கடலூர் மாவட்ட காவல்துறையின் தலைமையிடப் பிரிவுக்கும், கோயம்புத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏ.முருகசாமி, நாமக்கல் மாவட்ட காவல்துறையின் தலைமையிடப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல டி.எஸ்.பி.க்களில் முக்கியமாக காஞ்சிபுரம் பொருளாதாரக் குற்றப்பிரிவு பி.எஸ்.பொற்செழியன் வேலூர் மாவட்ட குற்ற ஆவணக் காப்பக பிரிவுக்கும், வேலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகப் பிரிவு கே.எஸ்.சுந்தரமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவுக்கும், கடலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைத் துறை வி.கோமதி விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கே.ஸ்ரீதரன் கடலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் 35 உதவி ஆணையர்கள் பணியிடமாற்றம்:  சென்னை பெருநகர காவல்துறையில் 35 காவல் உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் முக்கியமாக கோயம்பேடு எஸ்.ஜான்சுந்தர் ஆவடிக்கும், ஆவடி பி.ஜெயராமன் கோயம்பேடுக்கும், மத்தியக் குற்றப்பிரிவு கே.ரவி புழலுக்கும், பட்டாபிராம் கே.ரமேஷ் மயிலாப்பூருக்கும், நுண்ணறிவுப் பிரிவு சி.நடேசன் மீனம்பாக்கத்துக்கும், நுண்ணறிவுப் பிரிவு வி.கலியன் நுங்கம்பாக்கத்துக்கும், மீனம்பாக்கம் எஸ்.விஜயகுமார் நுண்ணறிவுப் பிரிவுக்கும், சைதாப்பேட்டை அனந்தராமன் நுண்ணறிவு பிரிவுக்கும், நுண்ணறிவுப் பிரிவு எஸ்.சங்கரலிங்கம் சைதாபேட்டைக்கும், கிண்டி பாண்டியன் மத்தியக் குற்றப் பிரிவுக்கும், மத்தியக் குற்றப்பிரிவு வி.விஸ்வேஸ்ரய்யா நீலாங்கரைக்கும், நீலாங்கரை ஆர்.சீனிவாசலு சேலையூருக்கும், பூந்தமல்லி செம்பேடு பாபு எஸ்.ஆர்.எம்.சி.க்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று, சென்னை முழுவதும் 81 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளும் உடனடியாக புதிய பொறுப்பை ஏற்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்புகளை ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com