தொடர்கிறது ஆளுநர் - முதல்வர் பனிப்போர்!

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நடத்திய தர்மயுத்தம் அரசு நிர்வாகம், அரசியல் ரீதியாக
புதுவை ஆளுநர் மாளிகை எதிரே அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட முதல்வர் நாராயணசாமி (கோப்புப் படம்).
புதுவை ஆளுநர் மாளிகை எதிரே அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட முதல்வர் நாராயணசாமி (கோப்புப் படம்).


புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நடத்திய தர்மயுத்தம் அரசு நிர்வாகம், அரசியல் ரீதியாக அவருக்கு எந்த வகையில் கைகொடுக்கும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
 2016-இல் புதுவை முதல்வராக வே.நாராயணசாமி ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த சில வாரங்களில் இருந்தே ஆளுநர் கிரண் பேடி-முதல்வர் இடையே யாருக்கு அதிக அதிகாரம் என்பதில் கடும் போட்டி நிலவியது. கள ஆய்வு,  அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவது,  அமைச்சரவை முடிவுகளைக் கண்டுகொள்ளாதது உள்ளிட்ட ஆளுநர் கிரண் பேடியின் பல்வேறு நடவடிக்கைகள் நாராயணசாமி அரசுக்கு தொடர் தலைவலியை உருவாக்கி வந்தது.
தொடக்கத்தில் ஆளுநருக்கு எதிராக ஆளும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் போராட்டம் நடத்தினாலும், அவருக்கு நெருக்கடி தரும் வகையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் போராட்டம் ஏதும் நடைபெறவில்லை.
இலவச அரிசி,   தீபாவளி இலவசப் பொருள்கள்,  பொங்கல் பரிசுத் தொகுப்பு,  முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட  ஆளும் கட்சிக்கு வாக்கு வங்கியை உருவாக்கும் திட்டங்கள் தொடர்பான கோப்புகளை ஆளுநர் மாளிகைக்கு அரசு அனுப்பியபோது, அதில் தொடர்ந்து கேள்விக் கணைகளை எழுப்பி அந்த கோப்புகளைத் திருப்பி அனுப்பிய வண்ணம் இருந்தார் ஆளுநர் கிரண் பேடி. 
இதை முதல்வர் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கும்போதே, சில  அமைச்சர்கள் ஆளுநர் மாளிகைக்குச் சென்றும், அவருடன் கள ஆய்வுக்குச் சென்றும் முதல்வருக்கு மறைமுக நெருக்கடி கொடுப்பது போல ஆளுநரின் செயலுக்கு ஊக்கம் அளித்தனர். இதுபோன்ற நடவடிக்கைகள் ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு நற்சான்று அளிப்பதாக மாறி,  புதுவை அரசு நிர்வாகத்தில் பல அவிழ்க்க முடியாத சிக்கல்களை உருவாக்கிவிட்டன. 
குறிப்பாக,  புதுச்சேரியின் பாரம்பரிய ஏஎஃப்டி பஞ்சாலை,  சுதேசி பஞ்சாலை,  பாரதி பஞ்சாலைகளை இயக்க முடியாதது,  இலவச அரிசித் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த முடியாதது,   தீபாவளி,  பொங்கல் காலங்களில் தமிழகத்தைப் போல இலவசப் பொருள்களை வழங்க முடியாதது, அரசு அதிகாரிகள் முழுமையாக  ஆளுநர் மாளிகை கட்டுப்பாட்டுக்குள் வந்தது,  அமைச்சர்களுக்கே தெரியாமல் முக்கிய கோப்புகளுக்கு ஆளுநர் மாளிகை அனுமதி வழங்குவது, அமைச்சரவை முடிவுகளைச் செயல்படுத்த முடியாமல் இருப்பது, அனைத்துத் துறைகளின் அன்றாட நடவடிக்கைகளிலும் ஆளுநரின் நேரடித் தலையீடு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கிறது முதல்வர் நாராயணசாமி அரசு.
ஆளுநர்-முதல்வர் இடையே பனிப்போர் இருந்தாலும், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கட்டாய தலைக்கவச சட்டத்தை அமல்படுத்துவதில் இருவருக்கும் இடையே கடுமையான அதிகாரப் போட்டி நிலவியது. இறுதியில் ஆளுநரின் உத்தரவையே காவல் துறை அதிகாரிகள் செயல்படுத்தினர். இதன் விளைவு 3 நாள்களில் 30ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரசு நிர்வாகம் தன் கையை விட்டு முழுமையாகச் சென்றுவிட்டதாக உணர்ந்த முதல்வர் நாராயணசாமி,   பிப்.13-ஆம் தேதி திடீரென ஆளுநர் மாளிகை முன் தர்னா போராட்டத்தைத் தொடங்கினார். பிப்.7-இல் ஆளுநர் மாளிகையில் தான் அளித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள 39 கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே தர்னாவைக் கைவிடப்போவதாக அறிவித்தார்.
இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஆளுநர் கிரண் பேடி,   துணை நிலை ராணுவத்தை புதுச்சேரிக்கு வரவழைத்து ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பை பலப்படுத்தினார்.  பிப்.14-இல் தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றாலும்,  பின்னர் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு புதுச்சேரிக்கு வந்து பேச்சுவார்த்தைக்கு முதல்வரை அழைத்தார். 
அதற்கு முதல்வர் விதித்த 4 நிபந்தனைகளை முற்றிலும் நிராகரித்தார் ஆளுநர் கிரண் பேடி.  பிப்.17-ஆம் தேதி முதல்வர் நாராயணசாமி தனது நிபந்தனைகளைத் தளர்த்தியதால் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு மீண்டும் முதல்வரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் கிரண் பேடி.
சுமார் நான்கரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் முதல்வரின் 39 கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைத்ததா என்ற கேள்விக்கு இதுவரை விடை இல்லை. ஆளுநருடன் நான்கரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தையின்போது ஆளுநர் இறங்கி வரவேயில்லை. ஒரு சில கோரிக்கைகளை மட்டும் பரிசீலிப்பதாகவும், மற்றவை ஆளுநர் அதிகாரத்துக்கு உள்பட்டது, அது குறித்துப் பேச வேண்டாம் என்று திரும்பத் திரும்ப கூறியதாகவும் மூத்த  அமைச்சர்  ஒருவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
கோரிக்கைகளை ஆளுநர் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார் என்று முதல்வர் நாராயணசாமி கூறினாலும், அவரது 39 கோரிக்கைகளும் ஆளுநர் முன் அப்படியேதான் இருக்கின்றன. தனக்குத்தான்  முழு அதிகாரம் என்பதைப் பேச்சுவார்த்தையின்போதே  சொல்லாமல் சொல்லிவிட்டார் ஆளுநர் கிரண் பேடி. 
எனினும்,  இலவச அரிசி,  முதியோர் ஓய்வூதியம்,  ஏஎஃப்டி பஞ்சாலை விவகாரம்,  அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியப் பிரச்னைகளுக்குத் தீர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை ஆளுநர் ஏற்றுக்கொண்டால் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அது தனக்கு சாதகமாகும் என்பது முதல்வர் தரப்பினரின் கணக்கு.
மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக முதல்வரின் முக்கிய கோரிக்கைகளை ஆளுநர் கிரண் பேடி ஏற்பாரா,  மாட்டாரா என்பது புதிராகவே தொடர்கிறது.

புதுவை முதல்வரின் தர்னா போராட்டத்தின்போது, ஆளுநர் மாளிகை வளாகத்தில் சைக்கிளில் வலம் வந்து உடல் பயிற்சியில் ஈடுபட்ட கிரண் பேடி (கோப்புப் படம்).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com