அமைச்சரின் உறவினர் வீடுகளில் வருமான வரி சோதனை

வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்கள்,


வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
ஜோலார்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.சி.வீரமணியின் குடும்பத்தினருக்குச் சொந்தமான ஆர்.எஸ்.திருமண மண்டபத்திலும், அதன் மேலாளர் சத்தியமூர்த்தி வீடு, ஜோலார்பேட்டை நகர அதிமுக செயலர் சீனிவாசனின் இடையம்பட்டி வீடு, ரியல் எஸ்டேட் அதிபர் கண்ணன் வீடு, திருமண மண்டபம், நாட்றம்பள்ளியில் உள்ள அதிமுக பிரமுகர் சிவா வீடு ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
அத்துடன், காட்பாடி காந்தி நகர் 8-ஆவது தெருவில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் ராமமூர்த்தி, அதேப் பகுதியில் உள்ள அவரது சகோதரர் மோகன் ரெட்டி, டாக்டர் கோபாலகிருஷ்ண நகரிலுள்ள ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள், வேலூரில் உள்ள சாய் சிட்டி சென்டர் அலுவலகம் என பல்வேறு இடங்களிலும் வியாழக்கிழமை  சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனை காலை 7 மணிக்கு தொடங்கி நீண்டநேரம் நடைபெற்றது.
அதேபோல், ஆந்திர பால் நிறுவன உரிமையாளர்கள் பிரம்மானந்தம் தண்டா, சத்தியநாராயணா ஆகியோருக்கு சொந்தமான வீடு, சென்னை மாதவரம் அருகேயுள்ள பொன்னியம்மன்மேடு, கொளத்தூர் ஆகிய இடங்களில் உள்ள பால் நிறுவனங்கள் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் கே.வி.குப்பம் ரூஷா டவுன்ஷிப் பகுதியில் உள்ள திமுக பிரமுகரும், ஒப்பந்ததாரருமான சிவக்குமாரின் அடுக்குமாடிக் குடியிருப்பிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இச்சோதனையை தில்லி வருமான வரித் துறை உயரதிகாரிகள் குழுவினர், சென்னையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டதாகத் தெரிகிறது.
எதற்காக சோதனை: வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள 6.90 ஏக்கர் நிலம் தொடர்பாக காட்பாடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்கும், அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமமூர்த்தி தரப்பினர் வழக்குத் தொடர்ந்தனர். அதில் அவர்கள் நிலப் பிரச்னையில் அமைச்சர் தலையிடுவதாக குற்றம் சாட்டியிருந்தனர். 
இவ்வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அந்த நில விவகாரத்தில் அமைச்சருக்கு தொடர்பில்லை என்று உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. ரூ.300 கோடி மதிப்பிலான இந்த நிலப்பிரச்னை தொடர்பாகவே இந்த திடீர் சோதனை சென்னை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com