அதிமுக எம்.பி. ராஜேந்திரன் கார் விபத்தில் பலி

விழுப்புரம் மக்களவைத் தொகுதி அதிமுக எம்.பி.  எஸ். ராஜேந்திரன் (63) திண்டிவனத்தில் சனிக்கிழமை காலை நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.
அதிமுக எம்.பி. ராஜேந்திரன் கார் விபத்தில் பலி

விழுப்புரம் மக்களவைத் தொகுதி அதிமுக எம்.பி.  எஸ். ராஜேந்திரன் (63) திண்டிவனத்தில் சனிக்கிழமை காலை நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு பாமக நிறுவனர் ச.ராமதாஸ் அளித்த விருந்து உபசரிப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருடன் ராஜேந்திரன் எம்.பி.யும் கலந்து கொண்டார். விருந்து முடிந்து எஸ்.ராஜேந்திரன் திண்டிவனம் அருகே அரசு பயணியர் விடுதியில் தங்கினார். 

சனிக்கிழமை காலை 6 மணியளவில் தனது காரில் சென்னைக்கு பணி நிமித்தமாக ராஜேந்திரன்  புறப்பட்டார். காரை ஓட்டுநர் அருமைச்செல்வம் (24) ஓட்டிச் சென்றார். ராஜேந்திரனின் உறவினரான ஆசிரியர் தமிழ்ச்செல்வன் (58) உடன் சென்றார். 

கார் திண்டிவனம் நகர எல்லைக்குள் நுழைந்தபோது, தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் விழுப்புரம்-சென்னை சாலையின் நடுவே அமைக்கப்பட்டு வரும் தடுப்புக் கட்டையில் பலமாக மோதியது. 

இதில், ராஜேந்திரனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மயங்கி விழுந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த திண்டிவனம் காவல் நிலைய ஆய்வாளர் சீனிபாபு, ராஜேந்திரனை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். 

பலத்த காயமடைந்த ஓட்டுநர் அருமைச்செல்வம்,  தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திண்டிவனம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி: 

இதனைத் தொடர்ந்து காலை 11.40 மணியளவில் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் ராஜேந்திரனின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி,  குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

ராமதாஸ்,க.பொன்முடி அஞ்சலி: மாலையில் பாமக நிறுவனர் ச.ராமதாஸ், மாநில இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com