ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஆக்கிரமிப்பு கட்டட விவகாரங்களில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


ஆக்கிரமிப்பு கட்டட விவகாரங்களில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், திருவள்ளூர் மாவட்டம் சென்னீர்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த என்.ராம்குமார் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனுவில், தங்களது நிலத்துக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலித்து 30 நாள்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. 
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால் மற்றும் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் நர்மதா சம்பத், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரர்களின் கோரிக்கை மீது விசாரணை நடத்தப்பட்டு கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவில் மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், அவர்கள் பட்டா கோர முடியாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இதுபோன்ற வழக்குகளில், மனுதாரர்களின் முறையீடுகளை அதிகாரிகள் நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் கூறி முடித்து வைக்கக்கூடாது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது அரசு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் தொடர்பாக தவறான தகவல்களை நீதிமன்றத்துக்கு கொடுத்தாலும் அந்த அதிகாரி கடமையைச் செய்ய தவறவிட்டதாக கருத வேண்டும். எனவே இதுதொடர்பாக வீட்டுவசதி மற்றும் நகரமைப்புத் துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், நகர நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நகர நிர்வாக ஆணையர், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் ஆகியோர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். 
நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
எனவே விதிகளுக்குப் புறம்பாக ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் மற்றும் குடிநீர் விநியோகத்தை ரத்து செய்தால் அதனை மற்றவர்களுக்கு வழங்கலாம் என்ற கருத்தை இந்த வழக்கில் கூறுவது பொருத்தமாக இருக்கும் என கருத்து தெரிவித்து வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com