ஜல்லிக்கட்டு : அவனியாபுரத்தில் 47 பேர் காயம்

பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.15) நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 47 பேர் காயமடைந்தனர். 
வாடிவாசலில் இருந்து வெளியேறும் போது வீரர்களை மிரள வைத்த காளை.
வாடிவாசலில் இருந்து வெளியேறும் போது வீரர்களை மிரள வைத்த காளை.


பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.15) நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 47 பேர் காயமடைந்தனர். 
அவனியாபுரத்தில் நிகழாண்டில் ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவது தொடர்பாக விவசாயிகள் சங்கம் மற்றும் கிராம மக்களிடையே எழுந்த பிரச்னையால் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் தலைமையில் 3 வழக்குரைஞர்கள் மற்றும் கிராமத்தினர் உள்பட 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தன.
முதல்முறையாக மாடுபிடி வீரர்களுக்கு ரூ. 12-க்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலும், ரூ. 300-க்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலும் காப்பீடு வசதி செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் அவனியாபுரம் சாலையில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன், மாவட்ட ஆட்சியர் ச. நடராஜன் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வீரர்களும் காளைகளும் மருத்துவப் பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டனர். 
காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. 
விழாவில் 691 காளைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 8 சுற்றுகளில் 480 காளைகள் களத்தில் பாய்ந்தன. அவற்றை அடக்க 594 வீரர்களில் 550 பேர் களத்தில் இறங்கினர். 
போட்டியில் அவனியாபுரத்தைச் சேர்ந்த காளிமுத்து, ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ஆகிய இரு காவலர்கள், காசிராஜன், ராஜ்கமல், சிறுவன் மணிகண்டன் மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்போர், பார்வையாளர்கள் என 47 பேர் காயமடைந்தனர். 
இவர்களில் பலத்த காயமடைந்த 9 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
போட்டியில் வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், வெள்ளிக் காசு, மிக்ஸி, ஃபேன், கேஸ் அடுப்பு, வேஷ்டி, சட்டை உள்பட ஏராளமான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. 
முத்துப்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு 9 காளைகளையும், முடக்கத்தானை சேர்ந்த அறிவு அமுதன் 7 காளைகளையும், சோலையழகுபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகபாண்டி, அஜித்குமார் ஆகிய இருவரும் 6 காளைகளையும் அடக்கினர்.
கீழ்மலையனூரைச் சேர்ந்த அங்காள பரமேஸ்வரியின் காளை முதல் இடத்தையும், காஞ்சரங்குளத்தைச் சேர்ந்த கோயில் காளை 2ஆவது இடத்தினையும், ராஜாக்கூர் எம்.பி. ஆம்புயனஸ் காளை மூன்றாவது இடத்தையும் பிடித்ததாக விழாக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், பங்கேற்ற அனைத்து மாடுபிடி வீரர்களுக்கும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com