சாத்தனூர் அணையில் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பு: தடுக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கினர்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள சாத்தனூர் அணையில் திருட்டுத்தனமாக மீன் பிடித்த கும்பலைத் தடுக்கச் சென்ற 5 பேர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் நீரில் மூழ்கினர். இவர்களில், ஒருவரின் சடலம்
அணையில் மூழ்கிய செந்திலை தேடும் பணியில் மீன் பிடிக்கும் தொழிலாளர்கள்.
அணையில் மூழ்கிய செந்திலை தேடும் பணியில் மீன் பிடிக்கும் தொழிலாளர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள சாத்தனூர் அணையில் திருட்டுத்தனமாக மீன் பிடித்த கும்பலைத் தடுக்கச் சென்ற 5 பேர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் நீரில் மூழ்கினர். இவர்களில், ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. மற்றொருவரின் சடலத்தைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
செங்கத்தை அடுத்த சாத்தனூர் அணையில் மீன் பிடித்து விற்பனை செய்ய கடந்த 2018, மார்ச் மாதம் முதல் ஓராண்டுக்கு ரூ.1.25 கோடிக்கு தனியாருக்கு குத்தகை விடப்பட்டது. குத்தகைதாரர் தற்காலிக ஊழியர்களைக் கொண்டு மீன்களைப் பிடித்து விற்பனை செய்து வருகிறார்.
இதனிடையே, சாத்தனூர் அணைக்கு வரும் தென்பெண்ணை ஆற்றிலும், அணைப் பகுதியிலும் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பதாக குத்தகைதாரருக்கு தகவல் கிடைத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, திருட்டுத்தனமாக மீன் பிடிப்பவர்களைத் தடுக்க பகல், இரவு வேளைகளுக்கு தனித்தனியாக குழு அமைத்து குத்தகைதாரர் கண்காணித்து வந்தார்.
இந்த நிலையில், மல்லிகாபுரம், சாத்தனூர் பகுதிகளைச் சேர்ந்த தற்காலிக ஊழியர்களான சிலம்பரசன் (27), முனியப்பன் (35), சந்தோஷ் (25), மூர்த்தி (45), செந்தில் (35) ஆகிய 5 பேரும் வெள்ளிக்கிழமை மாலை திருட்டுத்தனமாக மீன் பிடிப்பவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் மோட்டார் படகு மூலம் தென்பெண்ணை ஆற்றுப் பகுதியிலுள்ள கோரையாறு பகுதிக்குச் சென்ற போது, அங்கு திருட்டுத்தனமாக மீன் பிடிக்கும் கும்பல் ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் படகை உடைத்து, 5 பேர் மீதும் சரமாரியாகத் தாக்கியதாம்.
இதில் பலத்த காயமடைந்த 5 பேரும் தண்ணீரில் குதித்து சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு நீந்தி தப்பிச் செல்ல முயன்றனர். இவர்களில் சிலம்பரசன், முனியப்பன், மூர்த்தி ஆகியோர் நீத்தி கரையேறினர். பலத்த காயமடைந்த சந்தோஷ், செந்தில் ஆகியோர் நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கினராம்.
இதுகுறித்து தகவலறிந்த செங்கம் டிஎஸ்பி குத்தாலிங்கம் தûலைமையிலான சாத்தனூர், செங்கம் போலீஸார், தீயணைப்பு வீரர்கள், மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் மோட்டார் படகு மூலம் நீரில் மூழ்கியவர்களை வெள்ளிக்கிழமை இரவு தேடினர். இந்த நிலையில், சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் மோதல் நடைபெற்ற பகுதிக்கு அருகில் சந்தோஷ் சடலமாக மீட்கப்பட்டார். செந்திலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  தாக்குதல் நடத்திய கும்பலை சாத்தனூர் அணை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com