மருந்து அட்டைகளில் "பார் கோடு'

தமிழக அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்களின் பயன்பாட்டுக்காக கொள்முதல் செய்யப்படும் மருந்துகளில் "பார் கோடு" (தனித்துவ அடையாளக் குறியீடு) அச்சிடப்படுவதைக்ட்டாயமாக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.
மருந்து அட்டைகளில் "பார் கோடு'

தமிழக அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்களின் பயன்பாட்டுக்காக கொள்முதல் செய்யப்படும் மருந்துகளில் "பார் கோடு" (தனித்துவ அடையாளக் குறியீடு) அச்சிடப்படுவதைக்ட்டாயமாக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மருந்து உற்பத்தியாளர்களிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதில் உள்ள சாதக, பாதகங்களைப் பரிசீலித்த பிறகு இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மத்திய அரசு இதுதொடர்பாக மருந்து உற்பத்தியாளர்களுக்கு ஓர் உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதாவது வரும் ஏப்ரல் மாதம் முதல்,  மத்திய சுகாதாரத் துறை கொள்முதல் செய்யும் மருந்துகளின் அட்டைகளில் தனித்தனியே பார் கோடு அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அதன் தொடர்ச்சியாகத் தற்போது மாநில அரசும் அத்தகைய முயற்சியில் இறங்கியுள்ளது. அவ்வாறு ஒவ்வொரு அட்டையிலும் பார் கோடுகள் அச்சிடப்பட்டால் அவற்றை எளிமையாகக் கையாள முடியும் என்றும், மருந்துகளின் விவரங்களை எங்கிருந்து வேண்டுமானாலும் அறிந்து கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் 4,200 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. மத்திய அரசு மருத்துவமனைகள், பொது சுகாதார மையங்கள், காசநோய், எய்ட்ஸ் தடுப்பு மையங்கள், ராணுவ மருந்தகங்கள் உள்ளிட்டவற்றுக்குத் தேவையான மருந்துகளை அந்த உற்பத்தி நிறுவனங்கள் விநியோகித்து வருகின்றன. அதேபோன்று, தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளும் பொது மருத்துவமனைப் பயன்பாட்டுக்காகவும், சுகாதாரத் திட்டங்களுக்காகவும் ஒப்பந்தப் புள்ளிகள் மூலமாக மருந்துகளைக் கொள்முதல் செய்து வருகின்றன.
மத்திய அரசு சார்பில் ஆண்டொன்றுக்கு ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. தமிழக சுகாதாரத் துறையானது ரூ.650 கோடி மதிப்பிலான மருந்துகளை வாங்குகிறது.
இதற்கான ஒப்பந்த விதிகள் மிகக் கடுமையாக்கப்பட்டுள்ளன. உரிய உரிமமும்,  தரமும் இல்லாத எந்த மருந்தையும் மத்திய, மாநில அரசுகள் கொள்முதல் செய்வதில்லை. இருந்தபோதிலும், காலாவதியான மருந்துகளில் புதிய தகவல்கள் அச்சிடப்படுவதற்கும், போலி மருந்துகள் அரசு மருத்துவமனைகளுக்குள் ஊடுருவுவதற்கும் சில வாய்ப்புகள் இருந்து வந்தன.
அதனைத் தவிர்க்கும் பொருட்டு சில நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. அதாவது, மருந்து அட்டைகளில் பார் கோடுகளை அச்சிட்டு வழங்குமாறு உற்பத்தியாளர்களுக்கு மத்திய சுகாதாரத் துறை  கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஓர் உத்தரவை பிறப்பித்தது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அதனை நடைமுறைப்படுத்துமாறும் அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசும் இதுபோன்றதொரு உத்தரவை பிறப்பிக்குமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். 
இதுகுறித்து, மாநில மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநர் உமாநாத்திடம் கேட்டபோது அவர் அளித்த பதில்:
மருந்துகளின் அட்டையிலோ அல்லது பெட்டிகளிலோ பார் கோடுகளை அச்சிட்டால், அவற்றை எளிமையாகக் கையாளலாம் என்பது உண்மைதான். அதேவேளையில், அதனை அச்சிடுவதில் உள்ள நடைமுறை சாத்தியங்கள் குறித்து உற்பத்தியாளர்களின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம். அவற்றைப் பரிசீலித்து அதன் அடிப்படையில் புதிய உத்தரவுகளையும், அறிவுறுத்தல்களையும் வெளியிடுவோம் என்றார் அவர்.
மருந்து உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு: ஒவ்வொரு மருந்து அட்டைகளிலும் பார் கோடு அச்சிடுவது என்பது இயலாத காரியம் என்று மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பார் கோடுகளால் மட்டும் போலி மருந்துகளைக் கண்டறிய முடியாது என்றும் கூறியுள்ளது.
இதுகுறித்து இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தமிழகம், கேரளம், பாண்டிச்சேரி பிரிவு தலைவர் ஜெயசீலன் கூறியதாவது:
போலி, தரமற்ற மருந்துகள் பயன்பாட்டுக்கு வருவதைத் தடுக்க அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாறாக, மருந்து உற்பத்தியாளர்களுக்குக் கடுமையான விதிகளை விதிப்பது எப்படி நியாயம்? மருந்துப் பெட்டிகளில் பார் கோடு அச்சிடலாம். ஆனால், ஒவ்வொரு அட்டையிலும் அச்சடிப்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை. 
இதனால் உற்பத்தித் திறன் பாதிக்கும். அதற்கென ஆயிரம் கோடி மதிப்பிலான இயந்திரங்கள் வாங்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக மருந்துகளின் விலையும் அதிகரிக்கக் கூடும். எனவே, இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com