திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூல்: மாநகராட்சி ஊழியர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை

மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் படங்கள் திரையிடப்பட்டுள்ள 22 திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என ஆய்வு செய்ய


மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் படங்கள் திரையிடப்பட்டுள்ள 22 திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் பணிபுரியாத மாநகராட்சி ஊழியர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்ய ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரபாண்டி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் கடந்த நவம்பர் 6 இல் வெளியானது. இத்திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. இதனால் ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சர்கார் திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்தது தொடர்பாக மதுரை மாவட்டத்தில் 8 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட, அஜீத் நடித்த விஸ்வாசம் திரைப்படங்களுக்கும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் வெளியான 22 திரையரங்குகளிலும் கூடுதல் கட்டணம் வசூல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு திரையரங்குக்கு 3 பேர் வீதம் வருவாய்த் துறை, மாநகராட்சி அதிகாரிகள், வழக்குரைஞர்கள் அடங்கிய குழுக்களை அமைத்தனர். 
இந்தக் குழுக்கள் மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் படங்கள் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு ஜனவரி 17 வரை நேரில் சென்று ஆய்வு நடத்தி, ஜனவரி 18 இல் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி தரப்பில் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட 2 அலுவலர்கள் ஆய்வுக்குச் செல்லாதது தெரியவந்தது. இருவரும் நேரில் ஆஜரான நிலையில், இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மதுரை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
மேலும், கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் தொடர்பாக ஒருங்கிணைந்த அறிக்கை தாக்கல் செய்யவும், மதுரை மாவட்டத்தில் ஜன. 10ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியான திரையரங்குகளின் தினசரி வசூல் ஆவணங்களை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
இந்த வழக்கில் கேளிக்கை வரி அலுவலர்களைத் தாமாக முன்வந்து சேர்த்த நீதிமன்றம், அது தொடர்பான கோப்புகளைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com