நோயாளிகளின் குறைகளைத் தீர்க்க மருத்துவமனைகளில் சிறப்புக் குழு: அரசு அறிவிப்பு

நோயாளிகளின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காண்பதற்காக அரசு மருத்துவமனைகளில் சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவித்தார்.
நோயாளிகளின் குறைகளைத் தீர்க்க மருத்துவமனைகளில் சிறப்புக் குழு: அரசு அறிவிப்பு


நோயாளிகளின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காண்பதற்காக அரசு மருத்துவமனைகளில் சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்புகள்:
அனைத்து மாவட்டம், வட்டம் மற்றும் வட்டம் சாராத மருத்துவமனைகளில் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்காக ரூ.21 கோடி செலவில் அங்கு ஜெனரேட்டர் சாதனங்கள் நிறுவப்படும். மருந்து மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்ய தற்போது சென்னையில் மட்டுமே ஆய்வுக்கூடம் உள்ளது. இந்நிலையில், எதிர்வரும் ஆண்டுக்குள் மதுரையிலும் ரூ.20 கோடி செலவில் மருந்து பகுப்பாய்வு மையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை உயர் சிகிச்சைக்காக பிற மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு அதிநவீன வசதிகள் கொண்ட சிறப்பு வாகனங்கள் தேவை. அந்த அடிப்படையில் 120 வாகனங்கள் ரூ.19.2 கோடி செலவில் வாங்கப்படும்.
அவற்றைத் தவிர 121 அவசர சிகிச்சை வாகனங்களும் ரூ.26.39 கோடிக்கு கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று பச்சிளம் குழந்தைகளுக்கென 14 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்கள் ரூ.4.2 கோடியில் வாங்கப்பட உள்ளன.
வருமுன் நோய்களைத் தடுக்கும் பொருட்டு 100 ஆரம்ப சுகாதார நிலையங்களில், நடைப்பயிற்சி, யோகா பயிற்சி, உடற்பயிற்சி, அக்குபிரஷர் சிகிச்சைகள் மேற்கொள்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. ரூ.10 கோடி செலவில் அந்த கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.  பச்சிளம் குழந்தைகளை சரியாக வளர்த்தெடுப்பது குறித்த புரிதலை தாய்மார்களுக்கு ஏற்படுத்தும் விதமாக சென்னையில் ஒருங்கிணைந்த கட்டணமில்லா உதவி மையம் ஏற்படுத்தப்படும்.
அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுக்கு அருகில் உள்ள மக்களுக்கும், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு மேம்பாட்டுக் குழு அமைக்கப்படும். அதன் வாயிலாக மருத்துவமனை மற்றும் மக்கள் இடையேயான உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், காவல் துறையினரின் உதவியை உடனடியாக நாடும் வகையிலும் சிறப்பு அழைப்பு மையம் (ஹாட் லைன்) அமைக்கப்படும். மாநிலத்தில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் முதல்கட்டமாக அந்த வசதிகள் செய்யப்பட உள்ளன.
தமிழகத்தில் காசநோயை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், அந்நோயின் தாக்கம் குறித்த கணக்கெடுப்பு ரூ.9.5 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
சென்னையில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் 25 படுக்கைகளுடன் கூடிய கட்டண சிகிச்சைப் பிரிவு விரைவில் தொடங்கப்படும். ரூ.2 கோடி மதிப்பீட்டில் அதற்கான கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com