முன் அறிவிப்பு இல்லாமல் மூடப்பட்டது: உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் குற்றச்சாட்டு

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை முறையாக பின்பற்றியும், தமிழக அரசு எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம்
முன் அறிவிப்பு இல்லாமல் மூடப்பட்டது: உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் குற்றச்சாட்டு

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை முறையாக பின்பற்றியும், தமிழக அரசு எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வாதிட்டது.

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, வேதாந்தா நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் பதில்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 

அப்போது ஸ்டெர்லைட் ஆலை சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் மாசிலாமணி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை முறையாகப் பின்பற்றியும், தமிழக அரசு எந்தவொரு முன்னறிவிப்புமின்றி ஆலையை மூடி உள்ளது. ஆலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதித்த அளவில்தான் மாசு இருந்து வந்தது. ஆனால், திடீரென அனுமதித்த அளவைக் காட்டிலும் கூடுதலாக மாசு வெளியேற்றப்பட்டதாகக் கூறி, ஆலையை மூட அரசு உத்தரவிட்டது சட்ட விரோதமானது. 

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு எதுவும் மேற்கொள்ளாமல் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் தீயணைப்புத்துறை உள்பட அனைத்து விதமான அனுமதிகளையும் பெற்றே ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. ஆனால், தமிழக அரசு இதனை கருத்தில் கொள்ளவில்லை. 

ஆலையை மூட வேண்டும் என்றால், அதுதொடர்பாக முன்கூட்டியே நோட்டீஸ் பிறப்பித்து இருக்க வேண்டும். ஆனால் இதுவரை அப்படி எந்தவொரு நோட்டீûஸயும் பிறப்பிக்கவில்லை. பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகுத்து, அதிகமான வேலைவாய்ப்பைக் கொடுத்த ஒரு ஆலையை இப்படி அடிப்படை காரணமே இல்லாமல் மூட உத்தரவிட்டிருப்பது ஏற்புடையது அல்ல. ஆலையை மூடுவதற்கு முன்பாக ஒரு குழுவை அமைத்து அந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையிலேயே ஆலையை மூட முடியும். 

அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கையாலோ ஆலையை மூட முடியாது.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதென்பது தமிழக அரசின் கொள்கை முடிவு கிடையாது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு அவசரகதியில் செயல்பட்டுள்ளது. அறிவியல் ரீதியான ஆய்வு அறிக்கைகள் எதுவும் இல்லாதபோது, மக்களின் போராட்டத்தைக் காரணம் காட்டி ஆலையை மூடியிருப்பது சட்ட விரோதமானது. 

மக்களின் போராட்டம் தான் காரணம் என்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலைகளையும் மூட வேண்டியிருக்கும். 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு, கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு தேவையான நிலம், தண்ணீர், மின்சாரம், தரச்சான்று உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாக, வாதிட்டார். 

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் வாதங்களை முன்வைக்க 3 நாள்கள் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை  ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com