மேம்படுத்தப்படாத கூந்தன்குளம் சரணாலயம்: வசிப்பிடம் தேடி இடம்பெயரும் வெளிநாட்டுப் பறவைகள்!

திருநெல்வேலி மாவட்டம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் போதிய மேம்பாட்டுப் பணிகள் செய்யப்படாததால் வெளிநாட்டுப் பறவைகள் வசிப்பிடம் தேடி சுற்றுவட்டார கிராமங்களுக்கு
மேம்படுத்தப்படாத கூந்தன்குளம் சரணாலயம்: வசிப்பிடம் தேடி இடம்பெயரும் வெளிநாட்டுப் பறவைகள்!

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் போதிய மேம்பாட்டுப் பணிகள் செய்யப்படாததால் வெளிநாட்டுப் பறவைகள் வசிப்பிடம் தேடி சுற்றுவட்டார கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. இதனால், வரும் ஆண்டுகளில் வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

 நான்குனேரி வட்டம் கூந்தன்குளத்தில் பறவைகள் சரணாலயம் கடந்த 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 132 ஏக்கர் குளம் உள்பட சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் வனத்துறையின் கண்காணிப்பின் கீழ் உள்ள இந்த சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவையினங்கள் தங்கி இனப்பெருக்கம் செய்து மீண்டும் தங்களது நாடுகளுக்கு திரும்புகின்றன. தமிழ் மாதங்களில் தை அமாவாசை முதல் ஆடி அமாவாசை வரை பறவைகள் வசிக்கின்றன.
 ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ரஷியா, ஜெர்மனி, பிலிப்பின்ஸ், நைஜீரியா, சைபீரியா ஆகிய நாடுகளில் இருந்தும் ஹிமாசலப் பிரதேசம், அஸ்ஸாம் பகுதிகளில் இருந்தும் இங்கு பறவைகள் வந்து கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்துச் செல்கின்றன. 234 பறவையினங்கள் இங்கு வருகின்றன. கூழைக்கடா, பூநாரை, நீர்க் காக்கை, பாம்புதாரா, செண்டுவாத்து, புள்ளிமூக்கு வாத்து, நத்தை கொத்திநாரை, அரிவாள் மூக்கன், நாமக்கோழி, கானாங்கோழி, பட்டைத்தலை வாத்து, சாம்பல்நாரை, முக்குளிப்பான், சம்புகோழி, சாரைநாரை, பவளக்கால் உள்ளான், சிறகி, நீளசிறகி ஆகியவை அதிகம் வந்துசெல்கின்றன.
 ஆண்டுதோறும் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான கூடுகளை கூந்தன்குளம் கிராமத்தைச் சுற்றியுள்ள மரங்களில் வெளிநாட்டுப் பறவைகள் கட்டிச் செல்கின்றன. நிகழாண்டில், செங்கால்நாரைகள், மஞ்சள்மூக்கு ஆள்காட்டி குருவி, சிவப்பு மூக்கு ஆள்காட்டி குருவி, கல்குருவி, மணல்புறா, வானம்பாடி ஆகியவை அதிகம் உள்ளன.
 மீன்களை அதிகம் உண்ணும் வெளிநாட்டு பறவையினங்கள் தங்களது குஞ்சுகளுக்காக 50 கி.மீ. தொலைவில் இருந்துகூட மீன்களைப் பிடித்துவந்து ஊட்டுகின்றன. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் காட்சிக்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்களும், பொதுமக்களும் காலை, மாலை நேரங்களில் அவற்றில் இருந்து பறவைகளைப் பார்த்து ரசித்துச் செல்கின்றனர். விளையாட்டுப் பூங்காவும் உள்ளதால் குடும்பத்தோடு வருபவர்கள் நாள் முழுவதும் இருந்து பறவைகளை ரசிக்க முடியும். ஆய்வு மாணவர்கள் தங்குவதற்கு வசதியாக வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அறைகளும் உள்ளன.
 மேம்பாட்டுப் பணிகள் இல்லை: இதுகுறித்து கூந்தன்குளம் கிராம மக்கள் கூறியது: கூந்தன்குளத்துக்கு கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வெளிநாட்டுப் பறவையினங்கள் வருகின்றன. பறவைகளை எங்கள் விருந்தினர்களாகவே பார்க்கிறோம். வீட்டு மரங்களில் அவை குடியேறி எச்சம் போட்டாலும் அதை விரட்டியடிப்பதில்லை. தீபாவளி உள்பட எந்தக் கொண்டாட்டத்துக்கும் பட்டாசு வெடிப்பதில்லை.
 இந்த சரணாலயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இங்குள்ள விருந்தினர் மாளிகை, பூங்கா ஆகியவை பராமரிப்பின்றி உள்ளன. மாணவர்கள், பொதுமக்களுக்காக காட்சிக்கூடம் கட்டப்பட்டு, இப்போது செயல்பாடின்றி உள்ளது. கழிப்பறை வசதி இல்லாததால், பறவைகளைப் பார்வையிட வரும் பெண்கள், மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். கூந்தன்குளத்திற்கு நாளொன்றுக்கு 4 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால், வெளியூர் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்ல சிரமப்படுகின்றனர். கூந்தன்குளம் குளத்திற்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவர பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவருகிறோம். அதேபோல, குளத்தில் ஆண்டுதோறும் அரசு சார்பில் மீன்குஞ்சுகளை விட்டு வெளிநாட்டுப் பறவைகளுக்கு உணவளிக்க வலியுறுத்தி வருகிறோம். எங்கள் கிராமத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்றனர்.
 வடக்கு கழுவூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகன் கூறியது: கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் போதிய மீன்கள் கிடைக்காததாலும், ஒலி மாசு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களாலும் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் நிகழாண்டில் இடம்பெயர்ந்து அருகேயுள்ள கிராமங்களில் கூடுகட்டியுள்ளன.
 வடக்கு கழுவூர், விஜயநாராயணம் ஆகியவற்றில் கூழைக்கடா வகை பறவைகள் அதிகம் கூடுகட்டியுள்ளன. அவற்றுக்கு தினமும் 50 கிலோ வரை மீன்களை கொடுத்து காப்பாற்றி வருகிறோம். பறவைகள் சரணாலயம் உள்ள பகுதிகளுக்கு தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கவும், சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் மீன்குஞ்சுகளை அரசு சார்பில் அதிகம் வாங்கி விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
 நிகழாண்டில் வரத்து அதிகம்: இதுகுறித்து பறவைகள் ஆர்வலர் மதிவாணன் கூறியது: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நிகழாண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 75 பறவை சிற்றினங்களைச் சேர்ந்த 39,231 பறவைகள் பதிவாகி உள்ளன. 26,465 பறவைகள் தூத்துக்குடி மாவட்ட குளங்களிலும், 12,766 பறவைகள் திருநெல்வேலி மாவட்ட குளங்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. வாத்து இனங்களைச் சார்ந்த பறவைகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகி உள்ளன. கடம்பாகுளம், வெள்ளூர், ஆறுமுகமங்களம், கஸ்பா, தென்கரைக்குளம், பெருங்குளம் மற்றும் மேல்புதுக்குடி சுனை ஆகிய குளங்கள் அதிக எண்ணிக்கையிலான பறவைகளுக்கு வாழ்வளிக்கின்றன. இக்குளங்களை வன மற்றும் பல்லுயிர் பரவல் சட்டத்தில் உள்ள விதிகளைப் பயன்படுத்தி பறவைகள் காப்பகம் அல்லது பல்லுயிர் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கலாம்.
 திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்டங்களுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டில் 60,966 பறவைகளும், 2014 இல் 67,197 பறவைகளும் வந்திருந்தன. அந்த எண்ணிக்கை இப்போது பாதியாக குறைந்துள்ளது.
 குளங்களில் பிளாஸ்டிக், கட்டட கழிவுகளைக் கொட்டுவது பறவைகளை பெரிதும் பாதிக்கிறது. அதேபோல, பறவைகள் காப்பகங்களை மாவட்டந்தோறும் அமைத்தால், வெளிநாட்டுப் பறவைகள் சரணாலயங்களை அடையும் முன்பாக ஓய்வெடுக்கவும், இரைதேடச் செல்லும்போது இளைப்பாறவும் ஏதுவாக இருக்கும். கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்குத் தேவையான மேம்பாட்டுப் பணிகளை செய்து கொடுப்பது அவசியம் என்றார்.
 காட்சிக்கோபுரங்கள் சீரமைப்பு: திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் திருமால் கூறியது: கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த 7 சிறிய காட்சிக் கோபுரங்கள் நிகழாண்டில் சீரமைக்கப்பட்டுள்ளன. பூங்கா பராமரிக்கப்பட்டு கழிப்பறைகளுக்கு தண்ணீர் வசதிக்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
 இதுதவிர புரொஜக்டர் மூலம் பறவையினங்களின் வகைகள், சரணாலயத்தின் சிறப்பம்சம் குறித்து மாணவர்-மாணவிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டு வருகிறது. பறவைகளுக்காக நிகழாண்டில் 20 ஆயிரம் மீன்குஞ்சுகள் குளங்களில் விடப்பட்டுள்ளன. பறவைகள் கண்காணிப்பாளர்களாக 3 பேர் தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காட்சிக்கூடம், விருந்தினர் மாளிகை போன்றவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 -கோ. முத்துக்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com