கமலின் செல் நம்பர் கூட எனக்குத் தெரியாது: கட்சியிலிருந்து விலகிய குமாரவேல் பேட்டி 

ஓராண்டு அவருடன் இருந்திருந்தும் கமலின் செல் நம்பர் கூட எனக்குத் தெரியாது என்று மக்கள் நீதி மய்யம்  கட்சியிலிருந்து விலகிய குமாரவேல் தெரிவித்துள்ளார்.
கமலின் செல் நம்பர் கூட எனக்குத் தெரியாது: கட்சியிலிருந்து விலகிய குமாரவேல் பேட்டி 

சென்னை: ஓராண்டு அவருடன் இருந்திருந்தும் கமலின் செல் நம்பர் கூட எனக்குத் தெரியாது என்று மக்கள் நீதி மய்யம்  கட்சியிலிருந்து விலகிய குமாரவேல் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினரும், கடலூர் - நாகை பொறுப்பாளரான குமாரவேல் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட அதிருப்தியால் கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக திங்கள் காலை தகவல்கள் வெளியாகியது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வரும் வேளையில், தான் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக குமாரவேல் தனது முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டியிருந்தார். இதுகுறித்து விளக்கம் கேட்டு கட்சி அவருக்கு கடிதம் அனுப்பியதாகவும், அதற்கு அவரது பதில் திருப்தி தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக கட்சியிலிருந்து விலகுவதாக கடிதம் எழுதியுள்ள செயற்குழு உறுப்பினர் குமாரவேலின் ராஜிநாமாவினை  ஏற்றுக் கொள்வதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஓராண்டு அவருடன் இருந்திருந்தும் கமலின் செல் நம்பர் கூட எனக்குத் தெரியாது என்று மக்கள் நீதி மய்யம்  கட்சியிலிருந்து விலகிய குமாரவேல் தெரிவித்துள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் திங்கள் மதியம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது:

கடந்த ஓராண்டாக அவருடன் கட்சிப் பணியில் இருந்திருந்தும் கமலின் செல் நம்பர் கூட எனக்குத் தெரியாது என்பது உங்களுக்கு நகைச்சுவையாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அந்த சலுகை. மற்றவர்களுக்கு நேரடிப் பேச்சு கிடையாது.  

அவரைச் சுற்றி குறிப்பிட்ட சிலர் ஒரு அரண் போல இருக்கின்றார்கள். அவர்கள் நிறைய விஷயங்கள் அவர் காதுக்கு போகாமல் தடுக்கின்றனர்.

இங்கு மாற்று அரசியல் இருக்கும் என்று நமபி வந்தால், அப்படி எதுவும் இல்லை.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும்,  கடலூர் தொகுதியில் போட்டியிட விரும்பி கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினரான மகேந்திரனிடம் பேசிய போது தைரியமாக வேலை செயுங்கள் என்று கூறி அனுப்பினார். அதை நம்பியே கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறேன், பணிபுரிய தன்னார்வலர்கள் தேவை என்று பேஸ்புக்கில் பதிவிட்டேன். ஆனால் அது தவறு என்று கூறினார்கள்.

அதுதொடர்பாக சனிக்கிழமையன்று கமலை சந்தித்துப் பேசினேன். அவரது தலைமைக்கு எதிராக எதுவும் எண்ணவில்லை என்றும், எனது செயலால் சங்கடம் என்றால் விலகிக்  கொள்வதாகவும் தெரிவித்தேன்.

நான் வேட்பாளர் நேர்காணலில் பங்கு பெற்றேன். ஆனால் நான் பங்கு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அது தவறு.

நேர்காணலில் கோவை சரளா எல்லாம் பங்கு பெற்றது, அவர் எங்களை நேர்காணல் செய்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.   

கள நிலவரம் தெரியாமல் கமலுக்கு அவரைச் சுற்றியுள்ள ஒரு சிலர் தவறாக அறிவுரை கொடுத்து வருகின்றனர்.

கமல் ஒரே நேரத்தில் அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் பயணிக்க எண்ணுகிறார். இரட்டை குதிரை சவாரி பயன்தராது.

கமல் இன்னும் ஒரு முழு நேர அரசியல்வாதியாகவில்லை.

அவர் மட்டும் தனியாக எந்த மாற்றத்தையும் கொண்டு வந்து விட முடியாது. கூட சேர்ந்து பணியாற்ற சரியான நபர்கள் வேண்டும்.  

நான் யாருடைய தூண்டுதலிலும் இதைச் செய்ய்யவில்லை. திமுகவில் சேருவதாக இருந்தால் நான் நேரடியாக சென்று சேரலாம். எனக்கு எந்த தயக்கமும் தேவையில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com