ஒரு கோடி சாலைப் பணியாளர்கள்: திமுக தேர்தல் அறிக்கை

மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ள ஒரு கோடி இளைஞர்கள் சாலைப் பணியாளர்களாக நியமிக்கப்படுவர் என்று வாக்குறுதி
மக்களவைத் தேர்தல் அறிக்கையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
மக்களவைத் தேர்தல் அறிக்கையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.


மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ள ஒரு கோடி இளைஞர்கள் சாலைப் பணியாளர்களாக நியமிக்கப்படுவர் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 
திமுக சார்பில் வெளியிடும் தேர்தல் அறிக்கையின் மூலம்,  நேர்மை பிறழாத, நடுநிலையான நிர்வாகத்தையும், மதச்சார்பற்ற அரசையும் உருவாக்க மக்களுக்கு திமுக உறுதி அளிக்கிறது என்று அப்போது அவர் கூறினார். தேர்தல் அறிக்கை விவரம்:
மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 60 சதவீதம் மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டும்.  பாஜக அரசின் தவறான முடிவுகளால் சிதைந்துபோன  பொருளாதாரத்தை மீட்டெடுக்க பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும்.


வருமான வரி வரம்பு: வருமான வரி வரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தப்படும். மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்களுக்கு இந்த வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். ஓய்வூதியம் பெறுவோருக்கு முற்றிலுமாக வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.


தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழிலேயே செயல்படத்தக்க வகையில் இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்கத் தேவையான சட்டத்திருத்தங்கள் செய்யப்படும். உயர்த்தப்பட்ட கேபிள் டி.வி. கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


பெட்ரோலியப் பொருள்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திட நிர்வகிக்கப்பட்ட விலை முறை மீண்டும் கொண்டு வரப்படும். சமையல் எரிவாயு உருளைக்கான மானியத் தொகை வங்கிக் கணக்கில் திரும்பச் செலுத்தப்படும் முறை மாற்றப்பட்டு முன்பிருந்ததுபோல எரிவாயு உருளை விலை குறைக்கப்படும்.


 மாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடன்கள் அனைத்தையும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி, மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்படும். 


பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வரும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச ரயில் பயணச் சலுகை வழங்கப்படும். 
விவசாயக் கடன் தள்ளுபடி:  வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். சிறு, குறு விவசாயிகளின் அனைத்து வகை பயிர் கடன்களும் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும். நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடி கட்டணம் ரத்து செய்யப்படும்.வங்கிகளில் குறைந்தபட்ச தொகை வைக்காத காரணத்துக்காக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட தண்ட கட்டணத் தொகைகள் முழுவதுமாக வட்டியுடன் வாடிக்கையாளர்களுக்குத் திரும்ப அளிக்கப்படும்.


1 கோடி சாலைப் பணியாளர்கள்: தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ள ஒரு கோடி இளைஞர்கள் சாலைப் பணியாளர்களாக நியமிக்கப்படுவர். 10-ஆம் வகுப்பு வரையில் படித்த 50 லட்சம் கிராமப்புற பெண்கள் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்படுவர்.
கிராமப்புறப் பகுதியில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு, சிறு தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் வட்டியில்லாக் கடனாக வழங்கப்படும்.


நதிகள் இணைப்பு:  முல்லை பெரியாறு மற்றும் காவிரியில் புதிய அணைகள் கட்டும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படும். தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். 
சேது சமுத்திரத் திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு விரைந்து நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


7 பேர் விடுதலை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்தப்படும். மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். தொழிலாளர் ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ. 8 ஆயிரமாக நிர்ணயிக்கப்படும். தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 
நாடு முழுவதும் சமத்துவபுரங்கள்:  இந்தியா முழுவதும் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டு அவை பெரியார்- ஜோதிராவ் பூலே சமத்துவபுரம் எனப் பெயரிடப்படும். இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் தாமதமில்லாமல் இந்தியக் குடியுரிமை அளிக்கப்படும்.
சிலை கடத்தலைத் தடுக்க மத்திய அரசு தனி காவல்படை அமைக்கப்படும். அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களில் உள்ள செல்வங்களைப் பாதுகாக்க புதிய சட்டம் இயற்றப்படும்.

பொதுவான அம்சங்கள்    
அதிமுகவும் - திமுகவும் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள பொதுவான வாக்குறுதிகள்:
* மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.
* விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
* பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றப்படும்.
* நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும்.
* புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
* காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.
* மத்திய அரசின் அலுவல் மொழியாக தமிழ் மாற்றப்படும்.
* தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் வேலை நாள்கள்  உயர்த்தப்படும்.
* பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தப்படும்.
* கச்சத்தீவு மீட்கப்படும்.
* தமிழர்கள் அதிகமாக வாழும் அயல்நாடுகளில் தமிழர்களையே இந்தியத் தூதுவர்களாக நியமிக்க வலியுறுத்தப்படும்.
* கேபிள் கட்டணத்தைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com