ஏழை பெண்கள் திருமணத்துக்கு இலவச வீட்டு உபயோக பொருள்கள்: அமமுக தேர்தல் அறிக்கை

ஏழை பெண்கள் திருமணத்துக்கு அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்
மக்களவைத் தேர்தல் அறிக்கையை சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன்.
மக்களவைத் தேர்தல் அறிக்கையை சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன்.


ஏழை பெண்கள் திருமணத்துக்கு அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. மேலும், விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துக் கடன்களும் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலை ஒட்டி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை  வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்தத் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
உயர்மின் அழுத்த கோபுரங்களை அமைக்கும் திட்டம், இயற்கை வளங்களை அழித்து சாலைகள் அமைப்பது என மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டங்களையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். டெல்டா மற்றும் காவிரிப் படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாய கடன்கள் ரத்து: கூட்டுறவு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருக்கும் விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். ஏழை, நடுத்தர மக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய சிறு வணிகக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். சிறு தானிய உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு தானியத்துக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும்.
தென் மாநில நதிகளை இணைப்பதற்காக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இயற்கைச் சீற்றங்கள், நீர், மீன் வளங்கள் தொடர்பான விவரங்களைப் பெற பிரத்யேக தனி செயற்கைக் கோள் ஏவப்படும். கல்வி மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்படும். மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கென தனி நல ஆணையம் அமைக்கப்படும்.
கியாஸ் சிலிண்டருக்கு மானியம்: பொறியியல் போன்ற உயர்கல்விப் படிப்புக்காக ஏழை மாணவர்கள் வாங்கிய கல்விக் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். தனியார் நிறுவனங்களில் பணியில் சேரும் பொறியியல் பட்டதாரிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க கொள்கை முடிவு எடுக்கப்படும். கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியத் தொகையாக அளிக்கப்படும்.
6-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு  மாணவிகள் வரை அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் மோட்டல்கள் எனப்படும் உணவகங்கள் அம்மா மோட்டல் என்ற பெயரில் அமைக்கப்படும். மாற்றுத் 
திறனாளிகளுக்கென பிரத்யேக காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்படும்.
மதுபான ஆலைகள்: இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதியில்லை என்ற கொள்கை முடிவு எடுக்கப்படும். மதுபான ஆலைகளும் படிப்படியாக மூடப்படும் என்று அமமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயேச்சைகளாக களம் காணவும் தயார்: தேர்தலில் போட்டியிட உச்ச நீதிமன்றத்தின் மூலம் குக்கர் சின்னம் கிடைக்கும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.
எந்த சின்னம் கிடைக்கும்?: சின்னம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விரைவில் வரவுள்ளது. உச்ச நீதிமன்றம் எங்களுக்கு குக்கர் சின்னத்தை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி கிடைக்காவிட்டால் சுயேச்சையாக நின்று வெவ்வேறு சின்னங்களில் போட்டியிடவும் தயாராக உள்ளோம் என்றார்.

21 தொகுதிகளுக்கு தலா 6 வாக்குறுதிகள்   
மக்களவைத் தேர்தலைப் போன்று, தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் புதிய திட்டங்களை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஆறு வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் செய்தபோது பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் சந்திப்பின்போது டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com