அது பி.ஜே.பி.,  அல்ல சி.ஜே.பி: ஸ்டாலின் கூறிய புது விளக்கம்

அது பி.ஜே.பி., அல்ல சி.ஜே.பி என்று அக்கட்சியின் பெயருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் புது விளக்கம் அளித்துள்ளார். 
அது பி.ஜே.பி.,  அல்ல சி.ஜே.பி: ஸ்டாலின் கூறிய புது விளக்கம்

சிவகங்கை: ஹெச்.ராஜா ஒரு கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதி என்று சிவகங்கையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வெள்ளியன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரையும், மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.கழக வேட்பாளரையும் ஆதரித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் காங்கிரஸ் பேரியக்கத்தின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் அவர்களுக்கு நீங்கள் எல்லோரும் கை சின்னத்தில் ஆதரவு தந்து வெற்றியைத் தேடித் தர வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டில், 18 தொகுதிகளிலும் சட்டமன்றத்தின் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கின்றது, அந்த அடிப்படையில் மானாமதுரை தொகுதியில் நம்முடைய கழகத்தின் அங்கீகாரம் பெற்ற அதேசமயம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கக்கூடிய இலக்கியதாசன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து வெற்றியை தேடித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக, உங்களைத் தேடி நாடி ஆதரவு கேட்டு வந்திருக்கின்றேன். உங்களைத் தேடி ஆதரவு கேட்க வந்திருக்கின்றேன். என்று சொன்னால், தலைவர் கலைஞர் அவர்கள் இல்லாத காரணத்தினால் நான் உங்களை நாடி தேடி வந்து இருக்கின்றேன்.

“மானம் காத்த மருது பாண்டியர்கள் மண்ணிற்கு” நான் வந்திருக்கின்றேன். சிவகங்கைச் சீமைக்கு வந்திருக்கின்றேன். மானம் காத்தவர்கள் மருது பாண்டியர்கள் என்று சொன்னால், அப்படி மானம் காத்த மருது பாண்டியர்களின் வாரிசுகளாகிய நீங்கள் தமிழ்நாட்டின் மானத்தைக் காப்பாற்ற, இந்தியாவின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்.

நம்முடைய மதிப்பிற்குரிய ப.சிதம்பரம் அவர்களின் மகன் என்று நாம் சொல்லலாம். ஆனால், சிலர் வாரிசு அரசியல் என்று வெளியில் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நான் அவர்களுக்கெல்லாம் ஒரே வரியில் பதில் சொல்ல வேண்டும் என்று சொன்னால், வாரிசு அடிப்படையில் அல்ல தகுதியின் அடிப்படையில் தான் அவர் இன்றைக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கின்றார்.

நீங்கள் வேறொன்றையும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை, அவரை எதிர்த்து நிற்கக்கூடிய வேட்பாளர் யார் என்பது உங்களுக்குத் தெரியும் புரியும். அவருடைய வண்டவாளங்கள் அத்தனையும் நன்றாக அறிந்து வைத்திருக்கக் கூடியவர்கள் நீங்கள். எச்.ராஜா அவர்கள் ஆளுங்கட்சியின் துணையோடு பி.ஜே.பி-யின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கின்றார். என்னைப் பொறுத்தவரையில் ஒரு எதிர்க்கட்சியின் வேட்பாளராக நான் அவரைப் பார்க்கவில்லை, தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே இதுபோன்று ஒரு கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதியை நாம் இதுவரையில் பார்த்திருக்க முடியாது, இனிமேலும் பார்க்கவும் முடியாது. அதற்கு ஒரு உதாரணமாக இருக்கக்கூடியவரை தான் தேர்ந்தெடுத்து இன்றைக்கு நம்மை எதிர்க்கிற வேட்பாளராக நிறுத்தி வைத்திருக்கின்றார்கள்.

நான் எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்று சொன்னால், தமிழ் சமுதாயத்தின் நல்லிணக்கத்தை, நிம்மதியை கெடுக்கக்கூடிய வகையில் பேசுவது, வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறுவது, கலவரத்தை நடத்துவதற்கு தூண்டுவது, கலவரத்தை நடத்துவது, பொய்களே பேசிக் கொண்டிருப்பது, அவதூறு மட்டும் பேசிக் கொண்டிருப்பது தான் எச்.ராஜாவின் தொழிலாகவே இருந்து கொண்டிருக்கின்றது.

பாரதிய ஜனதா கட்சியில் இருக்கக்கூடிய அனைவரையும் நான் சொல்ல மாட்டேன், அவர்களுடைய கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அவர்கள் சொல்வதை நாங்கள் விமர்சிக்கலாம், அதுபோல் நாங்கள் சொல்வதை அவர்கள் விமர்சிக்கலாம், அது வேறு. அது அரசியல் பண்பாடு. அரசியல் ரீதியாக - தத்துவ ரீதியாக - கொள்கை ரீதியாக - விமர்சிப்பது என்பது ஜனநாயகத்தின் உரிமை. ஆனால், கொச்சைப்படுத்தி கலவரம் தூண்டுவதில், அசிங்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருக்கக்கூடியவர்தான் எச்.ராஜா அவர்கள்.

நான் கேட்க விரும்புவது, இப்படிப்பட்ட ஒருவர் நாடாளுமன்றத்திற்கு போனால், அது நாடாளுமன்றத்துக்கே அவமானம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. நாடாளுமன்றத்திற்குச் சென்றும் இதுபோன்ற நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டுக் கொண்டிருப்பார் என்று சொன்னால், அங்கு இருக்கக்கூடியவர்கள் என்ன சொல்வார்கள்? இவர் எந்த தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார்? என்ற ஒரு கேள்வி வருகின்ற பொழுது, சிவகங்கை தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார் என்று சொன்னால், இந்த சிவகங்கை தொகுதியில் இருக்கக்கூடிய உங்களுக்கு ஏற்படக்கூடிய அவமானம் என்பதை தயவு செய்து நீங்கள் மறந்துவிடக் கூடாது.

தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தி பேசுகின்ற, ஏன், தந்தை பெரியாரின் சிலைகள் அனைத்தையும் உடைப்பேன் என்று சொல்லுகின்ற, அறிஞர் அண்ணாவை கொச்சைப்படுத்தி பேசுகின்ற நம்முடைய திராவிட இயக்கத்தை இழிவுபடுத்தி பேசுகின்ற எச்.ராஜாவிற்கு, இந்தத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய பாடத்தை நீங்கள் புகட்டிட வேண்டும். புகட்டிட நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா?

இந்தத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நான் பல செய்திகளைச் சொல்வதற்கு முன்னால், முதலில் திரு சுப்பிரமணிய சுவாமி அவர்கள் சொன்னதையே, இங்கு உங்களிடத்தில் சுட்டிக்காட்டி வாக்கு கேட்க விரும்புகின்றேன். இந்த நேரத்தில் இது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன், சுப்பிரமணிய சாமி யார் என்பதும் உங்களுக்கு தெரியும், அவரும் பி.ஜே.பி கட்சியைச் சார்ந்தவர் தான். நம்மைக் கண்டால் அவருக்கு சுத்தமாக பிடிக்காது, அவரும் எல்லோரையும் விமர்சித்து வாய்க்கு வந்தபடி பேசக்கூடியவர் தான். ஏதேனும் ஒரு கருத்தை அவர் எடுத்துச் சொன்னால், அவர் சொன்ன கருத்திற்கும், பி.ஜே.பி-க்கும் சம்பந்தம் இல்லை என்று அந்தக் கட்சியில் இருக்கக்கூடியவர்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம் வாடிக்கை. அந்த நிலையில் இருக்கக்கூடிய சுப்பிரமணிய சுவாமி அவர்கள் அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கின்றார். இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி விட்டது, மோடி முன்னேற்றி விட்டார் என்று சொல்லி வாக்குகளை கேட்கின்றீர்களே? மோடிக்கும் அருண்ஜெட்லி க்கும் பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது. சில நாட்களுக்கு முன்பு சு.சுவாமி டெல்லியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி தந்திருக்கின்றார். அவர் பேட்டியாக சொன்ன வார்த்தைகள் இவை. எனவே பிரதமராக இருக்கக்கூடிய மோடிக்கு, பொருளாதாரம் தெரியவில்லை என்று நாம் சொல்லவில்லை, சுப்பிரமணிய சுவாமி சொல்லுகின்றார்.

சில நாட்களுக்கு முன்னால் ஆங்கில நாளேட்டில் சுப்பிரமணிய சுவாமி அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதை இந்து தமிழ் நாளேட்டில் கடந்த 27-11-2018 அன்று தமிழாக்கம் செய்து வெளியிட்டு இருந்தார்கள். அந்தக் கட்டுரையில் அவர் என்ன குறிப்பிடுகின்றார் என்று சொன்னால், இந்திய பொருளாதாரம் தீவிரமான நெருக்கடியை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது, ஜிடிபி அடிப்படையிலான வளர்ச்சி விகிதம் குறைந்து வருகின்றது, அரசு வங்கிகளில் வாராக் கடன் அளவு வளர்ந்துவிட்டது. என்று சுப்பிரமணிய சுவாமி அந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கின்றார்.

அதைத்தொடர்ந்து இன்னொரு கருத்தையும் சொல்லுகின்றார். மோடி சொன்ன மேக் இன் இந்தியா திட்டம் பற்றி சுப்பிரமணிய சுவாமி என்ன சொல்கிறார் என்றால், மேக் இன் இந்தியா கொள்கை வெற்றிபெற அடிப்படை தள கட்டமைப்பிற்கு மட்டும் 72 இலட்சம் கோடி ரூபாய் பணம் தேவை. ஆனால் இப்பொழுது முதலீடு செய்யப்பட்ட தொகையின் மதிப்பு 2014ஆம் ஆண்டைவிட குறைவானது என்று சுப்பிரமணிய சுவாமி ஆதாரத்தோடு குறிப்பிடுகின்றார். இதெல்லாம் நாங்கள் கண்டுபிடித்தது, நாங்கள் சொல்வது அல்ல, பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார சீரழிவிற்கு சுப்பிரமணிய சுவாமி கொடுத்திருக்கக்கூடிய சாட்சியங்கள்.

அப்படியானால் இந்த ஐந்து வருடத்தில் அவர் என்ன செய்தார்? அவர் செய்தது யாருக்கு என்றால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு. இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய விவசாயிகளுக்கு ஏதாவது செய்து இருக்கின்றாரா? விவசாயத்தை நம்பி இருக்கக்கூடிய நாடு இந்தியா. அதை நம்பித்தான் 60 சதவிகிதத்திற்கு மேல் விவசாயப் பெருங்குடி மக்கள் கிராமத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அதைத்தான், நாம் இப்பொழுதும் நம்முடைய தேர்தல் அறிக்கையில் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருக்கின்றோம். அந்த அறிவிப்பைப் பார்த்து விட்டு, மத்திய அமைச்சராக இருக்கக்கூடிய மதிப்பிற்குரிய பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள், உடனே ஒரு செய்தியை வெளியிட்டார். என்னவென்றால் விவசாயக் கடனை ரத்து செய்ய முடியாது ஏமாற்றுகின்றார்கள் என்று தவறான தகவலை மக்களிடத்தில் சொல்லிக் கொண்டே இருக்கின்றார். அவருக்கு பதில் அளிக்கும் விதமாக தான் நம்முடைய வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் அவர்கள் இங்கு பேசியிருக்கின்றார். மத்திய பிரதேசத்தில் அண்மையில் தேர்தல் முடிந்து காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்று இருக்கின்றது, ராஜஸ்தான் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் பொறுப்பேற்று இருக்கின்றது. அதற்கு முன்பு அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி அவர்கள் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றதும் பத்தே நாட்களில் விவசாய கடன்களை ரத்து செய்வோம் என்று சொன்னார். நான் இங்கு பெருமையோடு குறிப்பிட விரும்புகின்றேன், பத்து நாட்கள் அல்ல ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டே நாட்களில் விவசாய கடன்கள் அத்துணையும் அந்த மூன்று மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டது. இது பொன் ராதாகிருஷ்ணனுக்கு தெரிய வாய்ப்பில்லை. பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் கார்ப்ரேட் கம்பெனிகள் கேட்டால் கடன்களை தள்ளுபடி செய்வார். கேட்டால் மட்டுமல்ல கேட்காமலேயே தள்ளுபடி செய்வார். எனவே இனிமேல் பி.ஜே.பி-யை பாரதிய ஜனதா கட்சி என்று சொல்லாதீர்கள் அது கார்ப்பரேட் ஜனதா கட்சி என்று சொல்லுங்கள்.

இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்று சொன்னால் பி.ஜே.பி - அல்ல சி.ஜே.பி.

எனவே, மத்தியில் ஒரு சர்வாதிகாரியாக மோடி இருந்துகொண்டிருக்கிறார். தமிழகத்தில் ஒரு உதவாக்கரை எடப்பாடி பழனிசாமி அவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார். மக்களைப்பற்றி கவலைப்படுவதில்லை, எதைப்பற்றியும் சிந்திப்பதில்லை. எனது ஆட்சியில் மக்கள் எப்பொழுதும் போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று பெருமையோடு சொல்லிக்கொண்டிருக்கின்றார். எந்தப் பிரச்சினைகளையும் தீர்க்கமுடியாத காரணத்தினால்தான் இன்றைக்கு போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்துகொண்டிருக்கின்றது.

நான் கேட்கின்றேன், ஏற்கனவே சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கின்ற போது நானும் இங்கு இருக்கக்கூடிய திரு ராமசாமி அவர்களும் கவன ஈர்ப்பு கொண்டுவந்து பேசினோம். அருகில் இருக்கக்கூடிய விருதுநகர் மாவட்டத்தில் எச்.ஐ.வி ரத்தத்தை கர்ப்பிணிப் பெண்ணிற்கு செலுத்தியது தொடர்பாக நாங்கள் விவாதத்தில் ஈடுபட்டு அதன்பிறகு அது செய்திகளில் வெளிவந்ததா இல்லையா? அதேநிலை தற்பொழுது இரண்டு நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.

என்னவென்றால், அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் கெட்டுப்போன இரத்தம் செலுத்தியதன் காரணத்தினால் 15 கர்ப்பிணிப் பெண்கள் இறந்து போயிருக்கிறார்கள் என்று டைம்ஸ் ஆப் இந்தியா என்ற நாளிதழ் முதல் பக்கத்தில் வேதனையோடு வெளியிட்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் கவனிக்க வேண்டியது யார்? முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய குட்கா விஜயபாஸ்கர் அவர்கள்.

குட்கா விஜயபாஸ்கர் தற்பொழுது இந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு வருகின்றார். அப்படி வருகின்ற காரணத்தினால் எடப்பாடியிடம் சபதம் செய்து கொண்டு வந்து இருக்கின்றாராம், இந்தத் தொகுதியை நான் வெற்றி பெற வைக்கின்றேன் என்று. இந்த சபதத்தை மருத்துவமனைகளை சீர்படுத்துகிறேன் என்று சொல்லி சபதம் போட வக்கில்லை! சூடு இல்லை! சொரணை இல்லை! மருத்துவமனைகளில் இந்த கொடுமை நடந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னால் ஏழை எளியவர்கள் நடுத்தர குடும்பத்தில் பிறந்து இருக்கக்கூடியவர்கள் எங்கு செல்வார்கள்?

எனவே, இதை நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். எனவே எதிர்க்கட்சியில் நிற்கக்கூடிய எச்.ராஜா அவர்களும் அதற்குத் துணையாக விஜயபாஸ்கர் அவர்களும் வோட்டு கேட்கின்ற வருகின்ற பொழுது உங்களுக்கு நினைவுக்கு வர வேண்டியது குட்கா ஊழல் உங்களின் கவனத்திற்கு வர வேண்டும் மறந்து விடக்கூடாது.

மாநிலத்தைப் பொறுத்தவரையில், தற்போது எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூட்டமில்லாத இடத்தில் பிரச்சாரத்தை செய்துகொண்டிருக்கின்றார். இப்பொழுது சட்டம் - ஒழுங்கு சீராக இருக்கின்றது என்கிறார். கடந்த 7 வருடமாக பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். காவல்துறை என்ற ஒன்று இல்லையா? உளவுத்துறை என்ற ஒன்று இல்லையா? அரசாங்கம் என்ற ஒன்று இருக்கின்றதா இல்லையா? பகிரங்கமாக சொல்லுகின்றேன், பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களின் இரண்டு மகன்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள், குற்றவாளிகள் மீது இப்பொழுதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றீர்கள்.

அதைத் தொடர்ந்து கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகியிருப்பதாக மருத்துவ ஆய்வறிக்கை சொல்லுகின்றது. இதுதான் நீங்கள் ஆட்சி நடத்தும் இலட்சணமா?

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com