15 மாதங்கள் மட்டுமே முழு ஊதியம் பெற்ற 18 எம்.எல்.ஏ.க்கள்

தமிழக சட்டப் பேரவையில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே முழுமையான ஊதியத்தைப் பெற்றுள்ளனர்.
15 மாதங்கள் மட்டுமே முழு ஊதியம் பெற்ற 18 எம்.எல்.ஏ.க்கள்

தமிழக சட்டப் பேரவையில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே முழுமையான ஊதியத்தைப் பெற்றுள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து அவர்கள் ஓய்வூதியம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக அதிமுகவைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து அவர்கள் மீது பேரவைத் தலைவர் பி.தனபால் நடவடிக்கை எடுத்தார். அதன்படி, தங்க தமிழ்ச்செல்வன், வி.செந்தில்பாலாஜி உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
அன்றைய தேதியில் இருந்து அவர்கள் முழுமையான ஊதியம் பெறும் தகுதியையும் இழந்தனர். தகுதி நீக்கத்தை எதிர்த்து அவர்கள் நீதிமன்றம் சென்றதைத் தொடர்ந்து, ஓய்வூதியம் அளிப்பதற்கான நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் உள்பட காலியாக இருந்த 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளனர்.
17 பேரில் யாரும் இல்லை: தகுதி நீக்க நடவடிக்கைக்கு உள்ளான எம்.எல்.ஏ.க்களில் வி.செந்தில் பாலாஜி மட்டுமே திமுகவில் இணைந்து அரவக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார். மீதமுள்ள 17 பேரில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதனால், அவர்கள் அனைவரும் மிகக் குறுகிய காலத்திலேயே பதவியை இழந்து, ஓய்வூதியம் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, பேரவைச் செயலக அதிகாரிகள் கூறியது:-
கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்தே அவர்கள் முழு ஊதியம் பெறும் தகுதியை இழந்து விட்டனர். நீதிமன்றம் சென்றதன் காரணமாக ஓய்வூதியம் அளிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படாமல் இருந்தன. இப்போது புதிய உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளதால், 17 எம்.எல்.ஏ.க்களுக்கும் ஓய்வூதியம் அளிக்கப்படும். கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து ஓய்வூதிய நிலுவைத் தொகைகள் அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
எவ்வளவு ஊதியம்-படிகள்?:  சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு, மாத ஊதியமாக ரூ.30 ஆயிரம் அளிக்கப்படும். இதனுடன், வாகனப்படி, தொகுதிப் படியாக தலா ரூ.25 ஆயிரமும், ஈட்டுப்படியாக ரூ.10 ஆயிரமும், தொகுப்புப் படியாக ரூ.5 ஆயிரமும், தொலைபேசிப் படியாக ரூ.7,500-ம், அஞ்சல் படியாக ரூ.2,500-ம் அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக மாதத்துக்கு ரூ.1.05 லட்சம் கிடைக்கும்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியமாக மாதத்துக்கு ரூ.20 ஆயிரம் கிடைக்கும். அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். ஒவ்வொரு நிதியாண்டிலும் மருத்துவப் படியாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். மேலும், இலவசமாக பேருந்து பயணச் சீட்டு அளிக்கப்படும். அரசுப் பேருந்து எதில் வேண்டுமானாலும் ஒரு துணையுடன் இலவசமாகப் பயணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com