வாரிசுகளுக்கு சல்யூட்  அடிக்கும் அப்பாக்கள்!

எந்தப் பெற்றோருக்கும்  ஒரு சேர மகிழ்ச்சியைத்  தரும் விஷயம் என்னவாக இருக்கும் ?  
வாரிசுகளுக்கு சல்யூட்  அடிக்கும் அப்பாக்கள்!

எந்தப் பெற்றோருக்கும்  ஒரு சேர மகிழ்ச்சியைத்  தரும் விஷயம் என்னவாக இருக்கும் ?  
பெற்ற மகனோ,  மகளோ தங்களை விட  உயர்ந்த ஸ்தானத்தில் அமரும்போது பெற்றோர் பூரித்துப் போவார்கள். ""கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்... பெயர் சொல்லும் பிள்ளைகளை பெற்றிருக்கிறீர்களே..''  என்று பாராட்டுகள் வந்து சேரும்.  
வாரிசுகள் பெற்றோர்களை விட  உயர்ந்த பதவியில்  அமர்வது இன்றைய காலகட்டத்தில் சகஜமாக  நடக்கிற  விஷயம்தான்..! ஆனால்  ஒரே அலுவலகத்தில்  மகனோ.. அல்லது மகளோ  அப்பாவுக்கு  உயர் அதிகாரியாக வந்துவிட்டால்... என்ன  நடக்கும் ?  
நெருடலான  சம்பவங்கள்  நடக்கலாம். அதையும் தாண்டி   நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடக்கும். 
லக்னோ   நகரில்   விபூதிகண்ட்  பகுதி காவல் நிலையத்தில் காவலராகப் பணி   புரிந்து வருபவர்  ஜனார்தன் சிங். வடக்கு லக்னோ பகுதிக்கு மேலதிகாரியாகப் பதவி ஏற்றிருப்பவர் அனூப் குமார் சிங். ஐபிஎஸ் அதிகாரி. அனூப்  காவல் நிலையத்திற்கு வரும் போதெல்லாம்   சாதாரண  காவலராக  பணிபுரியும் ஜனார்தன்  எழுந்து நின்று  விறைப்பாக நின்று  சல்யூட்  அடிப்பார்.  சக காவலர்கள்  தூரத்தில் நின்று இந்தக் காட்சியை  வியப்பாகப் பார்ப்பார்கள். காரணம்  அனூப்,  ஜனார்தனின் மகன். 
அனூப் 2014-இல் ஐபிஎஸ் அதிகாரியானார். ""அப்பா என்னையும், தங்கையையும் சைக்கிளில்  கொண்டு போய் பள்ளியில் விடுவார்.  குறைந்த சம்பளம். நாங்கள் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக   செலவுகளைக் குறைத்து  சிக்கனமாக குடும்பத்தை நடத்தி வந்தவர்.   பணி காரணமாக  பல தருணங்களில்  அவர்  வெளியூர் சென்று விடுவார்..'' என்கிறார் அனூப். ஐபிஎஸ் அதிகாரியாக அனூப்,  அப்பா  வேலை செய்யும் பகுதிக்கே வருவார் என்று அனூப், ஜனார்தன் உட்பட யாரும்  நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் அது நடந்தே விட்டது.
உயர் அதிகாரியான  மகனுக்கு கீழ்  வேலை செய்வது.. குறிப்பாக  எழுந்து நின்று சல்யூட் அடிப்பது...  குறித்து ஜனார்தன் என்ன சொல்கிறார்?
""நாங்கள் வீட்டில்  அப்பா மகன். காவல் நிலையத்திற்கு வந்தால்  மகன் அனூப் எனக்கு மேலதிகாரி. மேலதிகாரிக்கு சல்யூட் செய்வதுதானே  அலுவலக விதி. அதைத்தான் செய்கிறேன். மகனுக்கு சல்யூட் அடிப்பதில் எனக்கு  எந்தவித தயக்கமோ  தர்மசங்கடமோ இல்லை.. காவல்நிலையத்தில் பந்த பாசத்திற்கு முக்கியத்துவம் இல்லை... கடமைதான் முக்கியம். காவலராக எனது  வேலை, கடமையைச் செய்கிறேன்.. அவ்வளவுதான்..''  என்கிறார் ஜனார்தன்.  
ஹைதராபாத்  நகரில்  துணை காவல் மேலாளராகப் பணி புரிபவர் உமாமகேஸ்வர சர்மா.  துணை ஆய்வாளராக இருந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்றவர். அதே அலுவலக  வளாகத்தில் காவல்துறை உயர் மேலாளராகப் பணிபுரிபவர் சிந்து சர்மா. ஐபிஎஸ் அதிகாரி. உமாமகேஸ்வர சர்மாவின் மகள். சிந்து  அப்பாவைவிட  உயர்ந்த பதவியில் இருப்பவர். சிந்துவைக்  காணும் போதெல்லாம் உமாமகேஸ்வர சர்மா  விறைப்பாக நின்று சல்யூட் அடிப்பார்.  
""சிந்து எனது மேலதிகாரி. சிந்துவைப்  பார்க்கும் போது  சல்யூட் அடிப்பேன். வீட்டிற்கு வந்தால்  நான் அப்பா. சிந்து மகளாகிவிடுவார். காவல் நிலைய விஷயங்களை  வீட்டில்  அலசுவதில்லை.  வீட்டில் ஒருவருக்குத்தான் தலைமைப் பொறுப்பு. அந்தப்  பொறுப்பை  ஏற்றிருப்பவர்  மனைவி, வீட்டில் இம்மி அசைந்தாலும்  மனைவியின் அனுமதியுடன்தான் அசையும்..'' என்கிறார் உமாமகேஸ்வர சர்மா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com